2012-11-30 15:29:29

மத்திய கிழக்குப் பகுதியின் அமைதி நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் அரசு ஆதரவு வழங்குமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தல்


நவ.30,2012. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் “உறுப்பினரல்லாத பார்வையாளராகும் தகுதி”யைப் பாலஸ்தீனத்துக்கு வழங்குவது குறித்து ஐ.நா.வில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் பங்கேற்காமல் இருந்ததையொட்டி, தங்களின் கருத்தைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் ஆங்லிக்கன் ஆயர்கள்.
ஆயர்கள் Michael Langrish, Declan Lang ஆகிய இருவரும் இணைந்து வெளியுறவுத்துறைச் செயலர் William Hagueக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கிழக்குப் பகுதியில் தடைபட்டுள்ள அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு மீண்டும் உயிரூட்டம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
ஐ.நா.வில் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்று விண்ணப்பித்த பாலஸ்தீன அதிகாரிகளின் ஆவல் நியாயமானது என்றும், இது, அப்பகுதியின் தற்போதைய இடர்நிறைந்த அரசியல் சூழலை நீக்குவதற்கு வன்முறையற்ற வழியில் எடுக்கும் முயற்சியாகும் என்றும், இதற்குப் பரவலான ஆதரவு தேவை என்றும் பிரிட்டன் ஆயர்கள் விளக்கியுள்ளனர்.
இஸ்ரேலும் பாலஸ்தீனாவும் இரண்டு நாடுகளாக செயல்படுவதற்குரிய நேரம் வந்தாகிவிட்டது என்று கூறியுள்ள ஆயர்கள், இவ்விரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே இருப்பது கொடுமையானது என்று தெரிவித்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.