2012-11-17 17:13:29

பொதுக்காலம் - 33ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 2012ம் ஆண்டு பிறந்ததும், ஒரு வதந்தியும் கூடவே பிறந்தது. அந்த வதந்தி வெகு வேகமாக எட்டுச் திசையிலும் பறந்தது. மின்னஞ்சல்கள் மூலமாக, SMS வழியாக பறந்து சென்ற இந்த வதந்தி என்ன? இவ்வாண்டு டிசம்பர் மாதம் உலகம் முடிவடையும் என்பதுதான் அந்த வதந்தி. டிசம்பர் மாதம் நெருங்கி வருகிறது... உலகம் முடிந்துவிடுமா? தெரியவில்லை.
உலகமுடிவைப் பற்றி அவ்வப்போது வதந்திகள் உலவி வந்த வண்ணம் உள்ளன. இந்த வதந்திகளெல்லாம் உண்மையாகி இருந்தால், இந்நேரம் நமது உலகம் கடந்த 20ம் நூற்றாண்டில் மட்டும் பத்து முறை முடிந்திருக்க வேண்டும். நிறைவேறாத அந்த வதந்திகளின் மகுடமாக, 2000மாம் ஆண்டில் உலவிவந்த வதந்திகளும், அவற்றைச் சூழ்ந்த கவலையும் நம்மில் பலரைப் பாதித்திருக்க வேண்டும். இல்லையா?

உலகம் எப்போது முடியும் என்ற கணிப்பு ஒவ்வொரு தலைமுறையிலும் இருந்துவந்துள்ளது. அதுமட்டுமல்ல... உலகம் முடியும்போது என்னென்ன நடக்கும் என்பதையும் பல்வேறு கலாச்சாரங்களும், மதங்களும் சொல்லி வைத்துள்ளன. இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும் இவ்வெண்ணங்கள் பரவலாகப் பேசப்பட்டன. அதுவும், அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே உலக முடிவு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் அதிகம் இருந்தது. விவிலியத்தின் பல இடங்களில் உலக முடிவைப்பற்றி கூறப்பட்டுள்ளது. அவற்றில் இரு பகுதிகளை இன்றைய ஞாயிறு வழிபாட்டில் நாம் சிந்திக்க திருஅவை நம்மை அழைக்கிறது. இவ்வழைப்பு இன்று நம்மை வந்தடைவதற்குக் காரணம் உண்டு...

கத்தோலிக்கப் பாரம்பரியத்தில் ஒவ்வோர் ஆண்டையும் ஐந்து வழிபாட்டு காலங்களாகப் பிரித்துள்ளோம். திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்பு காலம், தவக்காலம், உயிர்ப்பு காலம், பொதுக்காலம். இந்தப் பொதுக்காலத்தின் இறுதியை நாம் நெருங்கியுள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் திருநாள், அதற்கு அடுத்த ஞாயிறு வரும் திருவருகைக்காலத்துடன், திருவழிபாட்டின் புதிய ஆண்டைத் துவக்குகிறோம். பொதுக் காலத்தின் இறுதியில், இறுதிக்காலத்தைப்பற்றி சிந்திக்க இன்றைய இறைவாக்கு நம்மை அழைக்கிறது.
இறுதிக் காலம், எப்போது, எவ்விதம் வரும் என்பது தெரியாது. ஆனால், அந்தக் காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதே இறைவாக்கு நமக்குத் தரும் அழைப்பு. இறுதிக் காலத்தைச் சந்திக்க எவ்விதம் தயார் செய்வது?

