2012-12-01 14:40:41

பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஐ.நா. நடவடிக்கைக்கு எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் பாராட்டு


டிச.01,2012. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் பாலஸ்தீனத்துக்கு, உறுப்பினரல்லாத பார்வையாளர் நாடு என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளதற்குத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal.
அனைத்துலகச் சமுதாயமும், நாடுகளின் தலைவர்களும் பிற அழுத்தங்களுக்கு உள்ளாகாமல், தங்களது மனசாட்சிப்படி, எதையும் கணக்குப்பார்க்காமல் இம்முறை செயல்பட்டுள்ளார்கள் என்றுரைத்த முதுபெரும் தலைவர் Twal, இந்தச் சுதந்திர உணர்வு குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் பாலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம், மிதவாத மற்றும் நியாயமான அரசு அமைக்கப்படுவதற்கு உதவி செய்யும் என்றும் அவர், ஃபிதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இவ்வியாழனன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இந்தியா உட்பட 138 நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஓட்டளித்தன.
இதற்கிடையே, இஸ்ரேல், மேற்கு கரைப்பகுதியில் அவசர அவசரமாக 3 ஆயிரம் வீடுகளைக் கட்ட முடிவெடுத்துள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.