2012-12-04 15:47:47

விவிலியத்
தேடல் திருப்பாடல்கள் 145 முதல் 150 முடிய... பகுதி 2


RealAudioMP3 2012ம் ஆண்டின் இறுதி மாதத்தை ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் சரியாக நான்கு வாரங்களில் 2013 என்ற புதிய ஆண்டைத் துவக்குகிறோம். ஓர் ஆண்டின் இறுதியை நெருங்கும்போது, அதை பின்னோக்கிப் பார்ப்பது நமது வழக்கம். இவ்வாறு நாம் பார்க்கும் பின்னோக்கியப் பார்வை எவ்வகையில் அமைகிறதோ, அதை பொறுத்து, நம் உள்ளத்தின் உணர்வுகளும் அமையும். நமது பின்னோக்கிய பார்வையில், ஞாபகங்கள் முக்கியப் பங்கு வகிக்கும். கடந்து வந்த 2012ம் ஆண்டைப்பற்றிய நமது ஞாபகங்களில் நல்லவை ஆழமாகப் பதிந்திருந்தால், உள்ளம் மகிழ்வால் நிறையும், நாவிலிருந்து வாழ்த்துக்கள் வெளிவரும்... மாறாக, நமது ஞாபகங்களில் துயர நிகழ்வுகளே அதிகமாக, ஆழமாகப் பதிந்திருந்தால், கண்ணீர் மட்டுமே நமது பதிலாக அமையும்.

ஆண்டின் இறுதியில் திருப்பாடல்கள் நூலின் இறுதி ஆறு திருப்பாடல்களை நாம் சிந்தித்து வருவது பயனுள்ள, பொருத்தமான பயிற்சியாக எனக்குத் தெரிகிறது. உங்களுக்கும் இது பயன்தரும் என்ற நம்பிக்கையில் இந்தப் பயிற்சியை நாம் இன்று தொடர்கிறோம்.
இந்த ஆறு திருப்பாடல்களில் இறுதி ஐந்து திருப்பாடல்கள் - அதாவது, 146 முதல் 150 முடிய உள்ள ஐந்து திருப்பாடல்கள் - 'அல்லேலுயா' திருப்பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் 'அல்லேலுயா' என்ற வார்த்தையுடன் ஆரம்பித்து, 'அல்லேலுயா' என்று முடிகின்றன. திருப்பாடல்கள் நூலில் மூன்று இடங்களில் இவ்வாறு 'அல்லேலுயா' திருப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை, இஸ்ரயேல் மக்கள் Hallel பாடல்கள் அதாவது புகழ்ச்சிப் பாடல்கள் என்று அழைத்தனர். இன்றும் யூதர்கள் மத்தியில் இத்திருப்பாடல்கள் பாடப்படுகின்றன.
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை மீட்ட இறைவனைப் புகழ்ந்து பாடும் பாடல்களாய், சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்களாய் இருபகுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் திருப்பாடல்கள் 111, 113, 116, 135 ஆகியவை குறிப்பிடத்தக்கது. இந்த Hallel பாடல்களின் ஒரு மகுடமாக அமைவது நாம் தற்போது சிந்திக்கும் இறுதி ஐந்து 'அல்லேலுயா' பாடல்கள்.

