2012-12-17 15:52:52

வாரம் ஓர் அலசல் - கடவுளைக் கண்டிருக்கிறாயா?


டிச.17,2012 RealAudioMP3 கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வருவதால் தலைமுடியை வெட்டி தாடியையும் அழகாக வைத்துக் கொள்வதற்காக ஒருவர் முடிதிருத்தம் செய்யும் கடைக்குச் சென்றார். கடைக்காரர் முடிதிருத்தம் செய்து கொண்டிருந்தபோது இருவரும் பல உலக நடப்புகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். கடவுள் பற்றிய பேச்சும் வந்தது. அப்போது அந்தக் கடைக்காரர், “என்னவோங்க, எனக்குக் கடவுள் இருக்கிறார் என்பதில் நம்பிக்கையே இல்லை. இந்த நகரத்தை ஒரு நாளைக்கு ஒருமுறை நீங்கள் சுற்றி வந்தால் இப்படி நான் சொல்வது உங்களுக்கும் புரியும். எத்தனை கொலைகள், கொள்ளைகள். பசிபட்டினிகள். மாடுகளோடும் பன்றிகளோடும் சேர்ந்து உணவு உண்ணும் மனிதர்கள். ஏன் சார், பச்சிளங்குழந்தைகள் என்ன பாவம் செய்தாங்க, அவுங்களை ஏன் அநியாயமாய்க் கொல்றாங்க. கடவுள் என்று ஒருவர் இருந்தால் இவ்வளவு துன்பங்கள் இருக்குமா? இத்தனை அப்பாவி மக்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவிப்பார்களா..?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தார். முடிதிருத்தம் செய்யச் சென்றவர் வாதாட விரும்பாததால் எந்தப் பதிலும் சொல்லவில்லை. சென்றவேலை முடிந்ததும் பணத்தைக் கொடுத்துவிட்டு நன்றி சொல்லி விடைபெற்றார். அவர் வெளியே வந்ததும் அந்தப் பக்கமாக ஒரு மனிதர் சடைபிடித்த அழுக்கு முடியுடன், சவரம் செய்யப்படாத அழுக்குத் தாடியுடன் சென்று கொண்டிருந்தார். அருவருப்பான தோற்றத்துடன் காணப்பட்டார். முடிதிருத்தம் செய்யச் சென்றவர் உடனே அந்தக் கடைக்குள் சென்று, கடைக்காரரிடம், “இங்க பாருங்க சார், உங்களுக்கு ஒன்று தெரியுமா, முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர்களே இல்லை” என்றார். “எப்படி நீங்க இப்படிச் சொல்லலாம், நான் இருக்கிறேன், நீங்க இப்பத்தான் எனது கடையிலிருந்து போனீர்கள்” என்று ஆச்சரியத்துடன் சொன்னார் கடைக்காரர். “இல்லை சார், முடிதிருத்தம் செய்யும் கடைக்காரர்கள் இருந்தால், இந்தத் தெருவில் முடிவெட்டாமல், அழுக்குத்தாடியுடன் சென்று கொண்டிருக்கும் மனிதர்கள் இருக்கவே மாட்டார்கள்” என்றார் அவர். அதற்கு அந்தக் கடைக்காரர், “இல்லவே இல்லை, முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். என்னிடம் முடிதிருத்தம் செய்துகொள்ள வரவில்லையென்றால் இத்தகைய மனிதர்களைத் தெருவில் பார்க்கத்தான் முடியும்” என்றார் அந்தக் கடைக்காரர். அப்போது அவர், அந்தக் கடைக்காரரிடம், “அது.... சரியாகச் சொன்னீர்கள், கடவுளும் இருக்கிறார். மக்கள் அவரிடம் போகாதபோதும், அவரிடம் உதவி கேட்காதபோதும் நடப்பது இதுதான்” என்றார்.
இந்த உலகில் துன்பங்கள் இல்லாமல் நாள்கள் முடிவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு வகையான துன்பங்கள். கருவில் வளரும் குழந்தை முதல் கல்லறைக்குச் செல்லும் மனிதர்வரை ஏதாவது ஒருவகையில் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூடவுன் என்ற இடத்திலுள்ள சாண்டி ஹூக் துவக்கப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இருபது குழந்தைகள் இயந்திரத் துப்பாக்கிகளுக்குப் பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆறு மற்றும் ஏழு வயதுச் சிறார்கள். 20 வயதான Adam Lanza என்ற இளைஞன், முதலில் வீட்டில் தனது தாயைச் சுட்டுக் கொன்றுவிட்டு அந்தப் பள்ளிக்குச் சென்று இந்த வன்முறையை நடத்தியிருக்கிறான். இந்த இளைஞனுக்கு இந்த வயதில் ஏற்பட்ட பிரச்சனை என்ன?, அவன் இந்தப் படுபாதகச் செயலை செய்யக் காரணம் என்ன? இதற்கான காரணங்கள் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில் அவனும் உயிரோடு இல்லை. இந்த வன்முறை பற்றிக் கேட்டு உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இது நினைத்துப் பார்க்கவே முடியாத வன்செயல் என்று ஐ.நா.பொதுச் செயலர் வருத்தம் தெரிவித்திருந்தார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், "கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த இந்த அறிவற்ற, கொடூரச் செயல் குறித்து தான் ஆழ்ந்த வருத்தம் அடைந்திருப்பதாக” இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் தெரிவித்தார். அதற்கு முன்னரும் அனுதாபத் தந்திச் செய்தியும் அவர் அனுப்பியிருந்தார்.
