2012-11-20 15:15:15

எருசலேம் துணை ஆயர் : இஸ்ரேலும் ஹமாஸூம் துணிச்சலுடன் தீர்மானங்களை எடுக்கவேண்டும்


நவ.20,2012. காசாவில் இடம்பெற்றுவரும் வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கு இஸ்ரேல் அரசும் ஹமாஸ் அமைப்பின் தலைவர்களும் துணிச்சல் நிறைந்த தீர்மானங்களை எடுக்கவேண்டுமென எருசலேம் துணை ஆயர் William Shomali கூறினார்.
காசாவில், இஸ்ரேல் இராணுவம் இச்செவ்வாயன்று ஏழாவது நாளாகத் தொடர்ந்து நடத்திவரும் விமானத் தாக்குதல்களால் தென் இஸ்ரேலிலும் காசாவிலும் வாழும் குடிமக்கள் கட்டாயமாகப் புலம் பெயர்ந்து வருகின்றனர் என்றுரைத்த ஆயர் Shomali, பதிலுக்குப்பதில் தாக்குதல்களை நடத்துவதால் வன்முறை அதிகரிக்குமேயொழிய அமைதி ஏற்படாது என்று கூறினார்.
இவ்வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எகிப்தும், அமெரிக்க ஐக்கிய நாடும் ஒரேநேரத்தில் தலையிட வேண்டுமென்றும் கூறிய ஆயர் Shomali, இஸ்ரேலும் ஹமாஸூம் தனித்து விடப்பட்டால் அவை, தொடர்ந்து பதிலடித் தாக்குதல்களையே நடத்திக்கொண்டிருக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேலும் ஹமாஸும் மோதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே, ஹமாஸூம் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் தொடர்ந்து குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருப்பதாக இஸ்ரேல் கூறி வருகிறது.
இதற்கிடையே, இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வது கடினமாக இருப்பதாக எருசலேம் காரித்தாஸ் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.