2012-11-16 15:36:16

உலகின் துயரங்களுக்கு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புக்கள் மட்டுமே தீர்வாக முடியாது - பேராயர் Zimowski


நவ.16,2012. நலம் மற்றும் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, உரோம் நகரில் இவ்வியாழன், வெள்ளி, மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் நடைபெறும் 27வது அனைத்துலகக் கருத்தரங்கில், இயேசு தன் சீடர்களிடம் கூறிய "செல்லுங்கள், பறைசாற்றுங்கள், குணமாக்குங்கள்" என்ற வார்த்தைகளுடன் தன் துவக்க உரையை வழங்கினார்.
உலகின் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 65 நாடுகளிலிருந்து வந்திருக்கும் 650க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வரவேற்றுப் பேசிய பேராயர் Zimowski, கலாச்சாரமும், மதங்களும் சந்திக்கும் ஒரு முக்கிய தலமாக மருத்துவமனைகள் மாறிவருவதைத் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
உடல்நலம் குறைவதால் மனிதர்கள் அனுபவிக்கும் துயரங்கள் குறித்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரண்டாம் வத்திக்கான் சங்கத் தந்தையர்கள் தங்கள் கருத்தைக் கூறியுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Zimowski, உலகின் துயரங்களுக்கு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புக்கள் மட்டுமே தீர்வாக முடியாது, நம்பிக்கையுடன் கூடிய கண்ணோட்டமும் தேவை என்று எடுத்துரைத்தார்.
மேற்கத்திய நாடுகளில் மருத்துவப்பணி அதிகமான அளவு தொழில் மயமாக்கப்பட்டுள்ளது என்பதையும், மருத்துவச் செலவுகள் கூடிவருகிறது என்பதையும் எடுத்துரைத்த பேராயர் Zimowski, இத்தகையப் போக்குகள் சீரமைக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார்.
"மருத்துவமனை: நற்செய்தி அறிவிப்புப் பணியின் தளம்" என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கு இச்சனிக்கிழமை நிறைவுபெறும்.








All the contents on this site are copyrighted ©.