2012-11-30 15:24:24

திருத்தந்தை ப்ரெஞ்ச் ஆயர்களிடம் : ஐரோப்பாவில் இறையழைத்தலை ஊக்குவியுங்கள்


நவ.30,2012. ஐரோப்பாவில் இறையழைத்தல்கள் குறைந்து வருவதற்கு ஐரோப்பிய மற்றும் ப்ரெஞ்ச் திருஅவைகள் பாராமுகமாய் இருக்க முடியாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினா அப்போஸ்தலிக்கச் சந்திப்பையொட்டி பிரான்ஸ் நாட்டு ஆயர்களில் மூன்றாவது குழுவினரை இவ்வெள்ளிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இளையோர் இறைவனின் அழைப்பைக் கேட்பதற்குச் சாதகமான மேய்ப்புப்பணிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
திருஅவை மற்றும் உலகின் நம்பிக்கையாகவும் வருங்காலமாகவும் இருக்கின்ற இளையோர்க்கு கத்தோலிக்கக் கல்வி வழங்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, எடுத்துக்காட்டான மற்றும் சான்று பகரக்கூடிய பயிற்சியாளர்கள் இளையோருக்குத் தேவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த நம்பிக்கை ஆண்டில் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி பற்றியும் பேசிய அவர், இப்பணியில் பங்குத்தளங்களும் கிறிஸ்தவ சமூகங்களும் இணைக்கப்பட வேண்டுமென்றும் கூறினார்.
கிறிஸ்தவ வாழ்வாலும் கலாச்சாரத்தாலும் உருவாகியுள்ள பிரான்சில், பள்ளிகள் மற்றும் பன்முகப் பணியிடங்கள் வழியாகப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி இடம்பெறுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.