'அல்லேலுயா' என்பது ஓர் எபிரேயச் சொல். "யாவே இறைவனைப் புகழுங்கள்" என்ற ஓர் அழைப்பை விடுக்கும் அற்புதமான சொல் 'அல்லேலுயா'. எபிரேய மொழியில் கூறப்பட்டுள்ள அனைத்துச் சொற்களுக்கும் இணையான சொற்கள் உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. ஆனால், 'அல்லேலுயா' என்ற இச்சொல் கிறிஸ்தவ உலகமெங்கும் எவ்வித மொழிபெயர்ப்பும் இன்றி, அப்படியே பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒரு சொல்லில் மகிழ்வு, வெற்றி, நன்றி என்ற அனைத்து உணர்வுகளும் கலந்து ஒலிப்பதால், இச்சொல் எவ்வித மாற்றமும் இன்றி பயன்படுத்தப்படுகிறது.
கத்தோலிக்கத் திருவழிபாட்டில், 'அல்லேலுயா' வாழ்த்தொலி தவக்காலத்தில் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும், தவக்காலத்திலும், இந்த வாழ்த்துச் சொல்லுக்கு இணையாக, 'இறைவனுக்குப் புகழ்' என்ற வாழ்த்தொலி பயன்படுத்தப்படுகிறது. ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளில் 'அல்லேலுயா' வாழ்த்தொலி தவக்காலத்திலும் தொடர்ந்து சொல்லப்படுகிறது. இச்சபையினரைப் பொறுத்தமட்டில், தவமும் மகிழ்வுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சியே என்பதால், 'அல்லேலுயா' வாழ்த்தொலி இச்சபையினரின் வழிபாட்டு ஆண்டு முழுவதும் தொடர்கிறது.
மொத்தத்தில், இறைவனைப் போற்றுவதற்கும், புகழ்வதற்கும் நேரமும், காலமும் இல்லை என்பதை நமக்கு உணர்த்தவே, இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இறைவனைப் புகழ்வதற்கும், அவருக்கு நன்றி பகர்வதற்கும் நேரமும் காலமும் முக்கியமல்ல, ஒருவகை மன நிலையே முக்கியம் என்பதை உணர்த்தும் ஒரு கதை இதோ:

யூத குரு Maggid என்பவரின் சீடர்கள் ஒருநாள் அவரை அணுகி, "குருவே, நமது கட்டளை நூலும், முன்னவரும் சொல்லியிருப்பது எங்களுக்குக் குழப்பமாக உள்ளது" என்று ஆரம்பித்தனர். அவர்கள் குழப்பத்திற்குக் காரணம் என்ன என்று குரு கேட்டதும், "நல்ல நாட்களுக்கு இறைவனுக்கு நன்றி சொல்வதுபோல், கடினமான நாட்களுக்கும் நன்றி செலுத்தவேண்டும் என்று நமது புனித நூல் சொல்கிறதே... இது எப்படி முடியும்? இப்படி செய்தால் நன்றி என்ற உணர்வுக்கே அர்த்தமில்லாமல் போய்விடுமே!" என்று சீடர்கள் கேட்டனர்.
குரு அவர்களுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், "அருகிலுள்ள மலைமேல் ஒரு கிராமம் உள்ளது. நீங்கள் அங்கு சென்று, அங்கு வாழும் Reb Zusya என்பவரிடம் உங்கள் கேள்விக்கு விடை கேளுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். சீடர்களும் கிளம்பிச் சென்றனர். கடினமான ஒரு பயணத்திற்குப் பின், இறுதியில் பரிதாபமான நிலையிலிருந்த ஒரு குடிசையை அடைந்தனர். குடிசைக்குள் வயது முதிர்ந்த ஒருவர் சன்னலருகே அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார். சீடர்கள் உள்ளே நுழைந்ததும், "வாருங்கள் நண்பர்களே, உங்களை வரவேற்க என்னால் எழுந்து நிற்க முடியவில்லை. காலில் அடிபட்டுவிட்டது" என்று சொன்னார். சீடர்கள் அவர் இருந்த நிலையைக் கண்டு மிகவும் பரிதாபப்பட்டனர். உடனே அவர், "ஏதாவது சாப்பிடுகிறீர்களா? என்னிடம் சிறிது ரொட்டியும், நீரும் உள்ளன" என்று உபசரித்தார்.
சீடர்கள் அவரிடம், "எங்களுக்கு உணவு எதுவும் வேண்டாம். ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தக் கேள்விக்குரிய பதிலை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி எங்கள் குரு Maggid உங்களிடம் அனுப்பினார்" என்று சொல்லிவிட்டு, தங்கள் கேள்வியைத் தொடர்ந்தனர்: "நல்ல நாட்களுக்கு இறைவனுக்கு நன்றி சொல்வதுபோல், கடினமான நாட்களுக்கும் நன்றி செலுத்தவேண்டுமென்று நம் முன்னோர்கள் ஏன் சொல்லிச் சென்றுள்ளனர்?" என்று கேட்டனர் சீடர்கள்.
Reb Zusya ஒரு புன்னகையுடன் பதில் சொன்னார்: "குரு Maggid உங்களை என்னிடம் ஏன் அனுப்பினார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அப்படி ஒரு பெரும் மேதை அல்ல. என்னைப் பொறுத்தவரை, இதுவரையில் எனக்குக் கடினமான நாட்கள் இருந்ததே கிடையாது. கடவுள் எனக்குத் தந்த அனைத்து நாட்களும் அற்புதங்களால் நிறைந்தவை"என்று அவர் பதில் சொன்னார்.

