2012-11-21 15:57:00

திருஅவையில் திருப்புமுனைகள் – “ஐரோப்பாவின் தந்தை” புனித கொலும்பானுஸ்


நவ.21,2012. எந்தச் சூழ்நிலையிலும் விழிப்போடு செயல்படுகிறவர்கள்தான் மகத்தான செயல்களைச் செய்கிறார்கள். அது ஆபத்தானதோ, ஆபத்தற்றதோ எந்த நிலையானாலும் விழிப்போடு காரியங்களில் இறங்குகிறவர்கள்தான் சாதனை புரிகின்றார்கள். துன்ப துயர சோதனை வேளைகளில் சோர்ந்துபோய் தளர்ந்து பின்வாங்கினால் சிகரங்களைத் தொட முடியாது. சோதனைகள் துரத்தி வந்தபோது விழிப்போடு செயல்பட்டு நூற்றாண்டுகளாக அனைவர் மனங்களிலும் உயர்ந்து நிற்பவர் புனித கொலும்பானுஸ். பெண்கள் என்ற வடிவில் சோதனைகள் நிழலாகத் தொடர்ந்து வந்த சமயத்தில் தாயின் சொல்லைக்கூட உதறிவிட்டு துறவியாக வாழத் தொடங்கியவர் புனித கொலும்பானுஸ். அதனால்தான் ஆறாம் நூற்றாண்டில் பிறந்த இவர், இந்த 21ம் நூற்றாண்டிலும் நினைவுகூரப்பட்டு ஐரோப்பாவின் தந்தை எனப் போற்றப்பட்டுள்ளார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 2008ம் ஆண்டு ஜூன் 11ம் தேதியன்று வழங்கிய புதன் பொது மறைபோதகத்தில், “புனித கொலும்பானுஸ் மாபெரும் கலாச்சார மனிதர்” என்று புகழ்ந்து பேசினார். இறைவனின் அருள்கொடைகளைப் பெற்றதில் செல்வமுடையவர் என்பதற்கும் இந்தப் புனிதர் எடுத்துக்காட்டாய் விளங்கினார் என்றும், ஐரோப்பியக் கண்டத்தில் அயராமல் துறவு இல்லங்களைக் கட்டினார் என்றும், தபத்தை வலியுறுத்திய போதகர் என்றும், ஐரோப்பாவின் கிறிஸ்தவ மூலங்களைப் பேணிக்காப்பதற்குத் தனது ஒவ்வொரு மூச்சையும் இவர் செலவிட்டவர் என்றும் திருத்தந்தை பாராட்டிப் பேசினார். கொலும்பானுஸ் தனது ஆன்மீகச் சக்தி, தனது ஆழமான இறைநம்பிக்கை, இறையன்பு, பிறரன்பு ஆகியவற்றின் மூலம் உண்மையிலேயே ஐரோப்பாவின் தந்தையர்களுள் ஒருவராக விளங்குகிறார் என்றும் திருத்தந்தை அறிவித்தார். மேலும், ஐரோப்பா தனது கிறிஸ்தவ மரபில் இன்றும்கூட மீண்டும் பிறக்க முடியும் என்பதை இந்த அயர்லாந்து நாட்டுத் துறவியின் வாழ்வு நமக்குக் காட்டுகின்றது என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இக்காலத்தில் கடவுள் பற்றிய எண்ணங்கள் குறைந்து வரும் நாடுகளுக்குப் புனித கொலும்பானுஸூன் வாழ்வு ஒரு மறுபிறப்பைக் கொண்டுவர இயலும் என்று போற்றப்பட்டுள்ளார். இப்புனிதரது வாழ்வு பற்றிப் பார்ப்போம்.
