2012-12-13 16:03:59

நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு, 2012ம் ஆண்டுக்கான CNN நாயகர் விருது


டிச.13,2012. நேபாளத்தைச் சேர்ந்த Pushpa Basnet, என்ற 28 வயது இளம்பெண்ணுக்கு, 2012ம் ஆண்டுக்கான CNN நாயகர் (CNN Hero) என்ற புகழ்பெற்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் சிறைப்பட்டிருக்கும் பெண்களுடன் அவர்களின் குழந்தைகளும் சிறைகளில் துன்புறுவதைக் கண்ட Pushpa Basnet, அக்குழந்தைகளைப் பாதுகாக்க, Butterfly Home அதாவது, வண்ணத்துப் பூச்சி இல்லம் என்ற ஓர் இல்லத்தை 2005ம் ஆண்டு உருவாக்கினார்.
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இயேசு சபையினர் நடத்திவரும் புனித Xavier கல்லூரியில் சமூகப் பணியியல் பயின்ற Pushpa Basnet, கிறிஸ்தவச் சூழலில் தன் கல்வி அமைந்ததால், சமுதாயப் பிரச்சனைகளைக் காணும் பக்குவமும் தான் பெற்றதாகக் கூறியுள்ளார்.
அரசின் உதவிகள் ஏதுமின்றி, Basnet துவங்கிய வண்ணத்துப் பூச்சி இல்லத்தில் குழந்தைகளுக்கு நல வசதிகளும், கல்வியும் வழங்கப்படுகின்றன.
உலகின் பல நாடுகளிலும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ள 10000க்கும் அதிகமானோர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் Pushpa Basnetக்கு CNN நாயகர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுடன் வழங்கப்படும் 250000 டாலர்கள், அதாவது, 11 கோடியே, 25 இலட்சம் ரூபாய் வண்ணத்துப் பூச்சி இல்லத்திற்குப் பயன்படுத்தப்படும் என்று Pushpa Basnet கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.