2012-11-29 15:35:31

புலம்பெயரும் மக்கள் நம்பிக்கையை எதிர்நோக்கியே பயணம் செய்கின்றனர் - கர்தினால் Veglio


நவ.29,2012. உலகமயமாக்கல் என்ற போக்கினால் நமது சமுதாயம் சந்தித்துவரும் உலகளாவிய ஒரு நிகழ்வு புலம்பெயர்தல் என்று, பயணிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Veglio கூறினார்.
உரோம் நகரில் உள்ள திருத்தந்தை உர்பான் பல்கலைக்கழகத்தில், புலம்பெயர்ந்தோர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் SIMI என்ற ஒரு அமைப்பின் துவக்க விழாவில் இவ்வியாழனன்று உரையாற்றிய கர்தினால் Veglio, இவ்வாறு கூறினார்.
அண்மையில் நாம் கடந்து வந்த 20ம் நூற்றாண்டின் ஒரு மிகப்பெரும் மாற்றம் புலம்பெயர்தல் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியச் சொற்களை, தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் Veglio, புலம்பெயர்தல் என்ற வரலாற்று நிகழ்வு, மனித சமுதாயத்தின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்பு கொண்டது என்று எடுத்துரைத்தார்.
புலம்பெயர்தல் ஒரு துயரமான நிகழ்வு என்றாலும், இந்தக் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படும் மக்கள் நம்பிக்கையை எதிர்நோக்கியே பயணம் செய்கின்றனர் என்று கூறிய கர்தினால் Veglio, இந்த ஒரு அம்சத்தால், நம்பிக்கை ஆண்டில் இப்பணி இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது என்று வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.