2012-12-07 16:09:07

மத்திய கிழக்குப் பகுதி நாடுகளில் அமைதியை உறுதிப்படுத்த உலக நாடுகள் அவசரமாக உதவிகள் செய்யவேண்டும் - ஆயர்களின் அறிக்கை


டிச.07,2012. பாலஸ்தீனம் தொடர்பான விடயங்களில் நீதியான, அமைதியை வளர்க்கும் தீர்வுகளை உலகின் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து காணவேண்டும் என்று மத்திய கிழக்குப் பகுதி கத்தோலிக்க ஆயர்களும், முதுபெரும் தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்திய கிழக்குப் பகுதியில் Harissa எனும் நகரில் இப்புதனன்று நிறைவுற்ற ஆண்டு கூட்டத்தின் இறுதியில் அனைத்து ஆயர்களும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
பாலஸ்தீனம் தவிர, மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள பல நாடுகளிலும், சிறப்பாக, சிரியாவிலும் ஒப்புரவை வளர்க்கவும், அமைதியை உறுதிப்படுத்தவும், அப்பாவி மக்களின் வாழ்வைப் பாதுகாக்கவும் உலக நாடுகள் அவசரமாக உதவிகள் செய்யவேண்டுமென்று ஆயர்களின் அறிக்கை அழைப்பு விடுக்கிறது.
அமைதியை வளர்க்கும் ஒரு முக்கியத் தீர்வாக, மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளும் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளைக் களைந்து ஒன்றிணையவும், இஸ்லாம் மதத்தினருடன் உரையாடல்களை வளர்க்கவும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
இப்புதனன்று தன் 92ம் வயதில் இறைபதம் சேர்ந்த அந்தியோக்கியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தலைவர் 4ம் இக்னேசியஸ் மறைவுக்கு, ஆயர்களின் ஆழ்ந்த அனுதாபங்களை Maronite ரீதி முதுபெரும் தலைவர் கர்தினால் Bechara Boutros Rai தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.