2012-11-27 14:59:30

விவிலியத்
தேடல் – திருப்பாடல்கள் 145 முதல் 150 முடிய


RealAudioMP3 மேலாண்மை இயல் பேராசிரியரான Kenneth Blanchard, என்பவர் முப்பது ஆண்டுகளுக்கு முன் (1982) "ஒரு நிமிட மேலாளர்" (One Minute Manager) என்ற புகழ் பெற்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் கூறப்பட்டுள்ள ஒரு கருத்து இன்றைய விவிலியத் தேடலை ஆரம்பித்து வைக்கிறது. சிறந்ததொரு மேலாண்மைக்குத் தேவையான மூன்று அம்சங்கள் இந்நூலில் பேசப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று 'ஒரு நிமிடப் போற்றுதல்' அல்லது 'ஒரு நிமிடப் புகழ்தல்' (One Minute Praisings). இக்கருத்தின் விளக்கம் இதுதான்: ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் நல்லதொன்றைச் செய்யும்போது, அந்நேரமே அவரைக் 'கையும் நல்லதுமாய் பிடித்து', புகழ்வது அவசியம்... இதுதான் 'ஒரு நிமிடப் புகழ்தலின்' அடிப்படை.
'கையும் நல்லதுமாய்ப் பிடித்து' என்ற வார்த்தைகளைக் கேட்டதும் நம்மில் பலர் குறைந்தபட்சம் ஒரு புன்னகை செய்திருப்போம். இது நாம் இதுவரை கேட்டிராத ஒரு சொற்றொடர். 'கையும் களவுமாய்' ஒருவரைப் பிடிப்பதுதான் நாம் அடிக்கடி கேட்பது, அடிக்கடி செயல்படுத்துவது... அதிலும் சிறப்பாக, ஒரு நிறுவனத்தின் மேலாளராக இருப்பவரின் பணியே, குற்றம் செய்தவர்களைப் பிடிப்பது என்பது நம் ஆழ்மனதில் பதிந்துள்ள ஒரு கருத்து. நிறுவனத்தின் ஓர் ஊழியர் பிடிபட்டார் என்பதைக் கேட்டதும், அவ்வூழியர் தவறுசெய்து பிடிபட்டார் என்பதை மட்டுமே நாம் எண்ணிப் பார்ப்போம். Ken Blanchard கூறும் 'ஒரு நிமிட மேலாளர்' நல்லது செய்யும் ஊழியரை அவ்விடத்திலேயே, அக்கணமே ‘பிடித்து’, அவரைப் புகழ்வார் என்றும், இதனால், அந்நிறுவனம் அதிக பயன் பெறும் என்றும் கூறுகிறார்.

பொதுவாகவே, நம் நிறுவனங்களில் நல்லவை நடைபெறும்போது, அவை உடனுக்குடன் உணரப்படுவதில்லை, பேசப்படுவதில்லை. அதே நேரம், தவறுகள் நடைபெறும்போது, அவை உடனே பேசப்படும், விளம்பரப்படுத்தப்படும். அல்லது, யாராவது மிகப் பெரிய நற்செயலைச் செய்திருந்தால், அது உடனுக்குடன் புகழப்படும். மற்றபடி, ஒவ்வொரு நாளும் நடைபெறும் நற்செயல்கள் யார் கவனத்தையும் ஈர்ப்பதில்லை... ஒருவர் தொடர்ந்து சிறு சிறு விடயங்களில் திறம்பட, நல்லவகையில் செயல்பட்டால் அவரது பெயர் ஆண்டறிக்கையில் ஒருவேளை இடம்பெறலாம். இந்தப் போக்கிற்கு நேர்மாறாக அமைவது Ken Blanchard சொல்லித்தரும் 'ஒருநிமிடப் புகழ்தல்' அல்லது, 'ஒருநிமிடப் போற்றுதல்'.

இந்த எண்ணத்தை இன்று என் உள்ளத்தில் தட்டியெழுப்பியது நாம் சிந்திக்கும் ஆறுத் திருப்பாடல்கள். இன்றும், இனிவரும் விவிலியத் தேடல்களிலும் நாம் திருப்பாடல்கள் நூலில் இடம்பெறும் இறுதி 6 திருப்பாடல்களை ஒரு சேர எண்ணிப்பார்க்க முயல்வோம். திருப்பாடல் 145 முதல் 150 முடிய உள்ள இந்த இறுதி 6 திருப்பாடல்களும் இறைவனைப் புகழ்தல், போற்றுதல் என்ற மையக் கருத்துடன் அமைந்துள்ள பாடல்கள்...
அரசராம் கடவுள் போற்றி,
மீட்பராம் கடவுள் போற்றி,
எல்லாம் வல்ல இறைவன் போற்றி,
அனைத்துலக ஆண்டவரைப் போற்றிடு,
மக்களில் மகிழ்ச்சியுறும் மாமன்னர் போற்றி,
தூயகத்தில் இறைவன் போற்றி
என்று இந்த இறுதி 6 திருப்பாடல்களும் தலைப்பிடப்பட்டுள்ளன.