இதே அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒவ்வொரு 23 வினாடிகளுக்கு ஒரு குழந்தை வீதமும், ஒவ்வொரு நாளும் 3,200 குழந்தைகள் வீதமும் கருக்கலைப்பால் கொல்லப்படுகின்றன. இந்நாட்டில் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் 52 விழுக்காட்டினர் 25 வயதுக்கும் உட்பட்டவர்கள். உலக அளவில் ஒவ்வொரு 24 வினாடிகளுக்கு ஒரு குழந்தை வீதம் கருவிலே கொல்லப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 2 கோடியே 40 இலட்சம் பெண்கள் சட்டப்படியும், மேலும் 2 கோடிப் பெண்கள் சட்டத்துக்குப் புறம்பேயும் கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர். இவ்வாறு குழந்தையின் துன்பம் தாயின் கருவறையிலே தொடங்கி விடுகின்றது. ஏமன் நாட்டில் Hind Al-Barti என்ற 15 வயதுச் சிறுமி, இம்மாதம் 3ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அந்நாட்டில் இன்னும் 21 இளம் குற்றவாளிகள், மரணதண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று, சிறார் உரிமைகள் குறித்த ஐ.நா. குழு கூறியுள்ளது. இந்த மரணதண்டனைகள் குறித்து, ஐ.நா. வானொலியில் பேசிய, இந்தக்குழுவின் தலைவர் Jean Zermatten, ஏமன் நாட்டின் இச்செயல், சிறார் உரிமைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தத்தையும், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றமாட்டோம் என்ற ஏமனின் அர்ப்பணத்தையும் கடுமையாய் மீறுவதாகும் என்று சொல்லியுள்ளார்.
UNODC என்ற போதைப்பொருள் மற்றும் குற்றம் குறித்த ஐ.நா. அலுவலகம், “மனித வியாபாரம் 2012” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, 2007க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் மனித வியாபாரத்துக்குப் பலியானவர்களில் 27 விழுக்காட்டினர் சிறார். 2006ம் ஆண்டில் 7 விழுக்காடாக இருந்த இவ்வெண்ணிக்கை, தற்போது அதிகரித்துள்ளது. இவ்வாறு வியாபாரம் செய்யப்படும் சிறாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் சிறுமிகள் என்றும் தெரியவந்துள்ளது. 132 நாடுகளில் எடுத்த இந்த ஆய்வறிக்கை பற்றிப் பேசிய UNODC அலுவலகத்தின் செயல்திட்ட இயக்குனர் Yury Fedotov, குற்றவியல் நீதித்துறையும், குடியேற்றதாரர் கொள்கையும், தொழில் சந்தைகளின் விதிமுறைகளும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று கூறினார். பிலிப்பீன்சின் தென் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற Bopha என்ற கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள சிறார் மனித வியாபாரத்துக்குப் பலியாகும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று, ஐ.நா.வின் சிறார் நிறுவனமான யுனிசெப் அச்சத்தை வெளியிட்டுள்ளது. யுனிசெப்பின் Marixie Mercado சொல்கிறார் : “வயதுவந்தோர் இந்தச் சிறாரின் இயலாமையைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும்” என்று.