சீடர்கள் தாங்கள் தேடி வந்த பதிலைவிட அதிகம் தெளிவு பெற்றிருப்பார்கள் என்று நம்பலாம். வயது முதிர்ந்த நிலை, காலில் பட்ட அடி, வறுமையான சூழல் என்ற எதுவும் Reb Zusya அவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அவரைப் பொறுத்தவரை, அவரது நாட்கள் அற்புதங்களால் நிறைந்துள்ளன. இவ்விதம் வாழ்வதற்கு அவரது மன நிலை, அவரது கண்ணோட்டம் இவைகளே காரணம்.

சென்ற வாரம் நமது தேடலில் மேலாண்மை இயல் பேராசிரியரான Kenneth Blanchard கூறிய 'ஒரு நிமிடப் புகழ்தல்' என்ற பாடத்தை இத்திருப்பாடல்களின் வழியே உணர முயன்றோம். மேலாண்மையைப் பற்றிய எழுதப்பட்டுள்ள மற்றொரு புத்தகத்தைப்பற்றி Ken Blanchard கூறும் பரிந்துரை இதுதான்: "குறைசொல்லுதல் என்ற நீண்ட தொடர் வண்டியிலிருந்து இறங்கி, இந்த நூலைப் படியுங்கள்" என்று அவர் கூறியுள்ளார். அவர் பரிந்துரைக்கும் இந்நூலின் பெயர் என்ன? Jon Gordon என்பவர் எழுதிய "The No Complaining Rule"... அதாவது, "குறை சொல்லாமல் இருக்கும் சட்டம்" என்ற நூல்.

பல நிறுவனங்கள் நஷ்டமடைந்ததற்கான முக்கிய காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முக்கிய உண்மை என்ன? ஒவ்வொரு பெரும் நிறுவனமும் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை என்ன? நிறுவனத்தில் குறை காண்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டுள்ள ஊழியர்களே மிகப் பெரிய பிரச்சனை. ஒருவர், அல்லது இருவரிடம் ஆரம்பமாகும் இந்தப் பிரச்சனை ஒரு தொடர் வண்டியாக நீண்டுகொண்டே போகும். எனவே, எந்த ஒரு நிறுவனமும் திறம்பட இயங்க வேண்டுமெனில், அங்குள்ள ஊழியர்கள் குறை சொல்வதை நிறுத்தவேண்டும். இது ஒவ்வொரு நிறுவனத்திலும் ஓர் எழுதப்படாதச் சட்டமாக கொண்டுவரப்பட வேண்டும் என்று இந்நூலின் ஆசிரியர் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்.

குறைகள் அற்ற வாழ்வு என்பது இம்மண்ணகத்தில் சாத்தியமா என்பது கேள்வியே... ஆனால், வெளி உலகில், நம் குடும்பத்தில், நம் உடலில் காணப்படும் குறைகள் நம்மை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பதைப் பொறுத்து நம் வாழ்வு அமையும்... புகழுரைகள் பாடும் ஒரு வாழ்வாக, அல்லது, புலம்பல்களில் வாடும் ஒரு வாழ்வாக நமது வாழ்வை மாற்றுவது நம் கண்ணோட்டத்தைப் பொறுத்தது...

குறைகாணும் நம் பழக்கத்திற்கு ஒரு மாற்றாக விவிலியத்தில் கூறப்படும் ஒரு சில அறிவுரைகளுடன் நம் விவிலியத் தேடலை இன்று நிறைவு செய்வோம்:
புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5 14-18
அன்பர்களே! நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே: சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள்: மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்: வலுவற்றோர்க்கு உதவுங்கள்: எல்லாரோடும் பொறுமையாயிருங்கள். எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள். எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்.

புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகம் 5 15, 19-20
ஆகையால் உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.








All the contents on this site are copyrighted ©.