2012-12-10 16:28:49

வாரம் ஓர் அலசல் - ஏழ்மையும் மனித உரிமைகளும்


RealAudioMP3 டிச.10,2012. அந்திப் பொழுது. ஆற்றில் மீன்கள் துள்ளிக் குதித்து ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. சில மீன்கள் வானை நோக்கி வாயைப் பிளந்தபடி பிராணவாயுவைக் குடித்துக் கொண்டிருந்தன. ஆற்றங்கரை மரத்தில் இருந்து கொண்டு வேடிக்கைப் பார்த்த குரங்குக்கு விடுதலை உணர்வு ததும்பியது. “ஐயோ பாவம்... இந்த மீன்கள்தான் நீரிலே எவ்வளவு கஷ்டப்படுகின்றன. துள்ளிக் குதித்துக் கரைக்கு வர விரும்புகின்றன. ஆனால் நீருக்குள்ளேயே மீண்டும் விழுந்து விடுகின்றன. எவ்வளவு பெரிய சிறை இந்தச் சின்ன மீன்களுக்கு....” என்று மீன்கள்மீது பரிதாபப்பட்ட அந்தக் குரங்கு, பொதுநலச் சேவையில் இறங்கியது. துள்ளத் துடிக்க ஒவ்வொரு மீனாகக் கரையில் போட்டது குரங்கு. “இயற்கைக் காற்றைச் சுவாசியுங்கள், இன்பமாக வாழுங்கள்” என்று வசனம் பேசியபடி எல்லா மீன்களையும் அது கரையேற்றியது. கரையேற்றப்பட்ட மீன்கள் எல்லாம் துள்ளத் துடிக்க, வாயைப் பிளந்தபடி செத்துக் கிடந்தன. மீன்களின் ஆவிகள் அனைத்தும் அந்தக் குரங்கைச் சபித்தன. பணி முடிந்த கையோடு தொலைக்காட்சிகளுக்குப் பரபரப்பாய்ப் பேட்டிக் கொடுத்தது அந்தப் பொதுநலக் குரங்கு. “ஆற்றிலுள்ள மீன்கள் கூட்டம் நூறு விழுக்காடு விடுதலை அடைந்து விட்டது” என்று கம்பீரமாய்ப் பேசியது குரங்கு.

ஆனால் மீன்களுக்கு விடுதலை தண்ணீருக்குள்தான். பறவைகளுக்கு விடுதலை கூடுகளில்தான் என்பது அந்த ஐந்தறிவு குரங்குக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் ஆறறிவு மனிதர்களும் ஐந்தறிவு உயிரினங்கள் போன்று பல நேரங்களில் நடந்து கொள்வதுதான் வேதனை. உணர்ச்சிக் கொந்தெளிப்பில் என்ன செய்கின்றோம் என்றுகூடத் தெரியாமல் நொடிப் பொழுதில் வன்செயல்களும் கொலைகளும் நடந்து முடிகின்றன. தங்களது இனப் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறோம் எனச் சொல்லிக்கொண்டு கடந்த நவம்பரில் தர்மபுரி மாவட்டத்தில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இரண்டு வேறுபட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள் காதலித்துக் கணவன் மனைவியாய் வாழத் தொடங்கிய பாவத்துக்கு, நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி காலனிகள் தீக்கிரையாகின. குடிசைகள் கருகிச் சாம்பல் மேடாய்ச் சரிந்து விட்டன. வியர்வை சிந்தி சேமித்த பொருட்கள் பறிபோய்விட்டன எனப் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.

மும்பையில் முகநூலில் கருத்து தெரிவித்த இரண்டு இளம்பெண்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. “உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இந்தக் கொடுமை! கருத்து சுதந்திரம் காற்றில் பறக்கிறது” என்று பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. “ஒருவர் மீதான மரியாதை, பணிவால் வரவேண்டும்; பயத்தால் வரக்கூடாது. இங்கு எல்லாருக்கும் பயத்தால்தான் மரியாதை வந்துள்ளது” என்று கடந்த நவம்பர் 18ம் தேதி காலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஓர் இளம் பெண் எழுத, அதற்கு மற்றோர் இளம் பெண் ஆதரவளிக்க இவ்விரு பெண்களையும் காவல்துறை கைது செய்யுமளவுக்குப் பிரச்சனை பற்றிக்கொண்டது. இப்பெண்களில் ஒருவரது உறவினரின் மருத்துவமனையும் தாக்கப்பட்டு இருபது இலட்சம் ரூபாய் வரை சேதமும் ஏற்பட்டுள்ளதாகச் செய்தியில் வாசித்தோம்.

