2012-12-08 16:12:17

டிச.09, திருவருகைக் காலம் - 2ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 கிறிஸ்மஸ் அலங்காரங்களுடன் மின்னும் ஒரு கடைவீதியில் நாம் நடந்து செல்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். அங்கே... "இறுதிநாள் நெருங்கியுள்ளது… ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்." என்ற குரல் ஒரு பக்கம் ஒலிக்கிறது. "இன்றே இறுதிநாள்... தள்ளுபடி விற்பனையில் பொருள்களை அள்ளிச் செல்லுங்கள்." என்று வேறொரு குரல் மறுபக்கம் ஒலிக்கிறது. இவ்விரு குரல்களுக்கும் போட்டி வந்தால், எந்தக் குரல் வெல்லும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். தள்ளுபடி விற்பனை பற்றி எழும் குரல், சந்தையில் மற்ற எல்லாக் குரல்களையும் தள்ளிவிட்டு முன்னே வந்து நிற்கும். அந்தக் குரல் வரும் திசை நோக்கி முட்டி மோதிக்கொண்டு கூட்டம் அலைமோதும்.

பெருநகரங்களில் கடைவீதிகள் அடுக்குமாடி கட்டிடங்களாய் மாறி உள்ளன. இக்கடைவீதிகளுக்கு Shopping Mall என்று பெயரிட்டிருக்கிறோம். அமெரிக்காவின் Shopping Mall ஒன்றில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி இது:

இந்த Mallஇல் கிறிஸ்மஸ் வியாபாரம் வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்தது. பொருட்கள் வாங்கிக் களைத்துப் போனவர்கள் இளைப்பாறுவதற்கு அந்த Mallன் ஒரு பகுதியில் தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் அமர்ந்திருந்த ஒருவர், அங்கு பொருள்கள் வாங்கியவர்களிடமும், வாங்க வந்திருப்பவர்களிடமும் வலியச்சென்று பேச ஆரம்பித்தார். அவர் மிகவும் கண்ணியமாக, கனிவாகப் பேசியதால், அவர் சொன்னதை மக்கள் கேட்டனர். அவர் அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் ஒரு சில கேள்விகள் மட்டும் கேட்டார்: "ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? கிறிஸ்மசுக்கு இத்தனை பரிசுகள் வாங்கத்தான் வேண்டுமா? நீங்கள் செலவு செய்யும் பணத்தில் பாதியை ஏழைகளோடு பகிர்ந்துகொண்டால், உங்கள் கிறிஸ்மஸ் இன்னும் மகிழ்வாக இருக்காதா? நீங்கள் பல நாட்களாக மன்னிக்க முடியாமல் கஷ்டப்படும் ஒருவரைத் தேடிச்சென்று, அவருடன் ஒப்புரவனால், அதைவிட சிறந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இருக்க முடியுமா? இந்தக் கடைகளில் காணப்படும் கிறிஸ்மஸ் மகிழ்ச்சி உங்களுக்குச் செயற்கையாக தெரியவில்லையா?" என்று அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் கேள்விகளை எழுப்பி வந்தார்.
அவர் சொல்வதில் இருந்த உண்மைகளை உணர்ந்த பலரும், தலையசைத்தனர். பொருள்கள் வாங்க வந்த ஒரு சிலர் மீண்டும் திரும்பிச்சென்றனர். வேறு சிலர் தாங்கள் புதுப்பிக்க விரும்பிய உறவுகளுக்காக புதிய பரிசுப் பொருள்கள் வாங்கிச்சென்றனர். இன்னும் ஒரு சிலர் அந்த Mallஇல் நேரத்தைச் செலவிடுவதற்குப் பதில், அருகிலிருந்த ஒரு கோவிலுக்குச் சென்று அமைதியாக நேரத்தைச் செலவிட்டனர்.

கடைகளின் உரிமையாளர்கள் இந்த மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்டனர். அந்த Mallன் காவலாளிகளிடம் சொல்லி அந்த மனிதர் மீண்டும் அந்த Mallக்குள் நுழையாதவாறு தடுத்தனர். அந்த மனிதரை ஏன் அவர்கள் தடைசெய்தனர் என்ற கேள்வி எழுந்தபோது, "அவர் நம் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று பதில் சொன்னார்கள். "அவர் எங்கள் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்தார்" என்று அந்த வியாபாரிகள் தங்களைப்பற்றி மட்டும் சொல்லாமல், மக்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு, "அவர் நம் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று நமக்கும் சேர்ந்து பதில் சொன்னார்கள். இது, அவர்கள் படித்து, பழகி வைத்துள்ள வியாபாரத் தந்திரம். நமக்கும் சேர்த்து சிந்திப்பது, முடிவெடுப்பது என்று பல வழிகளிலும் வியாபாரிகள் நம்மை ஒரு மாய வலையில் கட்டிப்போட்டு வைத்துள்ளனர்.
வியாபாரிகள் விரித்த வலைகளில் மக்கள் சிக்காமல் இருக்க, Mallஇல் அமர்ந்து கேள்விகள் எழுப்பிய அவர், கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை கெடுத்தாரா, அல்லது அந்த மகிழ்ச்சிக்குப் புதியத் தெளிவுகளை தந்தாரா என்பது நாம் சிந்திக்கவேண்டிய கேள்வி. வியாபாரிகள் பயன்படுத்தும் பல தந்திரங்களை நாமும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. இவை நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கும். அதேநேரம், அவர்களிடமிருந்து ஒரு சில பாடங்களையும் நாம் பயில வேண்டும். கிறிஸ்மஸ் விழாவுக்காக நாம் தயாரிக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே!

