2012-11-19 16:09:06

கடல்வழி பயணிப்போர் பணியின் அனைத்துலக மாநாட்டில் கர்தினால் Vegliòவின் துவக்க உரை


நவ.19,2012. கடல் பயணங்களில் நாம் அடைந்துள்ள தொழில் நுட்பங்கள், இப்பயணங்களில் பணிபுரிவோர் சந்திக்கும் பிரச்சனைகள் போன்றவை நமது நற்செய்திப் பணியை இன்னும் பொருளுள்ளதாக மாற்றுகின்றன என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 19, இத்திங்கள் முதல் வருகிற வெள்ளிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறும் 23வது கடல்வழி பயணிப்போர் பணியின் அனைத்துலக மாநாட்டில், பயணிகள் மற்றும் புலம்பெர்யர்ந்தோர் பணிக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò துவக்க உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
90 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை 11ம் பத்திநாதர் அவர்களால் உருவாக்கப்பட்ட இப்பணியைப் பற்றி எடுத்துரைத்த கர்தினால் Vegliò, இவ்வாண்டு நடைபெறும் மாநாட்டில் 70நாடுகளிலிருந்து வந்திருக்கும் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்வது ஒரு வரலாற்று நிகழ்வு என்று கூறினார்.
நாடுவிட்டு நாடு செல்லும் கடல் பயணிகள் கரையிறங்கும் வேளையில் அவர்களை வரவேற்று, அவர்களுக்கு நற்செய்தியினை வழங்குவது, அவர்களை மீண்டும் வேரூன்றும் ஓர் அனுபவம் என்று கர்தினால் இப்பணியை விவரித்தார்.
கடலின் விண்மீன் (Stella Maris) என்று அழைக்கப்படும் இறையன்னை மரியாவை நோக்கி, அருளாளர் இரண்டாம் ஜான்பால் எழுதியிருந்த அழகியதொரு செபத்துடன் கர்தினால் Vegliò தன் துவக்க உரையை நிறைவு செய்தார்.








All the contents on this site are copyrighted ©.