2012-11-13 16:23:05

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 143


RealAudioMP3 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த ஆங்கில எழுத்தாளர் George Orwell. சமுதாயச் சிந்தனைகளைத் தன் எழுத்துக்கள் மூலம் வெளிக்கொணர்ந்த இவர், இந்தியாவில் பீகார் மாநிலத்தில் பிறந்தவர். இவர் எழுதிய 'மிருகப் பண்ணை' (Animal Farm), ‘1984’ என்ற இரு புகழ்பெற்ற நாவல்கள் உறுத்தலான பல உண்மைகளைச் சொன்னதால், பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தன. முதலாம், இரண்டாம் உலகப்போர்கள் நிகழ்ந்த காலத்தில் இவர் வாழ்ந்ததால், எதிர்காலத்தைப் பற்றி இவர் கொண்டிருந்த எண்ணங்கள் பெரும்பாலும் நம்பிக்கையற்ற, எதிர்மறை எண்ணங்களாகவே இருந்தன. ‘1984’ என்ற நூலில், எதிர்காலத்தைப் பற்றி Orwell எழுதியுள்ள புகழ்பெற்ற வார்த்தைகள் இன்றைய விவிலியத் தேடலை ஆரம்பித்து வைக்கின்றன.
"If you want a picture of the future, imagine a boot stamping on a human face, forever." (George Orwell)
"எதிர்காலத்தைப் பற்றிய ஒரு காட்சி உங்களுக்குத் தேவையென்றால், இதோ... 'பூட்ஸ்' அணிந்த கால் ஒன்று, ஒரு மனித முகத்தின் மேல் எப்போதும் மிதித்துக் கொண்டிருப்பதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்."
Orwell எதிர்காலத்தைப் பற்றி எழுதியுள்ள இந்த வார்த்தைகள் திருப்பாடல் 143ல் காணப்படும் வார்த்தைகளின் எதிரொலிபோல் ஒலிக்கின்றன. எதிரி என்னைத் துரத்தினான்; என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்.

அன்பர்களே! இன்று நாம் சிந்திப்பது திருப்பாடல் 143. இது திருப்பாடல் 142ன் தொடர்ச்சியே என்பதை எளிதில் உணரலாம். திருப்பாடல்கள் 142ம் 143ம் 'உதவிக்காக மன்றாடல்' என்ற தலைப்புடன் தொகுக்கப்பட்டுள்ள பாடல்கள். சென்ற வாரம் திருப்பாடல் 142ஐச் சிந்தித்தபோது, எதிரிகளின் வழியாக, சாவு தாவீதை சென்றவிடமெல்லாம் துரத்தியதென்று சிந்தித்தோம். திருப்பாடல் 143லும் எதிரிகளால் விளைந்த துன்பங்களைத் தாவீது பட்டியலிட்டுள்ளார். ஆனால், இம்முறை தாவீது எதிரி என்று குறிப்பிடுவது அவரது அன்பு மகன் அப்சலோம் என்று விவிலிய விரிவுரையாளர்கள் சொல்கின்றனர்.
எதிரி என்னைத் துரத்தினான்; என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்; என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல் என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.