ஆங்கிலத்தில் "last minute preparation" – கடைசி நிமிட தயாரிப்பு என்ற ஒரு சொற்றொடர் உண்டு: எல்லாரும் வாழ்க்கையில் அனுபவித்த, அனுபவிக்கும், இனியும் அனுபவிக்க இருக்கும் ஓர் அனுபவம் இது. தேர்வுகளுக்குத் தயார் செய்கிறோம். பல நாட்கள், பல மாதங்கள் தயார் செய்தாலும், கடைசி நேரத்தில், அந்த தேர்வு எழுதும் அரங்கத்திற்கு முன்பு எத்தனை தயாரிப்புகள்... வீட்டில் வைபவங்களுக்குத் தயாரிக்கிறோம். ஆனாலும் வைபவத்திற்கு முந்திய இரவு, வைபவத்தன்று காலை அரக்க, பரக்க ஓடியாடி வேலைகள் செய்கிறோம். அதேபோல், வேலைக்கான நேர்காணல் (interview), வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரிக்க... என்று கடைசி நேர தயாரிப்புக்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். மேலே சொன்ன சம்பவங்களிலெல்லாம் ஒரு வித ஆவல், ஆர்வம் இருக்கும். கொஞ்சம் பயம், கலக்கம் இவையும் இருக்கும். பொதுவாக இவற்றில் ஓர் எதிர்பார்ப்பு இருக்கும்.

நல்ல காரியங்களை எதிர்பார்க்கும்போது, ஆனந்தம், ஆர்வம் இவை நம்மைச் செயல்பட வைக்கும். ஆனால், நல்லவை அல்லாத சூழல்களை நாம் எதிர்பார்க்கும்போது, நமது மனநிலை எப்படி இருக்கும்? உடல் நலமின்றி, அதுவும் மிகவும் seriousஆக நாமோ, அல்லது நமக்கு நெருங்கியவர்களோ மருத்துவமனையில் இருக்கும்போது, என்னவித எதிர்பார்ப்பு இருக்கும்? அதை எதிர்பார்ப்பு என்றுதான் சொல்லமுடியுமா? எதிர்பார்ப்பு, நல்லதோ, கேட்டதோ, அவை எதிர்காலத்தோடு தொடர்புடையவை...

எதிர்காலத்தைப்பற்றி தெரிந்து கொள்ளும் சக்தி நம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நன்றாக இருக்குமா? இளவயதில் இது போன்ற ஒரு சக்திக்காக நான் ஏங்கியதுண்டு. எடுத்துக்காட்டாக, படிக்கும் காலத்தில் ‘அடுத்த நாள் தேர்வுக்கு என்னென்ன கேள்விகள் வரும்னு தெரிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்...’ என்று ஏங்கியதுண்டு. நமக்குக் கிடைக்கப்போகும் வேலை, நமக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை, நமது ஒய்வுகால வாழ்க்கை இவைகளைப்பற்றி முன்கூட்டியே தெரிந்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எத்தனை பேர் ஏங்குகிறோம்?

எதிர்காலத்தைத் தெரிந்துகொள்வதற்கு எத்தனை வழிகளை நாம் பின்பற்றுகிறோம்? கைரேகையைப் பார்த்து, கிளியைக் கேட்டு, நாள், கோள், நட்சத்திரங்களைப் பார்த்து... எத்தனை வழிகளில் எதிர்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்... எதிர்காலம் முழுவதும் "நல்ல காலம் பொறக்குது" என்ற சொற்களையே நாம் கேட்டுக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அந்த எதிர்காலத்தில் பிரச்சனைகள் மலைபோல் காத்துக் கிடக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டால்... ஏன் இதைத் தெரிந்து கொண்டோம் என்று வருத்தப்படுவோம்.

எதிர்காலத்தைப்பற்றிய கேள்விகளில் மிக முக்கியமான கேள்வி: நம் ஒவ்வொருவரின் இறுதி நாள் பற்றியது... Simple ஆகச் சொல்லவேண்டுமெனில், நான் எப்போது, எப்படி இறப்பேன்? நாம் எல்லாரும் மற்றவர்கள் மரணத்தைப் பல வழிகளில், வடிவங்களில் பார்த்திருக்கிறோம். நாமும் அதை ஒரு நாள் சந்திக்க இருக்கிறோம். ஆனால், அதைப்பற்றி பேச, எண்ண தயங்குகிறோம். நவம்பர் மாதம் மரணத்தைப்பற்றி, மரித்தோரைப்பற்றி சிந்திக்க திருஅவை அழைக்கும் ஒரு மாதம். இன்றும் நமது இறுதி காலம்பற்றி, இந்த உலகத்தின் இறுதி காலம்பற்றி சிந்திக்க நமக்கு மற்றொரு வாய்ப்பு.

