2012-12-11 15:54:32

விவிலியத்
தேடல் திருப்பாடல்கள் 145 முதல் 150 முடிய... பகுதி 3


RealAudioMP3 12-12-12 இப்புதனன்று உலகின் பல நாடுகளிலும் பல அர்த்தமுள்ள நிகழ்வுகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. 2001ம் ஆண்டு 01-01-01 என்று ஆரம்பமான ஒரு தொடர் முயற்சி, 02-02-02, 03-03-03 என, கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இம்முயற்சிகளில் பெரும்பான்மையானவை நமது இயற்கையைக் காப்பாற்றும் முயற்சிகளாக அமைந்தன. இம்முயற்சிகளின் ஒரு மகுடமாக, 12-12-12 இப்புதனன்று மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இருக்கும் என்று நம்புவோம். இனிவரும் ஆண்டுகளில் இதுபோன்ற நாட்கள் நமக்குக் கிடைக்காது. அதாவது, 2013ம் ஆண்டில் 13-13-13 என்ற ஒரு தேதி வருவதற்கு வாய்ப்பில்லை. எனவேதான், கடந்த பன்னிரு ஆண்டுகளின் ஒரு மகுடமாக 12-12-12 திகழும் என்று குறிப்பிட்டேன்.

இந்த நாளை ஒரு மகுடம் என்று சொல்லும் அதே மூச்சில், இந்த நாளை ஓர் ஆபத்தான நாள் என்று சொல்பவர்களையும் நாம் சந்திக்கலாம். 12-12-12 அல்லது, 21-12-12 என்ற இரு நாட்கள் உலக முடிவு நாட்கள் என்ற வதந்திகளும் உலவி வருகின்றன. 12-12-12ஐ ஒரு மகுடமாகக் காணலாம். அல்லது, ஓர் அழிவாகக் காணலாம். கண்ணோட்டம் கருத்துக்களை மாற்றும். கடந்த இரு வாரங்கள் நாம் சிந்தித்துவந்த இறுதி ஆறு திருப்பாடல்களையொட்டி நமது இன்றைய விவிலியத்தேடலும் அமைகிறது.

C.S.Lewis (Clive Staples Lewis), புகழ்பெற்ற ஓர் ஆங்கில எழுத்தாளர். திறமை வாய்ந்த பேராசிரியர். Oxford, Cambridge என்ற இரு புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் பணியாற்றியவர். இறையியல் சிந்தனைகளையும் தன் படைப்புக்கள் மூலம் தந்தவர். எழுத்தாளராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிவந்த இவருக்கு நேரம் கிடைப்பது அரிதாக இருந்தது. இருப்பினும், இவரது வளர்ப்புத் தாய், ஒவ்வொரு நாளும் சாதாரணப் பணிகளை இவருக்குத் தந்தார். கடைக்குப்போய், பொருள் வாங்கி வருவது, வீட்டில் பாத்திரங்களைக் கழுவுவது என்று பல வேலைகள் Cliveக்குத் தரப்பட்டது. இவரது அண்ணன் Warren Lewis, தன் டைரியில் இதைப்பற்றி எழுதியபோது, "தம்பி Clive மீது அம்மா இத்தனை வேலைகளைச் சுமத்தாமல் இருந்திருந்தால், அவன் எழுத்துத் துறையிலும், ஆசிரியப் பணியிலும் இன்னும் அதிகம் புகழ் பெற்றிருப்பான்" என்று குறிப்பிட்டார்.

தனக்குத் தரப்பட்டப் பணிகளைப் பற்றி Clive வேறொரு கணிப்பு வைத்திருந்தார். இந்தப் பணிகள் தன்னை இந்த உலகத்தோடு இன்னும் அதிகம் பிணைத்தது... ஒவ்வொரு நாளும் தான் சந்தித்த எளிய மக்கள், சாதாரண வாழ்வு சம்பவங்கள் தன்னை இன்னும் ஒரு சிறந்த எழுத்தாளராக, ஆசிரியராக உருவாக்கியது என்று C.S.Lewis கணித்தார். “இப்பணிகளைச் செய்யாமல், வீட்டிலேயேத் தங்கி இருந்தால், நானும் Oxford பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பல உயர்ந்த பேராசிரியர்களைப் போல் இருந்திருப்பேன்... அதாவது, எப்படி அவர்கள் இவ்வுலகுடன் அதிகத் தொடர்பில்லாமல், ஒரு கனவுக் கோட்டைக்குள் வாழ்ந்து வருகின்றனரோ, அதேபோல் நானும் அறிவுத்திறனில் அதிகம் வளர்ந்திருக்கக்கூடும். ஆனால், வாழ்வின் அன்றாட அனுபவங்களை இழந்திருக்க நேரிடும்” என்பது C.S.Lewisன் கணிப்பு.
தம்பி மீது தினசரி வேலைகள் சுமத்தப்பட்டன என்று அண்ணன் கணித்தபோது, C.S.Lewis அதை ஒரு சுமையாகக் கருதாமல், ஒரு வாய்ப்பாகக் கருதினார். இருவேறு கண்ணோட்டங்கள்... இவற்றில் எந்தக் கண்ணோட்டம் பயனுள்ள கண்ணோட்டம் என்பதை விளக்கத் தேவையில்லை.

