மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்தியா : தலாய்லாமா
நவ.26,2012. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்தியா விளங்குவதாக புத்த மதத்தலைவர்
தலாய்லாமா தெரிவித்தார். கேரள மாநிலம் கொச்சியில் மிகத்தொன்மை வாய்ந்த மலங்கரா ஆர்த்தடாக்ஸ்
சிரியன் சபையின் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய புத்தமதத் தலைவர் தலாய் லாமா,
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்
அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்கிறார்கள் எனப் பாராட்டினார். இந்தப் பாரம்பரியத்தை
இந்தியா தொடர்ந்து காப்பாற்றவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் புத்தமதத்தலைவர். இதேக்
கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பாரத முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பொருளாதாரவளத்தையும்
ஆன்மீக வாழ்வுமுறையையும் ஒன்றிணைத்துச் செல்வதை மக்கள் கைக்கொள்ளவேண்டும் என்றார். இதற்கிடையே,
52ம் ஆண்டிலிருந்து கடந்த 1960 ஆண்டுகளாக கிறிஸ்தவ வாழ்வைத் தொடர்ந்துவரும் இச்சபையின்
கொண்டாட்டங்களையொட்டி, சமூக நலத்திட்டங்களுக்கென 100 கோடி ரூபாயை ஒதுக்குவதாக மலங்கரா
ஆர்த்தடாக்ஸ் சிரியன் சபை அறிவித்துள்ளது.