2012-12-03 15:45:17

திருவருகைக்காலச் சிந்தனை - வழங்குபவர் அருள்திரு இயேசு கருணா


டிச.04, 2012. RealAudioMP3 “அந்நாளில், ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும். அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும். பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும்.” (எசாயா 11:6)
இறைவாக்கினர் எசாயாவின் இறையாட்சிக் கனவு இது. ஆண்டவர் ஆவி ஆட்சி செய்யும் எருசலேம் நகரம் இப்படி இருக்கும் என இஸ்ராயேல் மக்களுக்கு நம்பிக்கை தருகின்றார். இந்த உருவகம் ஒரு மனித மனத்தைப் பிரதிபலிக்கின்றது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் நீண்ட பயணம் தன் ஆழ்மனப் பயணம்தான். இந்த உலகில் ஓயாத ஒரு போராட்டம் உள்மனப்போரட்டம்தான். நம் வாழ்வில் காணும் வெளிப் போராட்டங்கள் மனப்போராட்டங்களின் பிரதிபலிப்பே. பழிவாங்கத் துடிக்கும் ஓநாய், சாந்தமாய் நிற்கும் செம்மறி, ‘வலிமையில் எனக்கு நிகர் யாருமில்லை’ என ஆணவத்தோடு சவால்விடும் சிறுத்தைப்புலி, ‘ஐயோ! என்னால் நிற்கக் கூட முடியவில்லையே’ என வலுவிழந்து அழும் கன்று, ‘எந்தச் சுமையையும் நான் சுமந்து விடுவேன். பயமில்லை’ என முறையிடும் காளை, ‘எல்லாவற்றிற்கும் பிறரைச் சார்ந்து நிற்கும் குழந்தை’. ‘மனிதன் பாதி, மிருகம் பாதி’ எனப் பிளவுண்டு கிடக்கும் மனித மனம் அமைதி காண ஒரே வழி: ஆண்டவரின் ஆவியும், அவர் அருளும் ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல் மற்றும் நுண்மதியுமே! மாலையில் ஒரு ஜென் துறவியைச் சந்திக்கின்ற இளைஞன் தூரத்தில் தெரிகின்ற மலையைக் கடக்க யோசனை கேட்கின்றான். எரிகின்ற ஒரு லாந்தர் விளக்கை அவனிடம் கொடுத்து ‘போய் வா’ என்கிறார் துறவி. ‘இவ்வளவு பெரிய மலையைக் கடக்க எப்படி இது வழி காட்டும்’ கேட்கின்றான் இளைஞன். இந்த ஒளியை வைத்து 10 அடிகளைக் கட, பின் 10 அடிகள். பின் மலையையே கடந்து விடலாம். கடக்க கடக்க ஒளி. நடக்க நடக்க பாதை.








All the contents on this site are copyrighted ©.