2009ம் ஆண்டு, நவம்பர் மாதம், அமேரிக்காவில் ஏறத்தாழ 3000 திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் 2012. 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது என்பதை பிரம்மாண்டமாகக் காட்டியத் திரைப்படம். வசூலில் சாதனை படைத்ததாகச் சொல்லப்படும் இந்தப் படத்தில், உலக அழிவு special effects பயன்படுத்தி அழகாகச் சொல்லப்பட்டது. அழிவு... அழகாகக் காட்டப்பட்டது.
இது முதல் முறையல்ல. அழிவைப் பற்றி ஹாலிவுட் திரை உலகத்தில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளன. இனியும் வரும். 2012 என்ற இந்தத் திரைப்படத்தை இயக்கிய Roland Emmerich 2004ம் ஆண்டிலும் (The Day After) 1996ம் ஆண்டிலும் (Independence Day) இரு பிரம்மாண்டமான திரைப்படங்களைத் தந்தார். இரண்டும் உலக அழிவைப் பற்றியது. இரண்டும் வெற்றிப் படங்கள்.

ஞாயிறு சிந்தனையில் திரைப்படங்களைப் பற்றிப் பேசுகிறேனே என்று ஒரு சிலர் எரிச்சலடையலாம். ஆனால், இத்திரைப்படங்கள் ஏன் வெற்றி அடைந்தன என்பதை அலசிப்பார்த்தால், மனித இயல்பு பற்றிய ஓர் உண்மையை உணரலாம். அழிவைப் பார்க்க நமக்குள் ஆசை உள்ளது. இந்த அடிப்படை ஆசையை மூலதனமாக்கி, நமது தொடர்பு சாதனங்கள், முக்கியமாக திரைப்படங்கள், அழிவை special effects மூலம் பிரம்மாண்டமாக, ஏன், கவர்ச்சியாகவும் காட்டுகின்றன. இந்த பிரம்மாண்டங்கள் அழிவைப்பற்றிய துன்ப உணர்வுகளிலிருந்து நம்மைத் தூரப்படுத்தி, அந்நியப்படுத்தி நமது மனங்களை மழுங்கடித்து விடுகின்றன. இது ஆபத்தான ஒரு போக்கு.
TV, சினிமா, பத்திரிகைகள் வழியே அழிவை அடிக்கடி பார்ப்பதும், அழிவைப் பிரம்மாண்டமாய்ப் பார்ப்பதும் ஆபத்து. படங்களில் பார்க்கும் அழிவுக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் அழிவுக்கும் பல வேறுபாடுகள். நிழல் படங்களில் அழிவைப் பார்த்து, பார்த்து பழகிவிட்டு, நிஜமாய் நடக்கும் அழிவுகளில் பல உயிர்கள் அழிக்கப்படுவதையோ, அல்லல்படுவதையோ உணர முடியாமல் போகக்கூடிய ஆபத்து உள்ளது.

இந்த அழிவுகளைப்பற்றி அடிக்கடி பேசுவதும், கேட்பதும் இன்னொரு ஆபத்தை உண்டாக்கும். அழிவுகளை அடிக்கடி பார்க்கும்போது, மனதில் நம்பிக்கை வேர்கள் கொஞ்சம், கொஞ்சமாய் அறுந்துவிடும் ஆபத்தும் உள்ளது. நம்பிக்கை வேரறுக்கப்படும் போது, அவநம்பிக்கை விதைக்கப்படும், அது வேர்விட்டு வளர்ந்துவிடும். உலக முடிவையும், அழிவையும் கவர்ச்சிகரமாகக் கூறும் ஊடகங்களாகட்டும், அல்லது இந்த முடிவுகளைப் பற்றி மக்களுக்குச் சொல்லி பயமுறுத்தும் போலி மதத் தலைவர்களாகட்டும், அவர்களிடமிருந்து நாம் பெறும் செய்தி... பெரும்பாலும் அவநம்பிக்கையே.

