2012-12-03 16:09:30

இன்றைய உலகின் சுயநலக் கொள்கைகள் மனிதரின் மாண்பைக் கீழ்மைப்படுத்துகின்றன - திருத்தந்தை


டிச.03,2012. அனைத்தையும் அனுபவித்து வாழத்துடிக்கும் இன்றைய உலகின் சுயநலக் கொள்கைகள் மனிதரின் மாண்பைக் கீழ்மைப்படுத்துவதாக உள்ளன என்று உரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, உறவுகளை ஊக்குவிக்கும் முடிவற்ற வலைத்தொடர்புகளும், சமூகத் தொடர்புகளும் இன்றைய உலகில் குவிந்து காணப்படுகிற போதிலும், பெரும்பான்மை நேரங்களில் மனிதர்கள் தனிமையின் வெறுமையை உணர்கின்றனர் என்று கூறினார்.
இத்தகையச் சூழல்களில் புதிய நற்செய்தி அறிவிப்பின் தேவை எத்தகையது என்பதை நாம் உணர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இன்றைய உலகில், சமூக அக்கறை, குடும்பங்களின் முக்கியத்துவம், பொதுநலனையும், அமைதியையும் வளர்க்கும் முயற்சிகளில் பங்கேற்றல் போன்றவைகளின் தேவை குறித்தும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற கருத்தையும் எடுத்தியம்பி, அதன் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக்காட்டியத் திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவிப்பின் மூலம் புதிய மனிதாபிமானத்தைப் பெறமுடியும் எனவும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.