2012-12-13 15:58:06

அமெரிக்கத் திருஅவையின் அனைத்துலக மாநாட்டின் இறுதித் திருப்பலியில் கர்தினால் Marc Ouellet வழங்கிய மறையுரை


டிச.13,2012. வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் 500 ஆண்டுகளுக்கு முன் நாம் பெற்ற விசுவாசத்திற்கு 'ஆம்' என்று விடை பகர்ந்ததோடு, அதனைப் பிறருக்கும் பகிர்ந்தளித்து வந்துள்ளோம் என்பது பெருமைக்குரிய வரலாறு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
டிசம்பர் 9, இஞ்ஞாயிறு முதல் இப்புதன் முடிய வத்திக்கானில் நடைபெற்ற அமெரிக்கத் திருஅவையின் அனைத்துலக மாநாட்டின் இறுதித் திருப்பலியை நிறைவேற்றி மறையுரை வழங்கிய, திருப்பீட ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet இவ்வாறு கூறினார்.
வானத்தூதர் கபிரியேல் வழியாக நற்செய்தியைப் பெற்ற அன்னை மரியா, உடனே விரைந்து சென்று எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வைத் தன் மறையுரையில் சுட்டிக் காட்டிப் பேசிய கர்தினால் Ouellet, அமெரிக்காவின் பல நாடுகளிலும் நற்செய்தியைப் பெற்ற கிறிஸ்தவர்கள் பலர் மரியாவைப் போல் நற்செய்தியைப் பரப்பும் கருவிகளாக வாழ்ந்தனர் என்று கூறினார்.
17ம் நூற்றாண்டில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட லீமா ரோஸ் முதல் இவ்வாண்டு அக்டோபர் மாதம் புனிதராக உயர்த்தப்பட்ட கத்தேரி தெக்கக்விதா வரை அனைத்துப் புனிதர்களும் நற்செய்தியின் பாதையில் நம்மை வழிநடத்தும் ஒளிவிளக்குகள் என்று இலத்தீன் அமெரிக்கத் திருப்பீட அவையின் தலைவராகவும் பணியாற்றும் கர்தினால் Ouellet எடுத்துரைத்தார்.
சுயநலம், ஏழைகளைப் புறக்கணித்தல், நகரங்களில் வளரும் வன்முறைகள், புலம்பெயர்தல், போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் பயன்பாடு என்ற பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க நாடுகள் குவாதலுபே அன்னைமரியாவின் பரிந்துரையால் இப்பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கு செபங்களை எழுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார் கர்தினால் Ouellet.








All the contents on this site are copyrighted ©.