நமது புகழ்தல், போற்றுதல் ஆகியச் செயல்பாடுகளால் இறைவன் இன்னும் புகழ்பெறுவார், இன்னும் உயர்ந்த ஒரு நிலையை அடைவார் என்று எண்ணுவது எவ்வளவு பொருள் நிறைந்தது என்று தெரியவில்லை. ஆனால், இறைவனைப் புகழ்வதால், போற்றுவதால் நாம் உயர்ந்த நிலை அடைவோம்... நம்மில் இன்னும் பரந்து, விரிந்து, உயர்ந்த ஓர் உள்ளம் உருவாகும் என்பதில் ஐயம் இல்லை. திருப்பாடல் 145ன் முதல் வரிகள் மனித வாழ்வில் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டிய ஓர் உயர்ந்த பழக்கத்தை வலியுறுத்துகின்றன.

திருப்பாடல் 145: 1-2
என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.

சிறிதோ, பெரிதோ... வாழ்வின் ஒவ்வொரு நாளும் நிகழும் சிறு நன்மைகளையும் மனதாரப் புகழ்வது நம் உடல், மனம் என்று இரு உலகங்களையும் நலமாக வைத்திருக்க உறுதியான வழி. இந்தப் புகழை, செயற்கையாக, வெறும் வாய் வார்த்தையாகச் சொல்லாமல், உள்ளத்தில் உணரும் உண்மையானப் புகழாக அடுத்தவருக்குத் தரப் பழகினால்... Ken Blanchard கூறும் 'ஒரு நிமிடப் புகழ்தல்' நமது ஒவ்வொரு நாள் வாழ்விலும் பழக்கமானால்... எத்தனையோ அற்புதங்கள் தொடரும்.

எடுத்துக்காட்டாக, நம் குடும்பங்களில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ சின்னச் சின்ன நல்லவைகள் நடக்கின்றன. ஆனால், இவை ஒன்றும் கவனிக்கப்படுவதில்லை. 'இது என்ன பிரமாதம்?' என்ற ஓர் ஏளனக் கண்ணோட்டத்தால் பல நன்மைகள் ஒதுக்கப்படுகின்றன. இதே தினசரி நிகழ்வுகள் என்றாவது ஒரு நாள் நடக்காதபோது, அல்லது, அந்நிகழ்வுகள் தவறாக நடக்கும்போது மட்டும் அவை நம் கவனத்தை ஈர்க்கின்றன, நம் கண்டனத்தை, கோபத்தைப் பெறுகின்றன.

நாம் முன்பு ஒருமுறை கூறிய கதை ஒன்றை மீண்டும் உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன். தான் மட்டுமே உழைப்பது போலவும், வீட்டில் தங்கியிருக்கும் மனைவி ஒன்றும் பிரமாதமாகச் செய்வதில்லை என்பது போலவும் வாழும் ஒரு வீட்டுத் தலைவனுக்கு ஏற்பட்ட ஓர் அனுபவம் இது. ஒருநாள் அத்தலைவன் மாலையில், 'ஆபீஸ்' முடிந்து வீட்டுக்குள் நுழைந்தபோது, வீடு இருந்த நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு மிகவும் அழுக்காக இருந்தது. காலையில் அவர் மேசையில் விட்டுச் சென்ற 'காபி கப்', குளித்து ஈரப்படுத்தி படுக்கைமேல் போட்டுச் சென்ற துண்டு, என்று ஆரம்பித்து, எல்லாமே அப்படியே இருந்தன. கழிவறை கழுவப்படாமல் நாற்றம் எடுத்தது. சமையலறையிலும் காலையில் வெட்டிய காய்கறியின் மிச்சங்கள் அப்படியே இருந்தன. அங்கும் அதிக நாற்றம். அதிர்ச்சியடைந்த வீட்டுத் தலைவன், முன்னறையில் 'சோபா'வில் அமர்ந்து வார இதழைப் படித்துக் கொண்டிருந்த மனைவியிடம், "என்ன ஆயிற்று? ஏன் வீடு இந்த நிலையில் உள்ளது?" என்று கேட்டார். மனைவி அமைதியாக, "ஒவ்வொரு நாளும் நீங்கள் 'ஆபீஸ்' முடிந்து வந்ததும், 'இன்னக்கி என்ன பிரமாதமா செஞ்சுட்ட?' என்று கேட்பீர்களே! அதற்கான பதில்தான் இது. இன்று நான் ஒன்றும் செய்யவில்லை" என்று கூறினார்.

