2012-12-12 16:25:21

குவாதலுபே மரியன்னைத் திருநாள், கலாச்சாரங்களுக்கு இடையே வளர வேண்டிய எண்ணப் பகிர்வுகளை உணர்த்துகிறது - கர்தினால் Marc Ouellet


டிச.12,2012. அன்னை மரியா குவாதலுபே அன்னையாகத் தோன்றியபோது, இயேசுவைக் கருதாங்கிய வண்ணம் தோன்றியது இன்றைய உலகிற்கு முக்கியமான ஒரு பாடத்தைச் சொல்லித் தருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
டிசம்பர் 9, இஞ்ஞாயிறு முதல் இப்புதன் முடிய வத்திக்கானில் நடைபெற்று வரும் அமெரிக்கத் திருஅவை அனைத்துலக மாநாட்டின் ஓர் அமர்வில் உரையாற்றிய திருப்பீட ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet இவ்வாறு கூறினார்.
மரியா என்ற வார்த்தை யூதப் பாரம்பரியத்தில் இருந்து வந்ததென்றும், குவாதலுபே என்ற வார்த்தை அரேபிய அடிப்படையைக் கொண்டுள்ளதென்றும் கூறிய கர்தினால் Ouellet, இவ்விரண்டையும் இணைக்கும் குவாதலுபே மரியன்னைத் திருநாள், கலாச்சாரங்களுக்கு இடையே வளர வேண்டிய எண்ணப் பகிர்வுகளையும் நமக்கு உணர்த்துகிறது என்று கூறினார்.
கிறிஸ்துவப் பாரம்பரியங்களில் ஊன்றப்பட்டுள்ள வட, மத்திய, மற்றும் தென் அமெரிக்க நாடுகள் அனைத்துமே, இந்த நம்பிக்கை ஆண்டில் புத்துணர்வு பெற்று, தங்கள் விசுவாச வாழ்வை ஆழப்படுத்த வேண்டும் என்று இலத்தீன் அமெரிக்கத் திருப்பீட அவையின் தலைவராகவும் பணியாற்றும் கர்தினால் Ouellet கூறினார்.
டிசம்பர் 12, இப்புதனன்று கொண்டாடப்படும் குவாதலுபே அன்னை மரியாவின் திருநாளன்று அமெரிக்கத் திருஅவை அனைத்துலக மாநாடு நிறைவு பெற்றுள்ளது.








All the contents on this site are copyrighted ©.