2012-12-05 15:56:04

டிச.06, 2012. திருவருகைக்காலச் சிந்தனை - அருள்பணி. இயேசு கருணா


RealAudioMP3 “என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார். என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.” (எசாயா 25:8)
அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று வளர்ந்து கடவுளுக்கே சவால் விடத் துடிக்கும் மனிதர்கள் நோய், முதுமை, இறப்பு இம்மூன்றின் முன் மண்டியிட்டுவிடுகின்றனர். நோய், முதுமை. மரணம் இம்மூன்றையும் நினைக்கும்போது வாழ்க்கைப் போராட்டத்தில் மனிதர்கள் கொஞ்சம் தடுமாறித்தான் போய்விடுகின்றனர். மனிதர்களுக்கு பிற மனிதரின் துணை தேவைப்படுவதும் இம்மூன்று நேரங்களில் தாம். நம் மருந்துகள் நோயைத் தடுத்துவிடலாம், அழித்து விடலாம், முதுமையைத் தாமதப்படுத்தலாம். ஆனால் மரணத்தின் முன் அறிவியலுக்குத் தோல்வியே. மனிதனின் பிறந்த நாள் முதல் அவன் வாழ்வது ‘சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்தான்’. சாவின் நிழல் நம்மைச் சூழும்போது ஒளியாக வருவார் மெசியா என்ற செய்தியைத் தருகின்றார் இறைவாக்கினர் எசாயா. மரணத்தில் கொடிய மரணம் - போரினாலும், பகைமையினாலும், ஆணவத்தாலும்ää அநீதியாலும் ஒருவர் மற்றவரை அழித்துக் கொள்வது. மெசியாவின் வருகை அழிப்பது இந்த இறப்பைத்தான். இறப்பு என்பது பிறப்பைப் போலவே ஒரு எதார்த்தம். நாம் பேசும்போது முதல் வார்த்தை இறந்தால்தான் அடுத்த வார்த்தை பிறக்க முடியும். நாம் நடக்கும் போது முதல் அடி இறந்தால் தான் அடுத்த அடியை நாம் எடுத்து வைக்க முடியும். நம் உடலின் செல்கள் அன்றாடம் அழிந்தால்தான் நம் உடல் வளர்ச்சி சாத்தியமாகும். ஆகவே இறப்பு ஒரு எதார்த்தம். ஆனால் நம்முள் இருக்கும் வெற்றிடத்தை அடைக்க மற்றவர் உயிரை எடுப்பதும்ää மற்றவரை அழிப்பதும் எதார்த்தம் அல்ல, அபத்தம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் ஏதோ ஒரு போரட்டம் இருக்கும். அப்படியிருக்க, அந்தப் போராட்டத்திற்கு நாம் மருந்திடவில்லையென்றாலும், காயப்படுத்தாமல் இருக்கலாமே? வாளும், துப்பாக்கியும்தான் பிறரைக் கொல்லும் என்பதல்ல. நம் சிந்தனைகளும், சொற்களும், செயல்களும் கூட பிறரை அழித்துவிடலாம். நாம் சந்திக்கின்ற ஆயிரக்கணக்கான நபர்களில் ஒரு நபரின் கண்ணீரை நாம் துடைக்கமுடிந்தால்கூட நாம் இந்தப் பிறவிப் பயனை அடைந்துவிட்டோம்!







All the contents on this site are copyrighted ©.