கிறிஸ்மஸ் மகிழ்ச்சி என்றால் என்ன, இவ்விழாவை எவ்விதம் கொண்டாடுவது என்ற கேள்விகளுக்கு வியாபாரிகள் 'ரெடிமேட்' பதில்களை வைத்திருக்கின்றனர். அந்தப் பதில்களை, எண்ணங்களை நம்மீது திணிக்க முயன்று, வெற்றியும் பெறுகின்றனர். வியாபாரிகள் தயாரித்து வைத்திருக்கும் 'ரெடிமேட்' எண்ணங்களுக்குப் பின்னணியில் அவர்களது சுயநலம் ஒளிந்திருப்பதை எளிதில் உணரலாம். ஆனால், Mallக்கு வந்த மக்களிடம் கேள்விகள் எழுப்பிய மனிதரோ எவ்வித சுயநலமும் இல்லாமல், கிறிஸ்மஸ் விழா இன்னும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடப்படவேண்டும் என்ற எண்ணத்தில் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். Shopping Mall என்ற மாய வலையில் சிக்கியிருந்த மனிதர்களை விழித்தெழச் செய்த இந்த மனிதர், பல வழிகளில் திருமுழுக்கு யோவானை நமக்கு நினைவுபடுத்துகிறார்.

திருமுழுக்கு யோவான் நம் நகரங்களில் உள்ள கடைவீதிகளுக்கு இன்று வந்தால், மனதைப் பாதிக்கும் கேள்விகள் எழுப்பியிருப்பார். திருமுழுக்கு யோவான் ஒரு தீப்பிழம்பாக இருந்ததால், இன்னும் ஒரு படி மேலேச் சென்று, அந்தக் கடைகளில் இருந்தோரையும் தங்கள் வழியிலிருந்து மாறச்சொல்லி சவால் விட்டுருப்பார்.
சுயநலக் கலப்படம் எதுவும் இல்லாமல், அந்த Mall மனிதரோ, அல்லது திருமுழுக்கு யோவானோ கிறிஸ்மஸ் என்றால் என்ன, அதை எப்படிக் கொண்டாடுவது என்று சொல்லித்தருவதைக் கேட்கப் போகிறோமா? அல்லது, சுயநல இலாபங்களுக்காக நமது விழாக்கள் மீது வேறுபட்ட அர்த்தங்களைத் திணிக்கும் வியாபாரிகள் சொல்லித் தருவதைக் கேட்கப் போகிறோமா? "இறுதிநாள் நெருங்கியுள்ளது… ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்." என்று திருமுழுக்கு யோவான் எழுப்பும் குரலைக் கேட்கப் போகிறோமா? அல்லது, "இன்றே கடைசி நாள்... தள்ளுபடி விற்பனையில் பொருள்களை அள்ளிச் செல்லுங்கள்." என்று வியாபாரிகள் எழுப்பும் குரலைக் கேட்கப் போகிறோமா?

கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என்று வரிசையாக வரும் திருவிழாக்களுக்கு வர்த்தக உலகமும், விளம்பர உலகமும் வகுத்து வைத்துள்ள இலக்கணங்களையும், எண்ணங்களையும் நாம் ஒதுக்கும் அதே வேளையில், அவர்களிடமிருந்து ஒரு சில பாடங்களையும் நாம் பயில வேண்டும்.

ஒவ்வொரு விழாவுக்கும் வர்த்தக உலகத்தினரும், விளம்பர உலகத்தினரும் கண்ணும் கருத்துமாக ஏற்பாடுகள் செய்கின்றனர் என்று ஓரளவு எனக்குத் தெரியும். விளம்பர உலகம் பற்றிய பாடங்களைக் கடந்த சில ஆண்டுகள் மாணவ, மாணவியருக்குச் சொல்லித் தந்த அனுபவத்தின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன்.
ஒவ்வொரு விழாவுக்கும் பல மாதங்களுக்கு முன்பே இவர்களின் தயாரிப்பு, சிந்தனை ஓட்டம் ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு விழாவின் பின்னணி, அந்த நேரத்தில் உலகில் நிலவும் இயற்கைச் சூழல், குடும்பச் சூழல், தனி மனிதரின் மனச் சூழல் என்று பல கோணங்களில் இந்த விழாவைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்தச் சிந்தனைக் குவியல்களை அவர்கள் பகிர்ந்து கொள்வதை “Brainstorming Session” அதாவது சிந்தனைகள் சங்கமிக்கும் புயல் என்று சொல்வர். சென்ற ஆண்டு சொன்னதையே மீண்டும் சொல்வதில்லை. வருவதென்னவோ அதே கிறிஸ்மஸ், பொங்கல் என்றாலும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு புது கண்ணோட்டம், புது அணுகு முறை கையாளப்படும்.

