2012-11-26 15:24:52

திருத்தந்தை : திருஅவை கிறிஸ்துவின் இறையாட்சியைப் பரப்பும் கடமையைக் கொண்டுள்ளது


நவ.26,2012. இயேசுவின் முழுப்பணியும், அவரது செய்தியின் சாரமும் இறையாட்சியை அறிவிப்பதையும், அதன் அடையாளங்கள் மற்றும் வியப்புக்களுடன் மனிதர் மத்தியில் அதனை நடைமுறைப்படுத்துவதையும் கொண்டுள்ளன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆறு புதிய கர்தினால்களுடன் கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்திய பின்னர் வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இறையாட்சி பற்றியும், அது இவ்வுலகில் பிரசன்னமாய் இருக்கச் செய்வதில் திருஅவையின் பங்கு பற்றியும் விளக்கினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறுவது போல, தமது சிலுவை மரணம் மற்றும் உயிர்ப்பினால் கிறிஸ்து நிறுவிய இறையாட்சி முதலில் அந்தக் கிறிஸ்து என்ற மனிதரில் வெளியானது என்ற திருத்தந்தை, கிறிஸ்துவின் இந்த இறையாட்சித் திருஅவையிடம் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குத் தொடக்கமும் விதையுமாக இருக்கும் இத்திருஅவை, தூய ஆவியின் வல்லமையால் அனைத்து நாடுகளிலும் அதனை அறிவித்து பரப்பும் பணியைக் கொண்டுள்ளது என்று கூறினார்.
குறித்த காலத்தின் முடிவில் நமது ஆண்டவர் இறையாட்சியைத் தந்தையாம் இறைவனிடம் வழங்குவார் மற்றும் அன்புக்கட்டளைக்கு இயைந்த வகையில் வாழ்ந்த அனைவரையும் அவரிடம் கையளிப்பார் என்றும் மூவேளை செப உரையைக் கேட்டுக் கொண்டிருந்த திருப்பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை.
நான் உண்மைக்குச் சாட்சியம் பகரவே வந்தேன், உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர் என்று இயேசு பிலாத்துவிடம் கூறிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் பற்றியும் விளக்கிய திருத்தந்தை, அனைத்துக் கிறிஸ்தவர்களும் நற்செய்தியைத் தங்களது வாழ்வாக்குவதன் மூலம் இறைவனின் மீட்பளிக்கும் பணியைத் தொடர்ந்து செய்வதற்கு அழைக்கப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
இந்த ஓர் உணர்வில், இச்சனிக்கிழமையன்று புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்ட ஆறு பேருக்காகச் செபிக்குமாறும் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, இவர்கள் தூய ஆவியால் நம்பிக்கையிலும் பிறரன்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு அவரின் அனைத்துக் கொடைகளாலும் அவரால் நிரப்பப்படுவார்களாக என்றும் தெரிவித்தார்.
நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடுவதற்காக உரோம் பல்கலைக்கழக மாணவர்கள் வருகிற டிசம்பர் முதல் தேதி தூய பேதுருவின் கல்லறைக்குதே திருப்பயணம் மேற்கொள்வார்கள், அப்போது திருவருகைக் கால முதல் ஞாயிறு முதல் திருப்புகழ்மாலையை அவர்களோடு சேர்ந்து திருத்தந்தை செபிப்பார் என்றும் மூவேளை செப உரையின் இறுதியில் அவர் அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.