தென்கிழக்கு அயர்லாந்தில் Leinster மாநிலத்தில் Nobber என்ற ஊரில் 543ம் ஆண்டில் பிறந்தார் கொலும்பானுஸ். இவர் பிறந்த ஆண்டில்தான் புனித பெனடிக்ட் இறந்தார். Columbán என்ற இவரது இயற்பெயர் இலத்தீனில் கொலும்பானுஸ் என்று மாறியது. கொலும்பன் என்றால் "வெள்ளைப் புறா" என்ற அர்த்தம். அயர்லாந்தில் கொலும்பா என்ற மற்றொரு துறவி இருந்ததால் இவர் கொலும்பானுஸ் என அழைக்கப்பட்டார். இளமைக் காலங்களில் சிறந்த கல்வியறிவைப் பெற்றார். இவர் தன்னிலே, மற்றவரை, குறிப்பாக பெண்களைக் கவர்ந்திழுக்கும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தார். இதனால் பல பெண்களின் தொந்தரவுகளை எதிர்கொண்டார். சோதனைகளைச் சந்தித்தார். இவற்றை வெல்லுவதற்கு ஒரே வழி துறவியாக வாழ்வைத் தொடங்குவதே என ஓர் அருள்சகோதரி கூறிய ஆலோசனையின்பேரில் துறவற வாழ்வை மேற்கொண்டார். இதற்கு இவரது தாய் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இவர் வீட்டைவிட்டுச் செல்வதைத் தடுப்பதற்கு இவரது தாய் எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாயின. முடிவில் Sinell என்ற துறவு இல்லத் தலைவரிடம் பயற்சி பெற்றார். இந்தத் தலைவர் கேட்டுக்கொண்டதால் திருப்பாடல்களுக்கு விளக்கவுரை எழுதினார். பின்னர் Bangor துறவு இல்லம் சென்றார். அங்கு Comgall என்ற தலைவரின் கண்காணிப்பில் 589ம் ஆண்டுவரை வாழ்ந்தார். Comgallம் ஒரு புனிதர். இவரின் அனுமதியுடன் ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கு மறையைப் பரப்புவதற்காக 12 துறவிகளுடன் புறப்பட்டார் கொலும்பானுஸ்.
கொலும்பானுஸூம் அவருடன் சென்ற 12 துறவியரும் பிரான்சின் Brittany மாநிலம் செல்வதற்காகத் தங்களது கடல் பயணத்தைத் தொடங்கினர். ஏனெனில் அச்சமயத்தில் இப்பகுதியில் போட்டி அரசர்களுக்குள் சண்டை இடம்பெற்று வந்தது. பிரான்ஸ் ஆயர்களும் இப்பிரச்சனையைக் கண்டுகொள்ளவே இல்லை. கொலும்பானுஸூம் அவருடன் சென்ற துறவியரும் வழியில் சிறிது காலம் இங்கிலாந்தில் தங்கிவிட்டு மீண்டும் பிரான்ஸ் புறப்பட்டனர். பிரான்சின் Burgundy மன்னர் Gontram, இவர்களை நன்கு வரவேற்று தனது அரசில் தங்கியிருக்குமாறு வருந்திக் கேட்டுக்கொண்டார். வசதிகள் நிறைந்த இடத்தில் தங்குவதை விட்டுவிட்டு Vosges மலைப்பகுதியிலுள்ள கைவிடப்பட்ட ஓர் உரோமானியப் பேரரசின் கோட்டையில் சென்று இவர்கள் தங்கினார்கள். காட்டில் கிடைக்கும் பழங்கள், காய்கள், மரங்களின் வேர்கள் போன்ற உணவுகளை இந்தத் துறவியர் சாப்பிட்டு கடும் தவ வாழ்வை வாழ்ந்தனர். வாழ்வும் எளிமையாக இருந்தது. இவர்கள் வாழ்ந்த மாநிலத்தில் திருஅவை காட்டுமிராண்டிக் கும்பல்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டு வந்ததைக் கண்டார் கொலும்பானுஸ். மன்னரின் அனுமதியுடன் அந்தப் பாழடைந்த கோட்டையில் துறவு இல்லத்தை இவர் நிறுவினார். இவ்விடம் மலைப்பகுதியில் அமைந்திருந்தாலும் மக்கள் பலர் அவர்களைத் தேடி வந்தனர். இந்தத் துறவிகளோடு சேர்ந்து வாழவும் விரும்பினர். இவ்வாறு விரும்புகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இன்னும் இரண்டு துறவு இல்லங்களை அமைத்தார் கொலும்பானுஸ். இந்த இல்லங்களுக்கு அயர்லாந்து நாட்டின் மரபின்படியே ஒழுங்குகளையும் சட்டவிதிமுறைகளையும் ஏற்படுத்தினார். இதனால் பிரான்ஸ் ஆயர்களிடமிருந்து எதிர்ப்பையும் சம்பாதித்தார். குறிப்பாக, கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நாள் குறிப்பதில் ஆயர்களுடன் பிரச்சனை கிளம்பியது.
