2012-11-27 14:59:24

கவிதைக் கனவுகள் - அர்த்தங்கள்!


பட்டப் பகலில்
எரிந்து கொண்டிருந்த தெரு விளக்கொன்று
அணைத்து விட்டுப் போகச் சொல்லி
அருகில் அழைத்தது!

மேலே ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த
தேசியக் கொடியொன்று
வாஸ்துப்படி முதலில் எப்பக்கம்
அசைவது உசித்தமென்று தெரியாமல்
தற்காலிகமாய்
தரை நோக்கத் தொடங்கியிருந்தது!

துணியுலர்த்தப்படும்
மொட்டை மாடி கொடிக்கம்பியொன்று
துருப்பிடிக்கத் தொடங்கியிருப்பதற்காக
கவலையில் ஆழ்ந்திருந்தது!

காற்றில் கிழிந்து போன
திரைச்சீலை ஒன்று,
இன்று 'கைப்பிடித்துணி'யான நிலையெண்ணி
அழுதழுது சமையல் மேடை நனைத்தது!

அர்த்தமின்றி கவிதை எழுதுவது
ஆபத்தென்று செய்தி சொல்ல வந்த
தவளையொன்று
காலில் கற்கள் கட்டப்பட்டு
கிணற்றுக்குள் போடப்பட்டது!
எழுதியவர்: பாலா








All the contents on this site are copyrighted ©.