இவ்விரு பாடல்களுக்கும் பொதுவான பல அம்சங்கள் இருந்தாலும், திருப்பாடல் 142ல் இல்லாத சிறப்பு அம்சங்கள் சில, 143ல் இருப்பதைக் காணமுடிகிறது. எப்பக்கமும் இடர்கள் சூழ்ந்திருந்தாலும், இறைவன் தன்னை நிச்சயம் காப்பார், எல்லா இடர்களிலிருந்தும் விடுவிப்பார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையை தாவீது வெளிப்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது. சாவின் வாயிலுக்கே சென்ற தன்னை இறைவன் காப்பாற்றினார் என்பதால், இப்போதுள்ள இடர்களிலிருந்தும் காப்பார் என்ற எண்ணம் வெளிப்பட்டிருப்பதும் இப்பாடலின் சிறப்பம்சமாக உள்ளது. இதோ இப்பாடலின் சில சொற்றொடர்கள்:
திருப்பாடல் 143: 1,3-6,8
ஆண்டவரே! என்மன்றாட்டைக் கேட்டருளும்; நீர் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பதால், உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.
எதிரி என்னைத் துரத்தினான்; என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்; என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல் என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.
எனவே, என்னுள்ளே என் மனம் ஒடுங்கிப் போயிற்று; என்உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.
பண்டைய நாள்களை நான் நினைத்துக் கொள்கின்றேன்; உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச் சிந்தனை செய்கின்றேன்; உம் கைவினைகளைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.
உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; வறண்ட நிலம் நீருக்காகத் தவிப்பது போல் என் உயிர் உமக்காகத் தவிக்கின்றது.
உமது பேரன்பை நான் வைகறையில் கண்டடையச் செய்யும்; ஏனெனில், உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்; ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

பண்டைய நாள்களை நான் நினைத்துக் கொள்கின்றேன்; உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச் சிந்தனை செய்கின்றேன். என்று தாவீது கூறும் வேளையில், தனது தனிப்பட்ட வாழ்வில் இறைவன் செய்த அற்புதங்களை மட்டுமல்ல, இஸ்ரயேல் மக்களின் விடுதலைப் பயணத்தையும் தன் நினைவில் அசைபோட்டிருக்கவேண்டும்.

தாவீதின் மனநிலைக்கு நேர்மாறாக, இஸ்ரயேல் மக்களோ இறைவனின் செயல்களை அற்புதங்களாக காண மறுத்ததை, அவற்றை அடிக்கடி மறந்ததை நாம் விடுதலைப் பயணத்தில் காண்கிறோம். பாரவோனின் அடிமைத்தனத்தில் சிக்கித்தவித்த இஸ்ரயேல் மக்களை இறைவன் அற்புதமாக எகிப்திலிருந்து தப்பவைத்தார். துரத்திவந்த பாரவோனின் படைகளிலிருந்து மீண்டும் அம்மக்களைக் காக்க, இறைவன் செங்கடலையே இரண்டாகப் பிளந்தார். இவற்றைக் கண்டு இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனைப் பாடிப் போற்றினர். ஆனால் பாலைவனத்திலே பசியால் வாடியபோது, ‘இப்பாலைவனத்திலே மடிந்துபோகவா எங்களை இங்குக் கூட்டிவந்தீர்’ என மோசேயிடம் முறையிட ஆரம்பிக்கின்றனர். வலிமைமிக்க பாரவோனின் பிடியிலிருந்து தங்களை மீட்ட இறைவனுக்கு தங்களது பசியைப் போக்குவது மிக எளிதான செயல் என்பதை அவர்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அம்மக்கள் நன்றி மறந்து, நம்பிக்கை இழந்து எழுப்பிய முறையீடுகளை இறைவன் பொருட்படுத்தாமல், அவர்கள் பசியை போக்க வழி செய்தார். இன்னும் சில நாட்களில், அவர்கள் மீண்டும் தாகத்தால் வாடியபோது, மீண்டும் முறையீடுகள் எழுந்தன... மீண்டும் இறைவன் அம்மக்களின் தாகம் தீர்க்க அற்புதங்கள் செய்தார்.

பழைய ஏற்பாட்டுக் காலத்திலிருந்த நம்பிக்கைக் குறைவு புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் தொடர்ந்தது. இறைவாக்கினர்களுக்குப் பதில் இறைமகன் இயேசுவே மண்ணகம் வந்தார். பல்வேறு அருளடையாளங்களையும் செய்தார். இருப்பினும், ‘இவர் தச்சன் மகனல்லவா? நம்மிடையே வாழும் மரியாவின் மகனல்லவா?’ என்றே சொன்னார்கள். ‘வானத்திலிருந்து எங்களுக்கு அறிகுறி காட்டும்’ என்றுதான் கேட்டார்கள்.
மக்களை விடுங்கள். மூன்று ஆண்டுகள் உடன்வாழ்ந்த சீடர்கள் நிலையும் இதேதான். நீரில் நடந்து வந்த இயேசுவை நம்பி தண்ணீரில் இறங்கிய பேதுரு, சீடர்களுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு. சூழ்ந்துவந்த அலைகளைக் கண்டு பயந்த பேதுரு, முன்னே இருந்த இயேசுவைக் காண மறந்தார்.
மத்தேயு 14 29-31
பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?”என்றார்.

