2012-12-03 15:55:09

வாரம் ஓர் அலசல் - ஏழ்மையும் நோய்களும்


டிச.03,2012. நலிந்த, வயதான பெண் ஒருவர், பலசரக்குக் கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு இரண்டு கைகளிலும் பைகளைத் தூக்கிக் கொண்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். பேருந்து வந்தது. இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு ஏறினார். பேருந்தில் பயணிகள் கூட்டம். பேருந்தின் கடைசியில் ஓர் இடம் இருந்தது. அந்த மூதாட்டி அந்த இடத்தில் போய் அமருவதற்காகத் தட்டுத் தடுமாறிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் ஏறிய ஓர் இளைஞன் அந்த மூதாட்டியின் தோளில் ஒரு கைபோட்டு அவரை அமுக்கிவிட்டு வேகமாக முன்னேறி அந்த இடத்தில் போய் அமர்ந்தான். அந்த மூதாட்டியோ கூட்ட நெருசலில் ஒரு சிலர் மேல் தடுக்கி கீழே விழுந்து விட்டார். அவரது சாமான் பைகளும் கீழே சிதறின. அந்தப் பேருந்தில் பயணம் செய்த ஒரு விவரமான பெண், “ச்சே.. வயதானவர்களிடம் நடந்து கொள்வது எப்படி என்று தெரியாத பையனாக இருக்கிறானே” என்று முணுமுணுத்தார். அதில் பயணம் செய்த வழக்கறிஞர் ஒருவர், “இந்த மாதிரி நடத்தைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். இவரது எண்ணமெல்லாம் சட்டத்தைப் பற்றியே இருந்தது. அதில் பயணம் செய்த மருத்துவர் ஒருவர், “ஐயோ பாவம், இந்த வயதான பெண்ணுக்குக் குறைந்தது மூன்று விலா எலும்புகளாவது முறிந்திருக்கும். எனவே அறுவைச் சிகிச்சை தேவைப்படும்” என்று யோசித்துக் கொண்டிருந்தார். அதில் பயணம் செய்த உளவியல் மருத்துவர் ஒருவர், “இந்த இளைஞன் மனநலம் குன்றியவனாக இருக்க வேண்டும். எனவே இவனுக்கு உளவியல் ரீதியாகச் சிகிச்சை தேவை” என்று நினைத்துக் கொண்டிருந்தார். இந்த நால்வரும் நான்கு கோணத்தில் இந்த நிகழ்வைப் பார்த்தனர். ஆனால் இவர்களில் ஒருவர்கூட, இந்த இளைஞனின் செயல் சரியா, தவறா என்ற கேள்வியை எழுப்பவில்லை. எழுத்தாளர் Shiv Khera சொல்கிறார் : “எப்பொழுதும் நமது மதிப்பீட்டு வாழ்வுமுறை தெளிவாக இருந்தால் இப்படிக் கேள்வி எழுப்புவதில் தவறில்லை” என்று.
வாழ்க்கையில் மதிப்பீடுகள் சரியாக இருப்பதைத்தான் எல்லோருமே எதிர்பார்க்கின்றனர். ஒருவரின் வாழ்வின் மதிப்பீடுகளைப் பொருத்தே அவரது நடத்தையும் இருக்கும். ஒருவரது நடத்தையை வைத்தே அவரது வாழ்வின் மதிப்பீடுகளை எடைபோட்டு விடலாம். டிசம்பர் முதல் தேதி எய்ட்ஸ் நோய் தினம். டிசம்பர் 3 இத்திங்கள் மாற்றுத் திறனாளிகள் தினம். எய்ட்ஸ் நோயாளிகளும், மாற்றுத் திறனாளிகளும் வீட்டிலும் வெளியிலும் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள் என்று சிந்திப்பது நல்லது. இந்த நவம்பர் 28ம் தேதி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் நடத்திய ஊர்வலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன. ஆனால் இந்தப் போராட்ட ஊர்வலங்களுக்குக் காரணம் என்ன என்று கேள்வி கேட்டவர்கள், அது பற்றிச் சிந்தித்தவர்கள் எத்தனை பேர்!. எய்ட்ஸ் நோயாளர் நிலையும் இப்படித்தான். தாங்கள் எந்தத் தவறுமே செய்யாத சூழலில் தாயிடமிருந்து எய்ட்ஸ் நோய்க் கிருமிகளைப் பெற்றுள்ள இலட்சக்கணக்கான பிள்ளைகளின் நிலை என்ன?
இந்த நவம்பர் 28ம் தேதி புதனன்று தனது வழக்கமான புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், எய்ட்ஸால் தாக்கப்பட்டுள்ள சிறார் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் திருஅவை நிறுவனங்கள் செய்து வரும் பல்வேறு முயற்சிகளை ஊக்கப்படுத்தினார். இந்த நோய்த் துன்பத்தை வருவிக்கின்றது என்று சொல்லி, இதனால் இலட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர் என்றும் திருத்தந்தை கூறினார்.
சீனாவில் 2012ம் ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாத காலத்தில் 17 ஆயிரத்து 740 பேர் எய்ட்ஸ் நோய்க்குப் பலியாகி உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 8.6 விழுக்காடு அதிகமாகும். சீனாவில் மொத்தம் 4 இலட்சத்து 92 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 15 முதல் 24 வயது வரையிலானவர்கள் மத்தியில் இந்நோய்த் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் சீன நலவாழ்வு அமைப்பு கூறியுள்ளது. இந்த 2012ம் ஆண்டின் அனைத்துலக எய்ட்ஸ் நோய்த் தினத்தை முன்னிட்டு ஐ.