2012-12-14 15:47:14

கத்தோலிக்கத் திருஅவை மனித உரிமைகளுக்கு முக்கிய இடம் அளித்து வந்துள்ளது - கர்தினால் பீட்டர் டர்க்சன்


டிச.14,2012. கத்தோலிக்கத் திருஅவை பல நூற்றாண்டுகளாக மனித உரிமைகளுக்கு முக்கிய இடம் அளித்து வந்துள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
போலந்து நாட்டின் Cracow நகரில் உள்ள Jagiellonian பல்கலைக்கழகத்தில் அண்மையில் முடிவுற்ற மூன்றாம் அனைத்துலக மனித உரிமை கல்விக் கருத்தரங்கில் உரையாற்றிய அமைதி மற்றும் நீதி திருப்பீட அவையின் கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வாறு கூறினார்.
மனித உரிமைகள் குறித்த அனைத்துலக அறிவிப்பு 1948ம் ஆண்டு உருவானது முதல், திருஅவையும், உலகச் சமுதாயமும் மனித உரிமைகள் குறித்து கொண்டுள்ள கண்ணோட்டத்தில் ஒப்புமைகளைக் காணலாம் என்று கர்தினால் டர்க்சன் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள அடிப்படை மாண்பின் அடிப்படையில் மனித உரிமைகள் நிலைநிறுத்தப்படவேண்டும் என்று உலகச் சமுதாயம் எண்ணிவருவதை திருத்தந்தையர்களும் திருஅவைத் தலைவர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர் என்று கர்தினால் எடுத்துரைத்தார்.
1963ம் ஆண்டு திருத்தந்தை அருளாளர் 23ம் ஜான் எழுதிய ‘உலகில் அமைதி’ (Pacem in terris) என்ற ஏட்டில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் தன் உரையில் மேற்கோள்களாகக் கூறிய கர்தினால் டர்க்சன், தான் வளர்ந்து வந்த ஆப்ரிக்காவில் நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் நினைவுகூர்ந்தார்.
மனித உரிமைகள் என்ற விரிந்த ஒரு குடைக்குக் கீழ், மத உரிமையும் முக்கியமாக இடம்பெறவேண்டும் என்று தலைவர் டர்க்சன் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.