2012-11-24 14:23:27

சில நாடுகளில் பத்துக்கு ஏழு பெண்கள்வீதம் உடலளவில் துன்புறுத்தப்படுகின்றனர்


நவ.24,2012. உலகில் இலட்சக்கணக்கான பெண்களும் சிறுமிகளும் தாக்கப்படுகின்றனர், அடிக்கப்படுகின்றனர், பாலியல் வன்செயலுக்கு உள்ளாகின்றனர், முடமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம், இஞ்ஞாயிறன்று (நவம்பர்25) கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், உலகில் 70 விழுக்காட்டுப் பெண்கள், தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகின்றனர் அல்லது பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர் என்று கூறியுள்ளார்.
பெண்களைத் துன்புறுத்தும் குற்றவாளிகள் பல நேரங்களில் தண்டிக்கப்படாமல் விடப்படுகின்றனர் என்று உரைக்கும் ஐ.நா.பொதுச் செயலர், பெண்களுக்கு எதிரான அனைத்துவிதமான வன்முறைகளும் ஒழிக்கப்படுவதற்கானத் தங்களது தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து அரசுகளும் நல்லமனம் காட்ட வேண்டுமென, இந்த அனைத்துலக நாளில் தான் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25ம் தேதி கடைப்பிடிக்கப்படுமாறு 1999ம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா.பொது அவை தீர்மானித்தது.







All the contents on this site are copyrighted ©.