இந்தியாவில் திருமணமான பெண்களில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதியினர் வீடுகளில் வன்முறைக்குப் பலியாகின்றனர். 15க்கும் 49 வயதுக்கும் உட்பட்ட திருமணமான பெண்களில் ஏறக்குறைய 70 விழுக்காட்டினர் வீடுகளில் அடிக்கப்படுகின்றனர் மற்றும் பாலியல் வன்செயலுக்கு உள்ளாகின்றனர். நகரங்களில் வாழும் பெண்களில் 55 விழுக்காட்டுக்கு அதிகமானோர் வீடுகளில் வன்முறைக்குப் பலியாகின்றனர் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. சீனாவின் Jiangsu மாநிலத்திலுள்ள Guanyun பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், நூறு வயதான தனது தாயை, பன்றிகள் வளர்க்கும் அசிங்கமான இடத்தில் வைத்து பராமரித்து வந்துள்ளார். இக்கொடூரத்தை, உள்ளூர்த் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கடந்த வாரத்தில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. எனவே சிறுவயதிலே தொடரும் துன்பம் எல்லாப் பருவத்தினரையும் தாக்குகின்றது. இவ்வாறு துன்பம் துரத்தும்போது கடவுளின் இருப்பு பற்றிய கேள்வியும் வலுவடைகின்றது. கடவுளின் இருப்பை அறிவதற்குப் பலர் சான்றுகளைத் தேடி அலைகின்றனர். இப்படித்தான் ஓர் இராணுவ அதிகாரியும் இருந்தார். கடவுள் பற்றி யாராவது பேசினால் நக்கலாகச் சிரிப்பார். அவரது படைப் பிரிவில் இருந்த ஒரு வீரருக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். ஞாயிறு திருப்பலிக்குத் தவறாமல் செல்லும் இந்த வீரருக்குப் பாடம் புகட்ட விரும்பினார் அந்த இராணுவ அதிகாரி. ஒரு நாள் அந்த வீரரிடம், நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு நீ பதில் சொல்ல வேண்டும் என்று தனது தேர்வைத் துவக்கினார். ஒரு மரத்தைக் காட்டு என்றதும் அருகிலிருந்த மரத்தைக் காட்டினார் படைவீரர். பின்னர் ஒரு நாயைக் காட்டு என்றதும், அதையும் காட்டினார். பின்னர் கடவுளைக் காட்டு என்றதும், சிறிது நேரம் மௌனமாக இருந்த படைவீரர் அந்த இராணுவ அதிகாரியிடம் நானும் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றார். அவர் கேள் என்றார். சரி, உங்களது கையைக் காட்டுங்கள் என்றதும் கையைக் காட்டினார் அதிகாரி. அடுத்து உள்ளங்கையைக் காட்டச் சொன்னார். அதையும் காட்டினார் அதிகாரி. அடுத்து அவரது மூளையைக் காட்டச் சொன்னார். அதிர்ச்சியுற்றார் அதிகாரி. பின்னர் அந்தப் படைவீரரின் கடவுள் நம்பிக்கை பற்றி அவர் கேள்வி கேட்கவே இல்லை.
அன்பு நேயர்களே, அந்த முடிதிருத்தக் கடைக்காரர், இந்த இராணுவ அதிகாரி ஆகிய இவர்கள் போல, நம்மில் சிலரோ அல்லது பலரோ இருக்கலாம். நாம் ஒவ்வொருவரும் நமது கண்ணோட்டத்தின்படியே கடவுளை நோக்குகின்றோம். இந்நேரத்தில் இருளுக்கும் ஒளிக்கும் இடையே நடந்த உரையாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒளி சுடர் விட்டுக்கொண்டிருந்தது. சற்று தூரத்தில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த இருள், ‘‘ஒளியே! உன்னால் என்ன பயன்?’ என்று ஒளியை வம்புக்கு இழுத்தது. ‘‘எனக்குத்தான் மனிதர்கள் அதிகம் பயப்படுகிறார்கள். என் ஆட்சியில்தான் அக்கிரமங்கள் அதிகம் ஆக்கிரமிக்கும். மறைவாய்ச் செய்வதையே பலர் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் உத்தமர்போல் நடிப்பார்கள். எல்லாம் இருளில் நடக்கும். வெளிச்சத்துக்கு அவர்கள் வர விரும்புவதில்லை. வெளிப்படையாகப் பேசும் எவரையும் யாரும் விரும்புவதில்லை. இருளில் பதுங்குபவர்கள் எத்தனை பேர் தெரியுமா?’’ என்று தொடர்ந்து அகம்பாவமாகப் பேசியது. அப்போது அமைதியாகச் சொன்னது ஒளி : ‘‘இருளே! நான் வந்தாலே நீ இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அழிப்பதில், கெடுப்பதில், நீ இவ்வளவு ஆனந்தம் கொள்கிறாயே... உன்னில் ஏதாவது புத்தம் புதிய ஒன்றை ஆக்க முடியுமா? எரியும் சுடரை உற்றுப்பார்! அந்த சுடருக்குள்ளே, ஒரு சின்ன இருட்டு ஒளிந்திருக்கும். ஒளிக்குள்ளே சின்ன இருட்டு உண்டு, ஆனால் இருளுக்குள்ளே சின்ன ஒளி என்று ஏதுமில்லையே! இதுதான் என் விளையாட்டு’’ என்று.
அன்பர்களே, நாமும் இந்த இருள்போல் அல்லாமல் ஒளியாக இருப்போம். இறைமகன் இயேசு சிறு குழந்தை வடிவில் தம்மைக் காண்பிக்கிறார். குழந்தையின் பண்புகளில் கடவுளின் இருப்பைக் காண்பிக்கிறார். இந்த நம்பிக்கை ஆண்டில் கடவுள் நம்பிக்கையில் வளருவோம்.







All the contents on this site are copyrighted ©.