2012-12-14 15:44:36

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அனைத்துலக அமைதி நாள் செய்தி


டிச.14,2012. புலரும் ஒவ்வொரு புதிய ஆண்டும் நமக்கு நல்லவைகள் நடைபெறும் என்ற நம்பிக்கையோடு பிறக்கிறது, இதன் அடிப்படையில் மனித குலம் அனைத்தும் மகிழ்விலும் அமைதியிலும் வளமான வாழ்வில் இவ்வாண்டு அடியெடுத்து வைக்கவேண்டுமென்று அனைத்து மனித குலத்தின் தந்தையை வேண்டுகிறேன் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் அனைத்துலக அமைதி நாள் செய்தியில் கூறியுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் தேதி அனைத்துலக அமைதி நாள் என்று கத்தோலிக்கத் திருஅவையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளுக்கென திருத்தந்தை, "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" என்ற தலைப்புடன் அளித்துள்ள சிறப்புச் செய்தி இவ்வேள்ளியன்று வத்திக்கானில் வெளியிடப்பட்டது.
நன்மைகளும், பிரச்சனைகளும் நிறைந்த உலகமயமாக்கல் என்ற வழிமுறையில் வாழும் நாம், போர்களையும், போராட்டங்களையும் சந்திக்கிறோம் என்றும், அனைத்து மனிதருக்கும், முழு மனித நலனை உருவாக்கும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க நமக்குச் சவால்கள் விடுக்கப்படுகின்றன என்றும் தன் செய்தியை ஆரம்பித்துள்ளார் திருத்தந்தை.
கடவுளின் கொடையும், மனித முயற்சியும் இணைவது அமைதியில், வாழ்வை அதன் அனைத்து அம்சங்களிலும் காப்பவர்களே உண்மையில் அமைதி ஏற்படுத்துவோர், பொருளாதார முன்னேற்றம் புதிய வழிகளில் சிந்திக்கப்படுவதன் வழியாக உருவாகும் அமைதி, அமைதி கலாச்சாரத்தை வலியுறுத்தும் புதிய கல்வியும், இக்கல்வியைப் புகட்டுவதில் குடும்பங்களின் பங்கும், என்று பல அழகிய அம்சங்களைத் தாங்கி வரும் இச்செய்தியைத் திருத்தந்தை ஏழு பகுதிகளாக வழங்கியுள்ளார்.
அமைதியை ஏற்படுத்துவோர் கடைபிடிக்க வேண்டிய வழிகள் என்ற தன் இறுதிப் பகுதியில், அமைதியின் தூதர்கள் முக்கியமாக இறைவனுடன் தொடர்பு கொண்டுள்ள ஆன்மீகத்தில் பக்குவப்பட்டவர்களாகவும் விளங்கவேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் 1968ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி உலக அமைதி நாள் உருவாக்கப்பட்டது. இப்பாரம்பரியத்தைத் தொடர்ந்து, 2013ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி 46வது உலக அமைதி நாள் கத்தோலிக்கத் திருஅவையால் கொண்டாடப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.