நம் குடும்பங்களில் வீட்டுத் தலைவி, பணியாளர்கள், வயது முதிர்ந்த தாய், தந்தை, நம் குழந்தைகள் என்று ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் செய்யும் நல்ல காரியங்களை 'கையும் நல்லதுமாய் பிடித்து' அவர்களுக்கு ‘ஒரு நிமிடப் புகழ்தல்’ வழங்கப்பட்டால் வாழ்வு இன்னும் அழகாக, ஆனந்தமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் சின்னச் சின்னதாய் நடக்கும் நல்லவைகளை வாய் வார்த்தைகளாகச் சொல்லவேண்டுமா? அப்படி சொன்னால், அது செயற்கையாகத் தோன்றுமே என்ற எண்ணங்கள் மனதில் ஓடலாம். தவறு நடக்கும்போது, இதே எண்ண ஓட்டங்களை நாம் பயன்படுத்துவதில்லையே. தவறு நடந்ததும், அது சிறு தவறாக இருந்தாலும், 'சுடச்சுட' நான்கு வார்த்தைகள் கேட்கவேண்டுமென்று துடிக்கிறோமே! 'ஒருநிமிடக் குறைசொல்லுதல்' (One minute blaming) நமக்குச் செயற்கையாகத் தெரிவதில்லை, ஆனால், 'ஒருநிமிடப் புகழ்தல்' நமக்குச் செயற்கையாகத் தெரிகிறது.

இதே எண்ண ஓட்டம் இறைவனைப் புகழ்வதிலும் நிகழ்கிறது. சின்னச் சின்ன துன்பங்கள் வரும்போது இறைவனைக் கேள்விகள் கேட்பதற்கும், குறை சொல்வதற்கும் பழகிவிட்ட நாம், ஒவ்வொரு நாளும் நாம் பெறும் சின்னச் சின்ன அற்புதங்களுக்கு இறைவனைப் புகழ்கிறோமா? அவருக்கு நன்றி சொல்கிறோமா? என்பதை ஆய்வு செய்வது நல்லது. படுக்கையைவிட்டு எழும் அந்நொடியிலிருந்து எத்தனையோ அற்புதங்கள் நம் அன்றாட வாழ்வில் நடந்தவண்ணம் உள்ளன. ஆனால், படுக்கையைவிட்டு எழுந்ததும் நம் மனதில் ஓடும் எண்ணங்கள் எவை? உடலின் ஏதாவது ஒரு பகுதியில் வலி இருந்தால், அப்பகுதியைப் பற்றியே நம் எண்ணங்கள் இருக்கின்றனவா? அல்லது, வலிகண்ட இடம்தவிர, உடலின் மற்ற பகுதிகள் எல்லாம் நன்றாக இயங்குகின்றனவே என்று எண்ணிப் பார்க்கிறோமா? அதேபோல், மீண்டும் இரவு படுக்கச் செல்லும்போது, அன்று நாம் சந்தித்த ஓரிரு பிரச்சனைகள் நம் எண்ணங்களை ஆக்ரமிக்கின்றனவா? அல்லது, பிரச்சனைகள் இல்லாமல் சென்ற அந்நாளின் பெரும்பாலான நேரங்களை நாம் எண்ணிப் பார்க்கிறோமா? வலிகளும், பிரச்சனைகளும் நம் கவனத்தை ஈர்ப்பது இயல்புதான்... எதார்த்தம்தான். ஆயினும் அவற்றிலிருந்து நம் கவனத்தை மாற்றும் சக்தி நம்மிடம் உள்ளது. அவ்விதம் கவனத்தை மாற்றுவதைப் பழக்கப்படுத்திக் கொள்வதும் நம்மிடம்தான் உள்ளது.

நல்லவற்றைக் காணும் கண்ணோட்டத்தையும், நல்லவற்றை உடனுக்குடன் மெச்சிக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் நாம் வளர்த்துக்கொண்டால், அந்த உள்ளத்தின் நிறைவிலிருந்து இறைபுகழும் தொடர்ந்து ஒலிக்கும். மற்றவர்களையோ, இறைவனையோ புகழ்வதற்கு பிரம்மாதமாக, பிரம்மாண்டமாக ஏதாவது நடக்கும்வரை நாம் காத்திருந்தால், இழப்பு நமக்குத்தான். திருப்பாடல் 145ன் இறுதியிலும், திருப்பாடல் 34ன் ஆரம்பத்திலும் தாவீது கூறும் வார்த்தைகள் நம் மனங்களில் ஆழமாகப் பதியட்டும்:

திருப்பாடல் 145: 21
என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல்கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!

திருப்பாடல் 34: 1-3
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.








All the contents on this site are copyrighted ©.