நம் வாழ்வின் நிகழ்வுகள் நம்மைச் செதுக்கும் உளிகள்... நம் மனதை உழுது பண்படுத்தும் கலப்பைகள். உளிகளும், கலப்பைகளும் சுகம் தரும் கருவிகள் அல்ல... ஆனால், நீண்ட காலம் நீடிக்கும் சுகத்தை, நலத்தைத் தரும் கருவிகள். நம் வாழ்வின் நிகழ்வுகளை உளிகளாக, கலப்பைகளாகக் காண நாம் பழகிக் கொண்டால், நமக்கு நன்மை விளையும்.
வாழ்வில் நிகழும் நன்மைகளை எண்ணி, நன்றி, புகழ் என்ற உணர்வுகளுடன் வாழ நம்மை அழைக்கும் இறுதி ஆறு திருப்பாடல்களை நாம் மூன்றாவது வாரமாகச் சிந்தித்து வருகிறோம். இந்த நன்றி உணர்வுகளை நமக்குள் வளர்க்கும் ஒரு முக்கிய கருவி நமது கண்ணோட்டம்.

மேலோட்டமான ஒரு கண்ணோட்டத்துடன் பார்த்தால், நம் வாழ்வின் பல நிகழ்வுகள் நமக்குத் தடையாக, சுமையாக இருப்பதுபோல் தெரியும். ஆனால், அவற்றின் விளைவுகள் காலப்போக்கில் நன்மையாக முடிவதையும் நாம் அனுபவித்திருக்கிறோம்.

வானிலை அறிக்கைகளைத் தினமும் கேட்கிறோம். பல நேரங்களில் அங்கு சொல்லப்படுவதற்கு முற்றிலும் மாறாக நடப்பதையும் பார்க்கிறோம். வானிலை நம் கட்டுப்பாட்டில் இல்லை, ஆனால், அந்த வானிலை உருவாக்கும் மனநிலை நம் கட்டுப்பாட்டில் முற்றிலும் உள்ளது. கொட்டும் மழை ஒருவரைத் துயரத்தில் ஆழ்த்தும், மற்றொருவரைக் குழந்தையாய் மாற்றி மழையில் விளையாட வைக்கும். எரிக்கும் வெயில் ஒருவருக்கு எரிச்சலூட்டும், மற்றொருவருக்கு மகிழ்வைத் தரும். ஒவ்வொருக்குள்ளும் மழையோ, வெயிலோ ஒரு நாள் மகிழ்வையும் வேறொரு நாள் சோகத்தையும் உருவாக்குவதில்லையா?

வானிலையைப் போலவே, வாழ்வின் நிகழ்வுகளையும் நம்மால் அதிகம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அந்நிகழ்வுகள் நம்மில் உண்டாக்கும் எண்ணங்கள், உணர்வுகள் இவை முற்றிலும் நம் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒரு நிகழ்வு நடக்கும்போது, முக்கியமாக, ஏமாற்றம் தரும், துயரம் தரும் ஒரு நிகழ்வு நடக்கும்போது, பொதுவாக நம்மில் வேதனையும், கோபமும் பெருமளவில் தோன்றும். காலம் செல்லச் செல்ல அதே நிகழ்வுகள் மனதில் அமைதியை, நன்றியை உருவாக்குவதும் நாம் வாழ்வில் அனுபவத்தில் உணர்ந்துள்ள பாடங்கள்தானே! நம்மைச்சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளும், நம்மை வந்தடையும் எல்லா அனுபவங்களும் 'நல்லவை' 'அற்புதமானவை' என்ற அட்டைகள் ஒட்டப்பட்டு வரும் பரிசுகள் அல்ல. பல நல்ல நிகழ்வுகள் துன்பம் என்ற மாறுவேடத்தில் வருகின்றனவே!

