2012-12-06 16:03:24

திட்டங்கள் வகுப்பதில் அரசு காட்டும் தீவிரம் அவற்றை நிறைவேற்றுவதில் காட்டுவதில்லை - இந்திய ஆயர் பேரவை அதிகாரி


டிச.06,2012. இந்தியாவின் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வாழும் கிராமங்களை முன்னேற்றுவதற்கு இந்திய அரசு கொணர்ந்துள்ள புது திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று எனினும், இது வெறும் காகிதத்தில் பதிந்துள்ள திட்டமாக மாறும் ஆபத்தும் உள்ளதென்று இந்திய ஆயர் பேரவையின் அதிகாரி ஒருவர் கூறினார்.
பிரதமரின் கிராமத் திட்டம் என்ற பெயருடன் இச்செவ்வாயன்று மத்திய அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தைக் குறித்து பேசிய இந்திய ஆயர் பேரவையின் பழங்குடியினர் பணிகள் அவையின் செயலர் இயேசு சபை அருள் பணியாளர் Stanislaus Tirkey, இத்திட்டத்தைப் பற்றிய ஐயங்களை வெளியிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் 1000 கிராமங்கள் பயன்பெறும் என்றும், இத்திட்டத்தின் முதல் கட்டமாக, அஸ்ஸாம், பீகார், இமாச்சல் பிரதேசம், இராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்கள் பயன்பெறும் என்றும் தெரிகிறது.
சமுதாய நீதி மற்றும் முன்னேற்றத் துறையின் அமைச்சர் Balram Naik, மூன்று ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளதைத் தொடர்ந்து, பொதுவாக திட்டங்கள் வகுப்பதில் அரசு காட்டும் தீவிரம் அவற்றை நிறைவேற்றுவதில் காட்டப்படுவதில்லை என்று அருள்தந்தை Stanislaus Tirkey சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.