2012-11-24 14:15:47

எகிப்து தலத்திருஅவை : புதிய அரசுத்தலைவர் அந்நாட்டை கடும் ஆபத்தில் வைத்துள்ளார்


நவ.24,2012. எகிப்து நாடு கடும் ஆபத்தில் உள்ளது, அந்நாட்டின் சட்டத்துறை, நீதிஅமைப்பு என அனைத்து அதிகாரங்களையும் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது, இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அருள்திரு Rafic Greiche கூறினார்.
முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு, எகிப்தை, ஷாரியா என்ற இசுலாமியச் சட்டத்தின்கீழ் கொண்டுவருவதற்குத் திட்டவட்டமான முயற்சிகளில் இறங்கியுள்ளது என்று ஆசியச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் அருள்திரு Greiche.
எகிப்தின் அரசியல் அமைப்பில் அரசுத்தலைவர் செய்துள்ள அண்மை மாற்றங்கள், அந்நாட்டின் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புக்கும், Salafi என்ற இசுலாமிய குழுவுக்கும் உறுதியான அதிகாரங்களை வழங்குவதாக இருக்கின்றன என்றும் அக்குரு தெரிவித்தார்.
இதற்கிடையே, எகிப்தின் மக்களாட்சி ஆதரவாளர்கள் Tahrir வளாகத்தில் கூடி, அரசியலில் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு கொண்டுள்ள அதிகாரத்துக்கு எதிராகப் புதிய புரட்சி ஒன்றை நடத்துமாறு அனைத்து எகிப்தியர்களையும் கேட்டுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.