ஆங்கிலத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் - Blessing in disguise, அதாவது, மாறுவேடத்தில் வரும் ஆசீர்வாதங்கள். இந்த மாறுவேடத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், ஆசீர்வாதங்களையும் இழந்துபோகும் ஆபத்து உண்டு. இக்கருத்தை வலியுறுத்தும் பல கதைகள் உண்டு. எனக்குப் பிடித்தக் கதை இது... இதை ஏற்கனவே உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Titanic என்ற புகழ்பெற்ற கப்பலில் பயணம் செய்தவர்கள், செய்யத் தவறியவர்கள் பற்றி பல கதைகள் உண்டு. அவைகளில் இதுவும் ஒன்று. ஸ்காட்லாந்தில் வாழ்ந்தது கிளார்க் (Clark) குடும்பம். கணவன், மனைவி, ஒன்பது குழந்தைகள். Titanic என்ற கப்பலில் பயணம் செய்து, அமெரிக்காவை அடைந்து, அங்கு தங்கள் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமென்று, கணவனும் மனைவியும் இரவு பகலாய் உழைத்து பணம் சேர்த்தனர். குழந்தைகளும் உழைத்தனர். பல ஆண்டுகள் சேர்த்த பணத்தைக் கொண்டு அனைவருக்கும் Passport மற்றும் பயணச்சீட்டு எல்லாம் வாங்கிவிட்டனர். பயணம் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன், அக்குடும்பத்தின் கடைசிக் குழந்தையை ஒரு வெறி நாய் கடித்துவிட்டது. அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்கள் வீட்டின் முன்கதவில் ஒரு மஞ்சள் காகிதத்தை ஒட்டிவைத்தார். அதாவது, அக்குடும்பத்தில் உள்ளவர்கள் பிறரோடு 15 நாட்களுக்குப் பழகக்கூடாது என்று தடை விதிக்கும் அறிவிப்பு அது. வீட்டுத் தலைவன் மனமுடைந்து போனார். ஒரு வாரம் கழித்து, Titanic கப்பல் கிளம்பிச் செல்வதைத் துறைமுகத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அவருக்கு கோபம் உச்சத்திற்கு ஏறியது. தன் கடைசி மகனையும், அவனைக் கடித்த நாயையும், இப்படி நடக்கும்படி செய்துவிட்ட கடவுளையும் ஒவ்வொரு நாளும் சபித்தார்.
Titanic கப்பல் கிளம்பி ஐந்து நாட்கள் சென்று, அக்கப்பல் மூழ்கியச் செய்தி வந்தது. உடனே கிளார்க் வீட்டுக்கு ஓடிச்சென்று தன் கடைசி மகனைக் கட்டியணைத்து, முத்தமிட்டு, அழுதார். கடவுளிடம் மன்னிப்பு கேட்டார். சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், தன் மகனைக் கடித்த அந்த வெறி நாயிடமும் அவர் மன்னிப்பு கேட்டிருப்பார்.

நம்மில் எத்தனை பேர் எத்தனை முறை மாறுவேடத்தில் வந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளோம்? கடவுளின் கருணை ஒவ்வொருவர் வாழ்விலும் பல வடிவங்களில் வருகின்றது. பல நேரங்களில் மாறுவேடங்களிலும் வருகின்றது. பல கருத்துக்களுக்காக நாம் செபங்களை எழுப்புகிறோம். அவற்றில் சில நிறைவேறுகின்றன, வேறு சில நிறைவேறாமல் போகின்றன. நிறைவேறிய காரியங்களுக்கு இறைவனுக்கு நன்றி சொல்வது எளிதாக அமையும். ஆனால், நிறைவேறாமல் போன காரியங்களுக்கும் நன்றி சொல்லும் வேளைகள் நம் வாழ்வில் வந்துள்ளன என்பதை மறுக்கமுடியாது. "நாம் எழுப்பிய செபங்களுக்குப் பதில் சொல்லாமல் போனதற்காக நாம் முடிவில்லா காலங்களுக்கு இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டியிருக்கும்" (We’ll spend most of eternity thanking God for those prayers he didn’t answer.) என்று C.S.Lewis கூறியுள்ளார். இக்கூற்றில் அவரது அனுபவம் பேசுகிறது என்பதை உணரலாம்.

தாவீது தன வாழ்வைத் திரும்பிப்பார்த்து, அசைபோட்டு எழுதிய பாடல்கள் நாம் சிந்தித்துவரும் திருப்பாடல்கள். அவர் திரும்பிப்பார்த்த வாழ்வில் நடந்ததெல்லாமே சுகமான, நலமான நிகழ்வுகள் அல்லவே. அவர் நினைத்திருந்தால், அந்நிகழ்வுகளின் விளைவாக, தன் மனதை வெறுப்பில், பகைமையில், பழி உணர்வில் நிறைத்திருக்கலாம். அவர் அதற்கு மாறாக, தன் வாழ்வை அன்பு, அமைதி என்ற அமுதங்களால் நிறைத்ததால், நன்றி உணர்வுடன் பல பாடல்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளார். தாவீது மனதில் பொங்கிய நன்றி உணர்வுகளின் சிகரமாக விளங்கும் இறுதி ஆறு திருப்பாடல்களிலிருந்து ஒரு சில இறைச் சொற்றொடர்கள் இதோ:
திருப்பாடல் 145 1-2
என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
திருப்பாடல் 146 1-2
அல்லேலூயா! என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு; நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன்.
திருப்பாடல் 147 1
அல்லேலூயா! நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது.

2012ம் ஆண்டின் இறுதிநாட்களில் இருக்கும் நாம், இவ்வாண்டு முழுவதும் இறைவன் செய்த நன்மைகளை எண்ணி, வருகின்ற நாட்களில் நன்றியையும், புகழையும் இறைவனுக்குத் தாராளமாக வழங்கும் நல் உள்ளத்தை வளர்ப்போம்.








All the contents on this site are copyrighted ©.