நா. எய்ட்ஸ்நோய்க் கட்டுப்பாட்டு நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கையில், 2005ம் ஆண்டுக்கும் 2011ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் எய்ட்ஸ் நோய்த் தொடர்புடைய இறப்புக்கள் 25 விழுக்காட்டுக்கு மேலாகக் குறைந்திருப்பதாகவும், இந்த நோய்த் தடுப்புக் சிகிச்சை பெறுபவர்கள் கடந்த 24 மாதங்களில் 63 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 25 நாடுகளில் 50 விழுக்காட்டுக்கு மேலாகக் குறைந்திருப்பதாகவும், குறிப்பாக, 2001ம் ஆண்டிலிருந்து மலாவியில் 73 விழுக்காடும், போஸ்ட்வானாவில் 71 விழுக்காடும், நமிபியாவில் 68 விழுக்காடும், ஜாம்பியாவில் 58 விழுக்காடும், ஜிம்பாபுவேயில் 50 விழுக்காடும், தென்னாப்ரிக்கா மற்றும் சுவாசிலாந்தில் 41 விழுக்காடும் குறைந்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று உலகில் 68 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை தேவைப்படுகின்றது. ஆனால் அதைப் பெறுவதற்கு அவர்களுக்கு வசதி கிடையாது. HIV நோய்க் கிருமிகளுடன் வாழ்ந்து வரும் 3 கோடியே 40 இலட்சம் பேரில் ஏறக்குறைய பாதிப் பேர் தங்களைத் தாக்கியுள்ள நோயின் நிலை குறித்து அறியாமல் இருக்கிறார்கள். தங்களது நோய்க் குறித்து அதிகமான மக்கள் அறிந்திருந்தால் அவர்களே சிகிச்சை பெற முன்வருவார்கள் என்றும் ஐ.நா.அறிக்கை கூறுகிறது. இந்நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், 2011ம் ஆண்டில் இவ்வாறு புதிதாகத் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 இலட்சமாக இருந்தது. இந்த எய்ட்ஸ் நோயாளிகள் பாகுபாட்டுடன் நோக்கப்படுவது இன்னும் சமூகங்களில் இருக்கத்தான் செய்கிறது. தொழிலாளர் மத்தியில் பாகுபாட்டுடன் பார்க்கப்படுவது மலேசியாவில் 54 விழுக்காடு என்கிறது அவ்வறிக்கை. அதேசமயம், இந்த 2012ன் நிலவரப்படி, இந்நோய்க் கிருமிகளைப் பரப்புகின்றவர்களைத் தண்டிப்பதற்கு ஏறத்தாழ 60 நாடுகளில் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. எய்ட்ஸ் நோய் முதன் முதலாகக் கண்டறியப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியுள்ள இந்தியா உட்பட 45 நாடுகளில் இந்நோயாளிகள் பயணம் செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எய்ட்ஸ் நோயால் நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது. தென் மண்டல ஆப்ரிக்க நாடுகளிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த HIV/AIDS நோய், சிறாரின் கல்வி வாய்ப்புக்கு எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் நிலவும் நிதி நெருக்கடியினால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை. தென் மண்டல ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோய் வறுமையின் நோய் என்றே சொல்கிறார்கள். ஏனெனில் ஏழைகளே இந்நோயால் அதிகம் தாக்கப்படுகிறார்கள். எய்ட்ஸ் நோய் ஒரு பக்கம் பாதிப்பு ஏற்படுத்த, இவ்வாண்டில் இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் 35 ஆயிரம் பேருக்குமேல் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதிலும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு நலவாழ்வு கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை தவிர, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் போலியோ நோய்கெதிரான தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று நிரூபித்தால் மட்டுமே, பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உலகளவில் போலியோ நோயை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று நாடுகளில் போலியோ ஒரு கொள்ளை நோயாக உள்ளது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
நோய்கள் வறுமைக்கு மேலும் தீனி போடுகின்றன. நோய்கள் பெண்களின் வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றன என்று, திருச்சி மரியின் ஊழியர் சபையின் அருள்சகோதரி மருத்துவர் Conrad விவரிக்கிறார்.
கவிஞர் மு.மேத்தா எழுதியிருப்பது போல, வெளியேறு வெளியேறு என்றால் எருமையே வெளியேறாது. வறுமையா வெளியேறும்?. போடு போடு என்றால் மயில் இறகு போடாது. போடு போடு என்று போட்டால்தான் போடும். எனவே நோயை ஒழிப்போம், பாகுபாட்டை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் எதனையும் ஒழித்துவிட முடியாது. செயலில் துணிச்சலுடன் இறங்க வேண்டும். வாழ்வில் சவால்களை ஏற்பவர்களே வாழ்க்கைச் சூழலைச் சாதகமாக்கும் வல்லமை கொண்டவர்கள்.
அன்பர்களே, நம்மை நோயினின்று காத்துக் கொள்வதற்கு நமது மனதில் எப்பொழுதும் நல்ல எண்ணங்களை வளர விடுவோம். இவையெல்லாம் நோயை விரட்டும் துப்புரவுப் பணியாளர்கள். நமது எண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும்.








All the contents on this site are copyrighted ©.