2012-12-17 15:48:59

திருத்தந்தையின் மூவேளை செப உரை


டிச.17,2012. அநீதியான வரிகள், இரக்கமற்ற அதிகாரம், நியாயமற்ற பொருளாதார நெருக்கடி எனக் கூக்குரலிடும் உலகின் பல பகுதிகள், புனித திருமுழுக்கு யோவானின் போதனையில் உண்மை அர்த்தத்தைக் காண முடியும் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, நீதியும் பிறரன்பும், வரியும் நேர்மையும், அதிகாரமும் மதித்தலும் போன்றவை ஒன்றுக்கொன்று இணைந்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு, புனித திருமுழுக்கு யோவானின் வார்த்தைகள் இன்றும் நம் வாழ்வுடன் இயைந்து செல்பவைகளாக உள்ளன என்று கூறினார்.
இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளும்படி வலியுறுத்தும் புனித திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அளவுக்கதிகமாக வைத்திருக்கும் நிலை, மற்றும், அளவுக்கதிகமாகத் துன்புறும் நிலை என்ற இந்த இரு நிலைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்குவதற்கு நீதி அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.
நேர்மையுடனும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமலும், அயலவர்மீது அன்புடனும் நடக்க வேண்டியத் தேவை குறித்தும் தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மூவேளை செப உரையின் இறுதியில், கடந்த வெள்ளியன்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் கனெக்டிக்கட் மாநிலத்தில், பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டது குறித்து, தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.