மனித சமுதாயம் கண்ட இரண்டு பெரிய உலகப் போர்களில் வளர்ந்த மற்றும் வல்லமை மிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு இலட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் பலியாகினர். இது அன்றையச் சமூக ஆர்வலர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் உருவான ஐக்கிய நாடுகள் நிறுவனம் அனைத்து மனிதரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆவணம் ஒன்றையும் உருவாக்கியது. 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐ.நா.பொது அவையில் அறிவிக்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தில் முப்பது உறுப்புகள் உள்ளன. அனைத்து மனிதரும் சுதந்திரமாகப் பிறந்தவர்கள். ஒவ்வொருவரும் மாண்பிலும் உரிமையிலும் சமத்துவம் கொண்டவர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட அல்லது அந்தரங்க விடயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான உரிமை, கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம், மத சுதந்திரம் ஆகியவற்றைக் கொண்டிருக்க உரிமை, உணவு, உடை, உறைவிடம், மருத்துவக்காப்பு என நல்வாழ்வுக்கு உரிமை எனப் பல அடிப்படை உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்துலக சாசனம் நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயினும், இந்த 21ம் நூற்றாண்டிலும் மனிதரின் சுதந்திரங்களும் உரிமைகளும் பல்வேறு காரணங்கள் காட்டி பறிக்கப்படுவதை உடனுக்குடன் ஊடகங்கள் பிரசுரித்து விடுகின்றன. இந்த உரிமைப் பறிப்புக்களால் வறுமையிலும் பலர் வாடுகின்றனர். ஒருநாளைக்கு ஒருவேளை உணவே அவர்களுக்குக் கேள்விக்குறியாக இருக்கின்றது.

அனைத்துலக மனித உரிமைகள் ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு மனிதரும், எல்லா இடங்களிலும் மாண்புடன் வாழும் உரிமையைக் கொண்டுள்ளனர். அதாவது உறைவிடம், உணவு, தண்ணீர், நலவாழ்வு, கல்வி ஆகியவற்றைப் போதுமான அளவு கொண்டிருப்பதற்கு இருக்கும் உரிமைகள் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது என்று அந்த ஒப்பந்தம் கூறுகிறது. ஆனால் இந்த அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதால், அவை மக்களைக் கடுமையான ஏழ்மை நிலைக்குத் தள்ளிவிடுகின்றன என்று பன்னாட்டு மனித உரிமைகள் கழகம் குறை கூறியுள்ளது. “அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் தாயாக இருப்பது வறுமை. காவல்துறையின் கொடுமை, பாலியல்ரீதியான அநீதி, சுற்றுச்சூழல் மாசுகேடு, சாதியப் பாகுபாடு என மனித உரிமை மீறல்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. ஆயினும் இந்த உரிமை மீறல்கள் களையப்பட வேண்டுமானால் ஏழ்மையை ஒழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. உணவும் சுதந்திரமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. ஏழ்மை, மனித மாண்போடு ஒத்துப் போகாதது என்று உலகினருக்கு எத்தனையோ முறை சொல்லப்பட்டுவிட்டது” என முன்னாள் ஐ.நா.பொதுச் செயலர் Kofi Annan ஒருமுறை கவலையோடு சொல்லியிருக்கிறார்.

இன்றும் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர், நலவாழ்வு, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வசதிகளின்றி உள்ளனர். இருபது செல்வந்தர்களின் ஒரு விழுக்காடு சொத்து, ஓராண்டில் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி வழங்கப் போதுமானது. உலகின் மூன்று கோடீஸ்வரர்களின் சொத்துகள், வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ள 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகம். உலகின் 225 மிகப்பெரிய பணக்காரர்களின் கையிருப்பு உலக ஏழை மக்கள் 250 கோடிப் பேரின் மொத்த கையிருப்பைவிட அதிகம். ஆனால் ஏழை-பணக்காரர் இடைவெளியைச் சரிப்படுத்த எந்த அரசியல் கட்சியும் முயற்சிப்பதில்லை. விளைவு, கல்வி பெறுவதற்கான மனித உரிமை மறுக்கப்படுகின்றது. ஒரு நூற்றாண்டுக்கும் முன்னதாகவே சுவாமி விவேகானந்தர் இந்திய உயர் குழுவினருக்கு ஓர் எச்சரிப்பு விடுத்தார். இந்த உயர் குழுவினர் தேசிய அளவில் ஏழைகளின் மறுபிறப்புக்கு பெருமுயற்சி எடுக்காவிட்டால் நாட்டில் முன்னேற்றம் ஏற்படாது என்றார். பட்டதாரிக் குழுவினர் நாட்டை அமைக்க மாட்டார்கள், குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்ற செல்வந்தரும் நாட்டை அமைக்க மாட்டார்கள் என்றார் சுவாமி விவேகானந்தர்.

இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகச் செயல்பட்ட அம்பேத்கர் ஒருசமயம் வேதனையோடு வெளிப்படுத்தினார் - 'நாங்கள் போராடுவது பணத்துக்கும் அதிகாரத்துக்கும் அல்ல. எங்கள் விடுதலைக்கும், வாழ்வுரிமையை மீட்பதற்கும்தான் போராடுகிறோம்’ என்று. டிசம்பர் 10 இத்திங்கள், அனைத்துலக மனித உரிமைகள் தினம். மனித உரிமைகளுக்காக உழைத்தவர்களுக்குப் பரிசுகளும், ஆஸ்லோவில் நொபெல் அமைதி விருதும் இந்த நாளில் வழங்கப்படுகின்றன. இந்த 2012ம் ஆண்டின் இந்த நாளில் பாகுபாடுகள் களையப்பட வேண்டுமென்று ஐ.நா. அமைப்புகள் குரல் எழுப்பின. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும், சட்டங்கள் முன்னர் எல்லாரும் சமம் என்று கூறின. ஏழைகளின் மனித மாண்பும், அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தின.

ஆனால் இந்த நவம்பரில் விழுப்புரம் மாவட்டம், அடுக்கம் என்ற கிராமத்தில் ஏழு பெண் குழந்தைகளைக் காப்பாற்ற முடியாமல் அக்குழந்தைகளின் தாய் கீதா, இட்லிமாவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து இட்லி அவித்து ஆறு குழந்தைகளுக்குக் கொடுத்து தானும் உண்டு உயிரை மாய்த்துவிட்டார். இன்று இத்தாலியில் மட்டும் 8 இலட்சத்து 42 ஆயிரம் பெண்கள் வேலை செய்யும் இடங்களில் பாலியல் ரீதியாக நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர் என்று இஸ்தாத் என்ற இத்தாலிய புள்ளிவிபரக் கணக்கெடுப்பு நிறுவனம் கடந்த நவம்பர் இறுதியில் கூறியது. இந்தியாவில் கடந்த ஆண்டில் 24,206 பாலியல் வன்செயல் வழக்குகள் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன. தமிழகத்தில் வீட்டு வேலைசெய்யும் அப்பாவிச் சிறுமிகளில் எத்தனையோ பேர் இம்மாதிரியான பாலியல் வன்செயல்களுக்குப் பலியாகின்றனர். சிறுவயதில் பெற்றோரை இழந்த ஒரு 16 வயது தமிழ்ச் சிறுமி தான் வேலை செய்யும் வீட்டில் பாலியல் வன்கொடுமையை அனுபவித்திருக்கின்றார். அச்சிறுமிக்காகப் பரிந்து பேசவந்த மூன்று பெண்கள், “அந்த ஆளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுங்கள் மேடம்” என ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொன்னதை அண்மையில் கேட்க நேர்ந்தது.

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய மலேசிய நாடாளுமன்றத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது. சீனாவிலிருந்து திபெத் விடுதலை பெறுவதற்காகப் புத்த துறவிகள் மட்டுமல்லாமல், மாணவர்களும் தங்களது உயிரை மாய்த்துக்கொள்னத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 21 பேர் தங்கள் உடலில் தீ வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒவ்வொரு நாடாக அலசினால், அந்நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களும், அதனால் ஏழைகள் எதிர்நோக்கும் கடுந்துன்பங்களும் தெரிய வரும். அன்பர்களே, மக்கள் மத்தியில், சிறப்பாக, பாமர, ஓரங்கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அறிவொளி தீபம் ஏற்றப்படாத வரை, அறியாமையும் படிப்பறிவின்மையும் இருக்கும் வரை, தங்கள் உரிமையை உணராமல் குனிந்து நிற்பவர்கள் இருக்கும் வரை, மக்களைத் தலையில் குட்டுவதற்கும், அவர்கள் தங்களையே அடிமைப்படுத்துவதற்கும் வேற்று நாட்டினர் தேவையில்லை. அந்தந்த நாட்டினரே போதும். மனித உரிமைகள் பற்றிய அறியாமை இருக்கும்வரை அடிமைச் சந்தைகள் மறையாமல் இருந்து கொண்டே இருக்கும்.








All the contents on this site are copyrighted ©.