2012-12-01 14:36:12

சாகச விளையாட்டு வீரர்களிடம் திருத்தந்தை : பயணம் செய்யும் திருஅவை உங்களோடு இருக்கின்றது, உங்களது விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்


டிச.01,2012. இன்றைய உலகில் குறைவுபடும் தன்னலமறுப்பு, தியாகம், பொறுப்புணர்வு, விடாமுயற்சி, துணிவு, தாராளம் ஆகிய பண்புகள் சாகச விளையாட்டுக்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தும் சர்க்கஸ் குழுக்களிடம் இருக்கின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாராட்டிப் பேசினார்.
திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வு அவையின் ஏற்பாட்டின்பேரில் 12 நாடுகளைச் சேர்ந்த சர்க்கஸ் குழுக்கள், தெருக் கலைஞர்கள், கழைக்கூத்தாடிகள், கோமாளிகள் என ஏறக்குறைய ஏழாயிரம் பேர் வத்திக்கானின் பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கத்தில் இச்சனிக்கிழமையன்று கூடி, திருத்தந்தையின் முன்பாக, குறிப்பாக இளம் கலைஞர்கள் பலவிதமான சாகசங்களைச் செய்து காட்டினர். ஒரு சிங்கக் குட்டியும் அரங்கத்தின் மேடைக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்தக் குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டி ஆசீர்வதித்ததோடு இவர்களுக்கு ஆற்றிய உரையில், ஊர் ஊராகச் சென்று சாகச நிகழ்ச்சிகளை நடத்தும் இந்தக் கலைஞர்களின் சமூக மற்றும் கலாச்சார வாழ்வை அரசுகள் அங்கீகரிக்கும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார் திருத்தந்தை.
இந்த மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைத் தான் அறிந்திருப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, பங்குக் கோவில்களுக்குச் செல்ல முடியாமலும் மறைக்கல்வியில் பங்கு கொள்ள இயலாமலும் இருக்கும் இம்மக்களுக்குப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி தேவைப்படுகின்றது என்றும் கூறினார்.
இந்த மக்கள் தங்களைச் சுற்றி ஒரு மகிழ்ச்சியான சூழலை உருவாக்குகிறார்கள் மற்றும் அன்றாடப் பணியின் சுமையை எளிதாக்குகிறார்கள் என்றும் உரைத்த திருத்தந்தை, உறுதியான அகவாழ்வைக் கொண்டு இறைவனோடு உரையாடல் செய்வதற்கும் அவரைத் தியானிப்பதற்கும் திறந்த மனம் கொண்டுள்ளார்கள் என்றும் பாராட்டினார்.
கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டு வரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு பகுதியாக இடம்பெற்ற இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று வத்திக்கான் அதிகாரிகள் கூறினர். பங்கு ஆலயங்களுக்குச் செல்ல முடியாமல் தொடர்ந்து பயணம் செய்து கொண்டு சமூகத்தின் விளிம்புகளில் வாழ்கின்ற இம்மக்களின் பிரச்சனைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் வத்திக்கான் அதிகாரிகள் மேலும் கூறினர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் ஒரு பெரிய சர்க்கஸ் கூடாரமும் போடப்பட்டிருந்தது.







All the contents on this site are copyrighted ©.