2012-11-28 15:52:40

பாலஸ்தீனாவைத் தனி நாடாக உருவாக்குவதற்கு இந்திய அரசு ஆதரவு தரவேண்டும் - இந்திய ஆயர்கள் வேண்டுகோள்


நவ.28,2012. பாலஸ்தீனாவை ஒரு தனி நாடாக உருவாக்குவதற்கு இந்திய அரசு ஆதரவு தரவேண்டுமென்று இந்திய ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாலஸ்தீனாவைத் தனியொரு அரபு அரசாக உருவாக்கும் முயற்சிகள் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.பொது அவையில் இவ்வியாழனன்று மேற்கொள்ளப்படும் சூழலில், இந்த முயற்சியை இந்திய அரசு ஆதரிக்கவேண்டும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் நீதி, அமைதி மற்றும் முன்னேற்றப் பணிக்குழுவின் சார்பில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் Salman Khurshid அவர்களுக்கு மடல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
பாலஸ்தீனா தனியொரு நாடாக உருவாவது மட்டுமல்லாமல், அந்நாட்டில் இஸ்ரேல் இராணுவம் அத்துமீறி ஆக்கிரமித்திருக்கும் நிலப்பகுதிகளும் பாலஸ்தீன அரசிடம் ஒப்புவிக்கப்படவேண்டும் என்றும் இந்திய ஆயர்கள் இம்மடல் வழியே வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்க அரசு இஸ்ரேல் அரசின் பக்கம் அதிகம் சாய்ந்திருப்பது, பாலஸ்தீனா தனி நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் முயற்சிகளுக்குப் பெரியதொரு தடையாக உள்ளதென்று ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
1948ம் ஆண்டிலிருந்து நவம்பர் 29ம் தேதியை, பாலஸ்தீனாவுக்கு ஆதரவு திரட்டும் அகில உலக நாளாக ஐ.நா. கடைப்பிடித்து வருகிறது.








All the contents on this site are copyrighted ©.