2012-11-21 16:38:25

Rimsha Masih வழக்குத் தொடர்பான நிகழ்வுகள், பாகிஸ்தானில் சமய ஒற்றுமையை வளர்ப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு


நவ.21,2012 தேவநிந்தனை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, விடுவிக்கப்பட்ட Rimsha Masih வழக்குத் தொடர்பான நிகழ்வுகள், பாகிஸ்தானில் அமைதி, நீதி, மற்றும் சமய ஒற்றுமை இவற்றை வளர்ப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று பாகிஸ்தான் ஆயர் பேரவை கூறியுள்ளது.
திருக்குர்ரான் விளக்க நூலின் பக்கங்களை எரித்தார் என்று பொய்க்குற்றம் சுமத்தப்பட்ட மாற்றுத்திறனாளியான Rimsha Masih என்ற சிறுமியை இஸ்லாமாபாத் உயர் நீதி மன்றம் இச்செவ்வாயன்று விடுதலை செய்ததையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி அமைதிப் பணிக்குழுவின் இயக்குனர் அருள்தந்தை Yousaf Emmanuel, இவ்வாறு கூறினார்.
இச்சிறுமிக்கு அளிக்கப்பட்டுள்ள விடுதலை கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மகிழ்வைத் தரவில்லை, மாறாக, கிறிஸ்தவர்களுடன் இணைந்து நீதிக்காகப் போராடிய அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் இந்த முடிவு மகிழ்வை அளித்துள்ளது என்று அருள்தந்தை Emmanuel, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தேவநிந்தனை என்ற சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரின் வழக்குகளை, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழு கவனமாகப் பின்பற்றி வருகிறது என்று கூறிய அருள்தந்தை Emmanuel, 2011ம் ஆண்டில் மட்டும் இச்சட்டத்தின் கீழ் 161 பேர் குற்றம் சாட்டப்பட்டனர் என்றும், இவர்களில் 9 பேர் அடிப்படை வாதக் குழுக்களால் எவ்வித விசாரணையுமின்றி கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.