2012-11-16 15:36:30

Ozone மண்டலம் படைப்பனைத்திற்கும் தேவைப்படும் ஒரு கோடை - பேராயர் தொமாசி


நவ.16,2012. இயற்கையின் ஒரு முக்கிய அங்கமாக படைக்கப்பட்டுள்ள Ozone மண்டலம் படைப்பனைத்திற்கும் தேவைப்படும் ஒரு கோடை என்று கூறினார் வத்திக்கான் அதிகாரி பேராயர் சில்வானோ தொமாசி.
Ozone மண்டலத்தைக் காப்பாற்றும் நோக்கில், கனடாவின் Montreal நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கூட்டத்தின் 25ம் ஆண்டு நிறைவையொட்டி, ஜெனீவாவில் இவ்வியாழனன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ஜெனீவா ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் தொமாசி இவ்வாறு கூறினார்.
உலகம் இன்று சந்திக்கும் பொருளாதார, சமுதாய, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடபுடையவை என்று சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும் ஒரு முழுமையான கண்ணோட்டம் தேவை என்று கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற கருத்தை, கத்தோலிக்கத் திருஅவை ஒரு முக்கியக் கருத்தாகக் கொண்டு, கத்தோலிக்கப் பள்ளிகளில் இதனை ஒரு கட்டாயப் பாடமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பேராயர் எடுத்துரைத்தார்.இயற்கையை மதித்து நடத்துவதற்கு ஓர் அடிப்படையாக, மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை அடுத்த தலைமுறையினருக்கு வழங்குவது நமது முக்கிய கடமை என்பதையும் பேராயர் தொமாசி தன் உரையில் வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.