இந்த விடயத்தில் நாம் பாடங்கள் படிக்கலாம். ஒவ்வொரு விழாவும் வந்தது, போனது என்று இல்லாமல், ஒவ்வொரு விழாவுக்கும் நாம் நம் குடும்பங்களோடு, உறவுகளோடு, நண்பர்களோடு அமர்ந்து, அந்தந்த விழாவின் பின்னணி, அதில் நம் செயல்பாடுகள் பற்றி சிந்தித்து விழாக்களைக் கொண்டாடினால், நமது விழாக்கள் இன்னும் ஆழமுள்ளதாய், அர்த்தமுள்ளதாய் இருக்கும். ஆனால், இப்படிச் செய்வதற்கு நாம் முற்பட்டால், நம்மை ஏற இறங்கப் பார்ப்பார்கள். நம்மை வித்தியாசமாக நினைப்பார்கள் என்று நாம் பயந்து, பேசாமல் எல்லாரையும் போல அந்தந்த விழாவுக்கு வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் செய்வதையே செய்துவிட்டு போவோம் என்று கொண்டாடி வருகிறோம்.
இப்படி நாம் விழாக்களை அர்த்தம் தெரியாமல் கொண்டாடுவதால்தான் நம் கொண்டாட்டங்கள் மனதையோ, வாழ்வையோ சிறிதும் பாதிக்காமல், வெறும் சம்பிரதாயக் கொண்டாட்டங்களாக மாறிவருகின்றன. வியாபாரிகளும், விளம்பர தாரர்களும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் தயாரிக்கும் ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கு நாம் ஆன்மீக வழிகளில் நமது திருநாட்களுக்கு தயாரிக்க ஆர்வம் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஆன்மீக உலகம் கூறும் தயாரிப்பு என்ன? நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு என்ன வகையில் தயாரிக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கு இன்றைய நற்செய்தி வரிகள் விடைபகர்கின்றன. அதேவேளையில், நாம் கடைபிடிக்கும் அடுத்த இரு நாட்களுக்கும் சேர்த்து இன்றைய நற்செய்தி நமக்குப் பாடங்களைத் தருகிறது...

டிசம்பர் 10, உலகெங்கும் மனித உரிமைகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த உலக நாளையொட்டி வரும் ஞாயிறன்று இந்தியாவில் தலித் விடுதலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. எனவே டிசம்பர் 9,10 ஆகிய இரு தேதிகளில் நீதியையும், சமத்துவத்தையும் வலியுறுத்தும் இரு நாட்களை நாம் கடைபிடிக்கிறோம்.

இவ்விரு நாட்களையும் நாம் கொண்டாடுகிறோம் என்று சொல்வதற்கு மனம் ஒப்புக் கொள்ளவில்லை. என்று நம் உலகில் மனித உரிமைகள் அனைவருக்கும் சமாகக் கிடைத்து, அனைவரும் தலை நிமிர்ந்து மதிப்புடன் வாழ முடிகிறதோ... என்று இந்திய மண்ணில் தலித் மக்கள் முழுமையான விடுதலை பெற்று, மனிதர்களாக வாழ முடிகிறதோ... அன்று இவ்விரு நாட்களையும் கிறிஸ்மஸ், உயிர்ப்பு பெருவிழாக்களைப் போல் சிறப்பாக கொண்டாட முடியும். அதுவரை, இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை நாம் மீண்டும், மீண்டும் உலகில் உரக்கச் சொல்லி, தூங்குவதுபோல் நடிக்கும் இந்த உலகச் சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பிய வண்ணம் இருக்க வேண்டும். இதோ இறைவாக்கினர் எசாயா இன்றைய நற்செய்தியின் வழியாக நம் அனைவருக்கும் விடுக்கும் அறைகூவல்:

லூக்கா நற்செய்தி 3: 4-6
பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.

தற்பெருமையில் பூரித்துப்போய், தலைகனம் மிகுந்து வாழும்போது உள்ளத்தில் மலைகள் தோன்றும். துன்பத்தைக் கண்டு நொறுங்கிப் போகும்போது, பள்ளங்கள், பள்ளத்தாக்குகள் உருவாகும். இந்த மலைகளைத் தாழ்த்தி, பள்ளங்களை நிரப்புவதற்குத் தேவையான ஆயுதங்கள் எங்கே? தேடி எங்கும் போகவேண்டாம். நம்மிடம் உள்ளன. ஒருவேளை, இவைகளை அதிகம் பயன்படுத்தாதனால், தூசி பிடித்து, துரு பிடித்துப் போயிருக்கலாம். இந்த ஆயுதங்கள் எவை? தாழ்ச்சி, நம்பிக்கை... தாழ்ச்சி, நம்பிக்கை இவைகளைக் கொண்டு மனதை பண்படுத்துவோம். இறைவன் இந்தப் பாதையில் வருவார். நம் மனதில் தங்குவார்.








All the contents on this site are copyrighted ©.