2012-11-14 15:53:13

ஆசிய ஆயர்கள் புனித பூமியில் மேற்கொண்ட திருப்பயணம்


நவ.14,2012. கிறிஸ்தவக் குடும்பம், அயலவருடன் ஒன்றிப்பு, இறைவார்த்தையின் பரிமாற்றம் என்ற பல ஆழமான அனுபவங்களைப் பெறுவதற்கு புனித பூமியில் மேற்கொண்ட பயணம் மிக உதவியாக இருந்தது என்று கட்டக்-புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா கூறினார்.
இம்மாதம் 6ம் தேதி முதல் இத்திங்கள் 12ம் தேதி முடிய 120 ஆசிய ஆயர்கள் புனித பூமியில் மேற்கொண்ட ஒரு திருப்பயணத்தின் இறுதியில், தாங்கள் பெற்ற அனுபவத்தைக் குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் பார்வா இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை அறிவித்துள்ள நம்பிக்கை ஆண்டின் ஓர் அங்கமாக, Neocatechumenal Way என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்திருப்பயணத்தில் இந்தியாவிலிருந்து 70 ஆயர்களும், ஏனைய ஆசிய நாடுகளிலிருந்து 50 ஆயர்களும், இன்னும் பல குருக்கள், துறவியர், பொதுநிலையினர் என பலரும் கலந்துகொண்டனர்.
புதிய நற்செய்திப் பணியை மையப்படுத்தி, வருகிற டிசம்பர் மாதம் வியட்நாமில் நடைபெறவிருக்கும் ஆசிய ஆயர்கள் கூட்டத்திற்கு ஒரு சிறந்த தயாரிப்பாக இத்திருப்பயணம் அமைந்தது என்று பேராயர் பார்வா மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.