இன்று நாம் கேட்ட இறைவாக்குகளில் அச்சத்தையும், கவலையையும் உருவாக்கக் கூடிய வார்த்தைகள் ஒலித்தாலும், நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளும் ஒலிக்கின்றன.
நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்: அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்: வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.
என்று தானியேல் நூலிலும்,
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.
என்று மாற்கு நற்செய்தியிலும் நம்பிக்கை அளிக்கும் இறைவார்த்தைகள் ஒலிக்கின்றன.

இறுதியாக, ஓர் எண்ணம். 'எதிர்' என்ற தமிழ் சொல்லுக்குள் எத்தனை பொருள் இருக்கிறது! எதிர்காலம் என்பதை, எதிர் வரும் காலம், எதிர் பார்க்கும் காலம், நமக்கு எதிராக வரும் காலம், நமக்கு எதிரியாக வரும் காலம், நாம் எதிர்த்து நிற்கவேண்டிய காலம், நாம் எதிர்கொண்டு சென்று வரவேற்கவேண்டிய காலம்... என்று பல பொருள்பட பேசலாம். 'எதிர்' என்ற சொல்லில் ஆனந்தம், ஆர்வம் இருக்கும். ஆபத்தும், ஆதங்கமும் இருக்கும். இந்த உணர்வுகளெல்லாம் நடக்கப்போகும் சம்பவங்களில் இருக்கின்றன என்பதைவிட, இவற்றை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தைப் பொறுத்தே நம் உணர்வுகளும், செயல்பாடுகளும் இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி, சிறப்பாக இறுதிக் காலத்தைப் பற்றி நமது கண்ணோட்டம் என்ன?

எதிர் காலத்தைத் தெரிந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது அந்த எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்ப்பதில் செலவிட்டால், எவ்வளவோ பிரச்சனைகளைச் சமாளிக்கலாம், வெல்லலாம். ஆங்கிலத்தில் அழகிய பொன்மொழி ஒன்று உண்டு: "For all that has been...thanks! For all that will be...yes!" “இதுவரை நடந்தவைகளுக்குநன்றி! இனி நடக்கப் போகின்றவைகளுக்கு ஆகட்டும்!” என்ற கண்ணோட்டம் பதட்டமில்லாத நம்பிக்கையை வளர்க்கும். எதிர்காலம் என்பது, பிரச்சனை என்ற கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு வந்தாலும், அந்தக் கூட்டத்தின் மத்தியில் நல்லவைகளை, நல்லவர்களைப் பார்த்து கைகுலுக்கிக் கொள்ளும் பக்குவத்தை நாம் பெறவேண்டும்.

இதை ஓர் உருவகத்தில் சொல்ல வேண்டுமெனில், எதிர்காலம் மலைபோல் குவிந்த ஒரு குப்பையாக தெரிந்தாலும், அந்த குப்பையின் நடுவிலும் வைரங்கள் மின்னுவதை நம் கண்கள் பார்க்கும்போது, குப்பை மறைந்து விடும்... (வெளியில் மறைந்துவிடாது... நமது பார்வையில் மறைந்துவிடும்.) வைரங்கள் மட்டும் தெரியும். குப்பைகளை விலக்கி, குண்டுமணிகளை, வைரங்களைப் பார்க்கும், வைரங்களைச் சேர்க்கும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள இறைவன் துணையை நாடுவோம்.
2012 மற்றும் 2013ல் நாம் நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடுகிறோம். நல்லவைகளைப் பார்க்க, நல்லவைகளைக் கேட்க, நல்லவைகள் நடக்கும் என்று நம்பி வாழ இந்த நம்பிக்கை ஆண்டு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நாம் எண்ணிப்பார்க்கும் எதிர்காலம், இறுதிக் காலம் ஆகியவற்றில் நமது நம்பிக்கை இன்னும் வளர வேண்டுமென்று இறைவனை வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.