2012-11-23 15:21:51

சிரியாவில் கத்தோலிக்கக் கோவிலைச் சேதப்படுத்திய கும்பலின் மன்னிப்பும் ஒப்புரவும்


நவ.23,2012. மேற்கு சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த Qara எனுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால கத்தோலிக்க கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கோவில் இவ்வாரம் சேதமடைந்தது.
ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட, Sergius மற்றும் Bacchus என்ற புனிதர்களின் கோவில் இவ்வாரத்தின் துவக்கத்தில், வன்முறை கும்பலால் சேதமடைந்தது. கோவிலைச் சேர்ந்த 20 திரு உருவங்கள் திருடப்பட்டன, மற்றும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த 'Madonna del Latte' என்ற ஓவியம் சேதமாக்கப் பட்டதென்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இக்கோவில் செதமடைந்ததைத் தொடர்ந்து, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் நான்காம் Ignatius Hazim அவர்களும், கிரேக்கக் கத்தோலிக்க முதுபெரும்தலைவர் மூன்றாம் Gregorios Laham அவர்களும் தங்கள் அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டி அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையே, கன்னி மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட திருநாளான இப்புதனன்று இவ்வன்முறைக் கும்பலைச் சேர்ந்த ஒரு சிலர் கோவிலிலிருந்து திருடப்பட்ட திரு உருவங்களை கோவிலின் கண்காணிப்பாளரான அருள்தந்தை Georges Luis அவர்களிடம் ஒப்படைத்து, மன்னிப்பு வேண்டினர் என்று Fides செய்திக் குறிப்பு கூறுகிறது.
இப்புதனன்று வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மன்னிப்பு வேண்டி, ஒப்புரவானதை அப்பகுதி மக்கள் ஒரு புதுமை என்று கூறிவருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.