2012-11-16 15:37:21

பாலஸ்தீன நாடு ஐ.நா.பொது அவையின் ஓர் உறுப்பினராக மாறுவதற்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தரவேண்டும் - கிறிஸ்தவத் தலைவர்கள் விண்ணப்பம்


நவ.16,2012. கிறிஸ்தவப் பாரம்பரிய வேர்களுடன் தொடர்புள்ள பாலஸ்தீன கிறிஸ்தவர்களாகிய நாங்கள், பாலஸ்தீன இஸ்லாமிய சகோதர, சகோதரிகளைப் போல எங்கள் குடியுரிமையையும், மனித உரிமைகளையும் இழந்து நிற்கிறோம் என்று புனித பூமியில் வாழும் பல கிறிஸ்தவத் தலைவர்கள் விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பாலஸ்தீன நாடு ஐ.நா.பொது அவையின் ஓர் உறுப்பினராக மாறுவதற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஆதரவு தரவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் எழுதப்பட்டுள்ள ஒரு மடலில், பாலஸ்தீன கிறிஸ்தவத் தலைவர்கள் 100 பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.
பாலஸ்தீனமும், புனித பூமியும் தங்கள் வேர்கள் என்று கூறும் கிறிஸ்தவத் தலைவர்கள், புனித பூமியின் வளர்ச்சியில் ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கிய பங்கு இருப்பதால், பாலஸ்தீன நாடு, ஐ.நா.அவையின் உறுப்பினராக மாறுவதற்கும் ஐரோப்பிய நாடுகள் உதவிகள் செய்வது முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்கள் பகுதிகளைத் தங்களுக்கு மீட்டுத் தந்தால், தாங்களும், இஸ்லாமியச் சமுதாயமும் ஒன்றிணைந்து வாழமுடியும் என்றும் இவ்விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.