2012-12-04 14:50:51

அமெரிக்கத் திருஅவையின் அனைத்துலக மாநாடு உரோம் நகரில் நடைபெறவுள்ளது


டிச.04,2012. உலகின் பல பகுதிகளிலும் பிரிவினைச் சுவர்கள் தகர்ந்துவந்ததைச் சுட்டிக்காட்டி, மூன்றாம் மில்லேன்னியத் துவக்கத்தில் முத்திபெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் கிறிஸ்தவ ஒன்றிப்பை வலியுறுத்தி விடுத்த அழைப்பை வத்திக்கான் அதிகாரி ஒருவர் மீண்டும் இச்செவ்வாயன்று நினைவு கூர்ந்தார்.
டிசம்பர் 9, வருகிற ஞாயிறு முதல் டிசம்பர் 12, புதன்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறவுள்ள அமெரிக்கத் திருஅவையின் அனைத்துலக மாநாடு குறித்து இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Marc Ouellet, மாநாட்டின் குறிக்கோள் பற்றி பேசுகையில் இவ்வாறு கூறினார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி, வட மற்றும் தென் அமெரிக்காவில் எவ்விதம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கர்தினால் Ouellet கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அமெரிக்க ஆயர்களுடன் நடத்திய சிறப்பு மாமன்றத்தின் 15ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் மாநாடு இது என்றும், இலத்தீன் அமெரிக்கத் திருப்பீட அவையுடன், Knights of Columbus அமைப்பும், Guadalupe ஆய்வுக் கழகமும் இணைந்து, இந்த மாநாட்டை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், Knights of Columbus அமைப்பின் தலைவர் முனைவர் Carl Anderson, திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi ஆகியோர் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.