2012-12-13 15:55:40

அனைத்துக் குழந்தைகளும் தகுதியான கல்வியறிவு பெற ஒவ்வோர் அரசும் உழைக்க வேண்டும் - திருத்தந்தை


டிச.13,2012. இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான ஒன்று நமது கல்வி நிலை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
Guinea குடியரசு, Saint Vincent மற்றும் Grenadines, Niger, Zambia, தாய்லாந்து, இலங்கை ஆகிய ஆறு நாடுகளின் சார்பில் திருப்பீடத் தூதர்களாக புதிதாக நியமிக்கப்பட்டவர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, வளரும் தலைமுறையினருக்கு குடும்பம், பள்ளி ஆகிய அமைப்புக்கள் புகட்டவேண்டிய கல்வியைக் குறித்துப் பேசினார்.
குடும்பமும், பள்ளியும் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறும்போது, வளரும் குழந்தைகள் அங்கு பெறமுடியாத அறிவை வேற்று இடங்களில் தேடிச் செல்வது வருங்காலத்திற்கு நல்வழிகளைக் காட்டாது என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
'மனிதர்களின் உண்மையான மாண்பு அவர்கள் பழகும் விதம், அவர்கள் பின்பற்றும் நன்னெறி விழுமியங்கள் இவற்றை வைத்தே கணிக்கப்படும்' என்று முன்னாள் திருத்தந்தை 13ம் லியோ கூறிய சொற்களைத் தன் உரையில் சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, நல்ல பழக்கங்களை வளர்க்கும் ஒரு சிறந்த வழி கல்வியே என்பதை எடுத்துரைத்தார்.
அனைத்துக் குழந்தைகளும் தகுதியான கல்வியறிவு பெறுவதற்கு ஒவ்வோர் அரசும் தீவிரமாக உழைக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்தத் திருத்தந்தை, அதே நேரம், அரசுப் பொறுப்பில் இருப்பவர்களும் நன்னெறி வழிகளில் நடப்பது, இளையோருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் எடுத்துரைத்தார்.
Guinea குடியரசு, Saint Vincent மற்றும் Grenadines, Niger, Zambia, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளின் சார்பில் பணியாற்றும் தூதர்கள், வத்திக்கானில் தாங்காமல், வேற்று நாடுகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.