2012-12-12 16:24:09

திருத்தந்தையின் Twitter வழித் தொடர்புகள் ஆரம்பம்


டிச.12,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதனன்று தன் பொது மறைபோதகத்தை வழங்கியபின்னர், Twitter வழிச் செய்தியை முதன்முதலாக ஆரம்பித்தார்.
புதன் பொது மறைபோதகம் நடைபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் மன்றத்திற்கு வந்திருந்த ஐந்து இளையோர் எடுத்துவந்த Tablet கணணி வழியாக, திருத்தந்தை தன் முதல் Twitter செய்தியை வழங்கினார்.
உலகின் ஐந்து கண்டங்களை நினைவுறுத்தும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஐந்து இளையோர் வழியாக, pontifex என்ற இணையதள முகவரி மூலம் திருத்தந்தை தன் Twitter தொடர்புகளை ஆரம்பித்தார்.
ஒவ்வொரு நாளும் நம்பிக்கை ஆண்டை எவ்விதம் சிறப்பான முறையில் வாழ்வது என்பது குறித்து Twitter வழியாக ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த திருத்தந்தை, செபத்தில் இயேசுவுடன் கொள்ளும் உரையாடல், நற்செய்தியில் அவர் பேசுவதற்குச் செவிமடுத்தல், உதவி தேவைப்படுவோரில் உறைந்திருக்கும் இயேசுவைச் சந்தித்தல் ஆகியவைகள் மூலம் இதை வாழ முடியும் எனக் கூறியுள்ளார்.
ஆங்கிலம், இஸ்பானியம், இத்தாலியம், பிரெஞ்ச், ஜெர்மன், போர்த்துகீசியம், போலந்து, அரேபியம் ஆகிய எட்டு மொழிகளில் ஆரம்பமாகியுள்ள திடுத்தந்தையின் Twitter தொடர்பு, இன்னும் பிற மொழிகளில் விரைவில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எட்டு மொழிகளில் Twitter வழி திருத்தந்தையை தொடர்புகொள்ள விரும்பியோரின் எண்ணிக்கை 10இலட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.