2012-12-14 15:25:47

டிச.15. திருவருகைக்காலச் சிந்தனை - அருள்பணி. இயேசு கருணா


“எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்?” (சீராக்கின் ஞானம் 48:4)
மெசியாவின் வருகைக்கான முன்தயாரிப்பைச் செய்யக்கூடியவர் இறைவாக்கினர் எலியா என்பது இஸ்ராயேல் மக்களின் நம்பிக்கை. இயேசுவின் வருகைக்கு முன்னோடியாக வந்த திருமுழுக்கு யோவானை மக்கள் எலியா என்றே அழைக்கின்றனர். இயேசு தாபோர் மலையில் உருமாறியபோது மோசேயும், எலியாவும் தோன்றுவதாக நற்செய்தியாளர்கள் எழுதுகின்றனர். இந்த எலியாவை ஒரே வார்த்தையில் ‘அர்ப்பணம்’ என்று அழைக்கலாம். தன் பேச்சுக்குச் செவிகொடாத இஸ்ராயேல் மக்கள், தன்னை அழிக்கத் துடிக்கும் ஜெசபல், தன் கண்முன் நடக்கும் பாகால் வழிபாடு, நாட்டின் பஞ்சம் என எண்ணற்ற சவால்கள் இருந்தாலும்ää விரக்தியால் ஓடிவிட நினைத்தாலும் இறைவனை ஓரெப் மலையில் கண்டதால் திடம் பெறுகின்றார். தன் அர்ப்பணத்தைப் புதுப்பிக்கின்றார். நம் வாழ்விற்கு அர்த்தம் சேர்ப்பது நாம் நம் வாழ்விற்குக் காட்டும் அர்ப்பணம்தான். கலிபோர்னியா பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு ஒரு ஆய்வு நடத்துகின்றது. பத்துப் பெண்களைத் தேர்ந்தெடுத்து எலுமிச்சை சாறு தயாரிக்க அழைக்கின்றது. 10 எலுமிச்சைகள், 10 கரண்டிகள், 10 சுகர் க்யூப்கள், 10 டம்ளர் தண்ணீர் என அவர்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் ஜூஸ் தயாரிக்கின்றனர். அதை ஆய்வு செய்தபோது பத்தும் பத்து சுவையைத் தருகின்றது. கொடுக்கபட்ட பொருட்கள் ஒரே மாதிரியானவை என்றாலும் சுவை எப்படி மாறுபடும் என்று ஆராய்கின்ற பல்கலைக்கழகம் கண்ணுக்குத் தெரிந்த பொருள்கள் தருகின்ற சுவையைக் காட்டிலும் கண்ணுக்குத் தெரியாத அர்ப்பணம்தான் அதற்குச் சுவை தருகின்றது என்று நிறைவு செய்கின்றனர். நம் வாழ்விலும் கொடுக்கப்பட்ட வருடங்கள், திறமைகள், உறவுகள் ஒரே மாதிரி இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே வெற்றியாளர்களாக மாறுகின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அளிக்கின்ற அர்ப்பணம்.








All the contents on this site are copyrighted ©.