2012-12-03 16:32:18

எய்ட்ஸ் நோய் குறித்து "மேலும் சமூக விழிப்புணர்வு தேவை"


டிச.03,2012. ஹெச்.ஐ.வி. நோயிலிருந்து நம்மை நாம் எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பான அனைத்து உண்மைகளையும் அனைவரும் அறிந்திருக்கிறார்கள் என்று கூறுவதற்கில்லை எனவும், ஹெச்.ஐ.வி. வந்தவர்களை சமூகம் எப்படிப் பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பது தொடர்பாக, போதிய விழிப்புணர்வு இல்லை எனவும் சமூகப்பணி வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் நிலை குறித்து ‘பாஸிடிவ் விமன் நெட்வொர்க்’ என்ற சென்னை ஹெச்.ஐ.வி. நோயாளிகள் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் கௌசல்யா பெரியசாமி உரைக்கையில், தமிழ் நாட்டில் எய்ட்ஸ் நோயாளிகளை ஒதுக்குகின்ற சமூக மனப்பாங்கு இன்றளவும் காணப்படுவதாக கவலையை வெளியிட்டார்.
மக்களால் ஒதுக்கப்படுகின்ற, வெறுக்கப்படுகின்ற பல சந்தர்ப்பங்களை ஹெச்.ஐ.வி. பாதிப்பு வந்தவர்கள் எதிர்கொள்ள நேரிடுவதால், பாதிப்பு குறித்த உண்மையை வெளியில் சொல்லத் தயங்குகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவ வசதிகள் தொடர்பிலும், உரிமைக்காக குரல்கொடுப்பது தொடர்பிலும் எய்ட்ஸ் நோயாளிகளின் நிலை மேம்பட்டுள்ளது என்பதையும் பாஸிடிவ் விமன் நெட்வொர்க் ஒருங்கிணைப்பாளர் கௌசல்யா பெரியசாமி ஒப்புக்கொண்டார்.
1981க்கும் 2007க்கும் இடைப்பட்ட கால் நூற்றாண்டு காலத்தில் இரண்டரை கோடி பேருக்கும் அதிகமானவர்கள் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளனர் என்பதும், உலகெங்கிலும் தற்போது சுமார் 3கோடியே 40 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயை உண்டாக்கவல்ல ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்றுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.