2012-11-29 15:48:33

இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்க அரசு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவுக்கு கிறிஸ்தவ, யூத அமைப்புக்கள் கண்டனம்


நவ.29,2012. இஸ்ரேல் நாட்டின் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு நிபந்தனை ஏதுமற்ற வகையில் உதவிகள் செய்துவருவதைக் கண்டனம் செய்து, கிறிஸ்தவ மற்றும் யூத அமைப்புக்கள் வாஷிங்டன் நகரில் இவ்வியாழனன்று கண்டன கூட்டம் ஒன்றை நடத்தின.
அமெரிக்க அரசின் நிபந்தனையற்ற ஆதரவைக் குறித்து கேள்விகள் எழுப்பி, 15 கிறிஸ்தவத் தலைவர்கள் அரசுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கையொப்பங்களை இட்டுள்ளனர்.
பாலஸ்தீனா ஒரு தனி நாடாக இயங்கும் உரிமையை வழங்க, இவ்வியாழனன்று ஐ.நா.வின் பொது அவையில் ஓட்டெடுப்பு நடைபெறும் சூழலில், பாலஸ்தீனாவுக்கு எதிராக அடக்கு முறைகளைப் பயன்படுத்திவரும் இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்க அரசு நிபந்தனையற்ற ஆதரவு தருவது பெரும் கண்டனத்திற்குரியது என்று கிறிஸ்தவத் தலைவர்கள் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
வாஷிங்டனில் நடைபெறும் இந்த கண்டனக் கூட்டம் இணையத்தளங்கள் வழியே நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.