பிரான்ஸ் நாட்டு ஆயர்களோடு மட்டுமல்லாமல், அந்நாட்டு அரசக் குடும்பத்தோடும் பிரச்சனை ஏற்பட்டது. ஏனெனில் மன்னர் Thierry தனது மனைவியைவிட்டு வேறு பெண்ணுடன் வாழ்ந்து நான்கு குழந்தைகளையும் கொண்டிருந்தார். இந்தக் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்க மறுத்தார் கொலும்பானுஸ். இவர்கள் பாவத்தில் பெற்றெடுத்த பிள்ளைகள், இவர்கள் ஒருபோதும் அரச மகுடம் தரிக்க முடியாது என்று கூறினார். அரசரிடம், இத்தகைய வாழ்வு பாவம் என இடித்துரைத்தார். மன்னரின் அறநெறி வாழ்வைக் கண்டித்ததால் கொலும்பானுஸூக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இதிலிருந்து தப்பித்தார் நம் புனிதர் கொலும்பானுஸ். மன்னரும் அவரது பாட்டியான அரசி Brunehildம் சேர்ந்து கொலும்பானுஸை பிரான்சை விட்டு கட்டாயமாக வெளியேற்றினர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த துறவிகள் மட்டுமே இவருடன் செல்லலாம் எனவும் ஆணையிட்டனர். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் வாழ்ந்த பிரான்சைவிட்டு கொலும்பானுஸூம் மற்ற அயர்லாந்து துறவியரும் கடினப் பயணம் செய்து ஜெர்மனி சென்று கிறிஸ்தவத்தைப் போதித்தனர். அங்கும் துறவு இல்லங்களை அமைத்தார் புனிதர். ஜெர்மனியிலும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. அதனால் வட இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதிக்குக் கட்டாயமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆல்ப்ஸ் பகுதியில் ஆட்சி செய்த லொம்பார்தி அரசர் இந்தத் துறவிகளுக்கு நல்ல வரவேற்பளித்தார். அச்சமயத்தில் இத்தாலியத் திருஅவை, கிறிஸ்தவத்துக்குப் புறம்பான மற்றும் பிரிவினைக் கொள்கைகளால் துன்புற்றது. கிறிஸ்து கடவுள் அல்ல, அவர் மிக மேலாக உயர்த்தப்பட்ட ஒரு படைப்பு என்ற ஆரியப் பதிதக் கொள்கை பரவியது. கொலும்பானுஸ் இந்தக் கொள்கையை எதிர்த்து எழுதினார். லொம்பார்திப் பகுதி திருஅவையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குத் திருத்தந்தை 4ம் போனிபாசின் உதவியை நாடினார். இந்தத் திருத்தந்தையுடன் இறையியல் விவாதங்களில் ஈடுபட்டார். இருந்தபோதிலும் திருத்தந்தையின் அதிகாரத்தை மதித்தார் நம் புனிதர் கொலும்பானுஸ். இவர் மிலானில் நீண்ட காலம் தங்கியிருந்தார். லொம்பார்தி அரசர் நன்கொடையாகக் கொடுத்த மிகப் பெரிய நிலப்பரப்பில் 614ம் ஆண்டில் போபியோ என்ற இடத்தில் துறவு இல்லத்தை அமைத்தார். இதுதான் இவர் கடைசியாக உருவாக்கிய துறவு இல்லமாகும். இந்தப் போபியோ இல்லம் பல நூற்றாண்டுகளுக்கு இறையியலையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் மையமாக விளங்கியது. 590ம் ஆண்டுவாக்கில் ஐரோப்பியக் கண்டத்தில் பல துறவு இல்லங்களை, அதிலும் குறிப்பாக பிரான்ஸிலும் இத்தாலியின் லொம்பார்தியா மாநிலத்திலும், இன்னும் சிறப்பாக, தற்போதைய பிரான்சிலுள்ள Luxeuil மற்றும் தற்போதைய இத்தாலியின் Bobbioவில் நிறுவினார்.
615ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஞாயிறன்று இறைபதம் அடைந்தார் புனித கொலும்பானுஸ். இவர் இரண்டு சக்கர மோட்டார் வாகனத்தில் செல்பவர்களுக்கும், கடும் புயல் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கும் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார். இவரது திருவிழா இவர் விண்ணகத்தில் பிறந்த நாளான நவம்பர் 23ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது. ஐரோப்பாவில் மத்திய காலங்களின் தொடக்கத்தில் மிகச்சிறந்த, செயல்திறன்மிக்க மற்றும் எடுத்துக்காட்டான துறவியாகத் துலங்கியவர் புனித கொலும்பானுஸ். இந்த வெண்புறா, குழப்பங்கள் நிறைந்த இடத்தில் அமைதியை ஏற்படுத்துபவராக, தவறான வாழ்வை துணிச்சலுடன் கண்டிப்பவராக, தவயோகியாகத் திகழ்கிறார்.







All the contents on this site are copyrighted ©.