2012-12-07 15:56:07

கூடங்குளம் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு


டிச.07,2012. கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், அணு உலையைத் துவக்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புக்கள் சார்பில், கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்புத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த அந்த வழக்கு விசாரணை இவ்வியாழனன்று நிறைவடைந்தது.
பூவுலகின் நண்பர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் நாராயணசாமி, அணு உலை இம்மாத இறுதியில் துவங்கும் என நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அணுக்கழிவுகளை எங்கு சேமித்து வைப்பது என்பது கூட முடிவாகாத நிலையில், அணு உலையை செயல்பட அனுமதிக்கக் கூடாது, இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
அணுக்கழிவுகள் எங்கு சேமித்து வைக்கப்படும் என்பது குறித்து 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீசிமன்றம் உத்தரவிட்டது. நேற்று உச்சநீதிமன்றத்தில் இதுபற்றித் தெரிவித்த மத்திய அரசு, அணுக்கழிவுகளை எங்கு சேமித்து வைப்பது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால், அணு உலையை அடுத்துள்ள ராதாபுரம், இடிந்தகரை, உவரி, பெருமணல் உள்பட 10 கிராமங்களில் மக்களைத் தங்கவைக்க போதிய வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்த 6 மாதங்களுக்குள் கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் பேரிடர்கால தற்காப்புப் பயிற்சிகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்பகுதியின் குடிநீர் தேவைக்காக, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் என்பது மிகவும் நீண்டகாலம் என்றும், அதை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.








All the contents on this site are copyrighted ©.