2012-11-21 16:39:49

HIV தொடர்பான விழிப்புணர்வு முயற்சிகளுக்கு ஐ.நா.வின் உலகத் தூதராக Aung San Suu Kyi


நவ.21,2012 HIV என்ற முத்திரை குத்தப்பட்டு, சமுதாயத்தின் விளும்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்காக உழைக்க ஐ.நா. என்னைத் தெரிவு செய்ததை நான் பெருமையுடன் கருதுகிறேன் என்று மியான்மார் எதிர்கட்சித் தலைவரான Aung San Suu Kyi கூறினார்.
HIV நோயினால் ஒருவரும் புறக்கணிக்கப்படக் கூடாது என்ற கருத்துடன் ஐ.நா.அவை அண்மையில் ஆரம்பித்துள்ள Zero Discrimination என்ற விழிப்புணர்வு முயற்சிகளுக்கு ஓர் உலகத் தூதராக Suu Kyi யை அண்மையில் ஐ.நா. நியமித்துள்ளது.
UNAIDS எனப்படும் ஓர் ஐ.நா. நிறுவனத்தின் இயக்குனரான Michel Sidibé, இந்த நியமனத்தை Suu Kyi இடம் அண்மையில் அளித்தார்.
இந்த நியமனம் தனக்குக் கிடைத்த ஒரு பெரும் மதிப்பு என்று கூறிய Suu Kyi, மியான்மாரில் மட்டும் 40,000க்கும் அதிகமானோர் HIV என்ற முத்திரையைத் தாங்கி வாழ்கின்றனர் என்றும், இவர்கள் சமுதாயத்தால் ஒதுக்கப்படுவதைக் காணும் மற்றவர்கள், தங்களுக்கு இந்நோயின் அடையாளங்கள் இருந்தாலும் அதனை வெளிக்காட்டத் தயங்குகின்றனர் என்றும் கூறினார்.
அண்மைக் காலங்களில் HIV தொடர்பான நோய் கண்டவர்களின் எண்ணிக்கை வளரும் நாடுகளில் குறைந்து வந்துள்ளது என்றாலும், இந்நோயை முற்றிலும் ஒழிக்க இளையோர் முன்னின்று செயல்படவேண்டும் என்று ஐ.நா. அதிகாரி Michel Sidibé வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.