தாவீது துன்பச்சூழல்களிலும், இடர்களிலும் சிக்கித்தவித்தார். ஆனால் எல்லா நேரங்களிலும் இறை உதவியைக் கேட்டார், பெற்றார். துன்பங்களைக் கண்டு தடுமாறாத மனிதர்கள் இல்லை. மலை போல் தன் முன் நிற்கும் துன்பங்களைக் கண்டு முதலில் தடுமாறினாலும், முற்காலத்தில் இறைவன் தன் வல்ல செயல்களால் தன்னைக் காப்பாற்றியத் தருணங்களை நினைத்துப் பார்த்தார். எனவேதான் இப்பாடலின் முதல் சொற்றொடரிலேயே யாவே மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்திப் பாடியிருக்கிறார் தாவீது.
ஆண்டவரே! என்மன்றாட்டைக் கேட்டருளும்; நீர் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பதால், உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.

காலங்கள் மாறுகின்றன; மனிதர்கள் மாறுகின்றனர்; ஆனால் துன்பங்கள் மாறுவதில்லை. தாவீதைப் போலவே, நாமும் துன்பங்களின் மத்தியில்தான் வாழ்கிறோம். ஆனால், தாவீதைப்போன்ற அசைக்கமுடியாத நம்பிக்கை நமக்குள்ளதா என்பதுதான் கேள்வி. “நான் என்ன பாவம் பண்ணேன்? எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது? கடவுள் என்னை மட்டும் ஏன்தான் இப்படி சோதிக்கிறாரோ” என்று பெரும்பாலான மனிதர்கள் புலம்புகிறார்கள். சிலர் இறைவனையே சபிக்கிறார்கள். வாழ்வென்ற கொடையை நம் ஒவ்வொருவருக்கும் அளித்து, நம் வாழ்நாட்களை நன்மைகளால் நிறைத்திருக்கும் இறைவன் நமக்கு அன்றாடம் வருகின்ற பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கமாட்டாரா? பிரச்சைனைகள், துயரங்கள் என்ற அலைகள் எழும்போது, பேதுருவைப் போல், அந்த அலைகளில் நம் கவனத்தைச் செலுத்திவிட்டு, அருகிலேயே ஆண்டவனும் இருக்கிறார் என்பதை மறந்துவிடுகிறோம்.

எப்போதோ வாசித்த ஓர் உவமைக் கதை இது. இப்போது நினைவுக்கு வருகிறது. மனிதன் ஒருவன் தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்கு சான்றாக பாதை முழுவதும் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு சில நேரங்களில் அந்தப் பாதையில் ஒரு ஜோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தில், போராட்டத்தில் கஷ்டப்பட்ட நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிடுகிறான். கடவுள் பொறுமையாக அம்மனிதனுக்குப பதில் சொன்னார்: "மகனே, பெரும் அலைகளாய் துன்பங்கள் வந்தபோது ஒரு ஜோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக் கொண்டு நடந்தேன்." என்றார் கடவுள்.

துயர நேரங்களில் நம்மை இறைவன் தூக்கிச் சுமப்பார் என்ற நம்பிக்கையுடன் நாம் வாழ்வுப் பயணத்தை மேற்கொள்ள தாவீதுடன் இணைந்து, உருக்கமாக வேண்டுவோம்.
உமது பேரன்பை நான் வைகறையில் கண்டடையச் செய்யும்; ஏனெனில், உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்; ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.








All the contents on this site are copyrighted ©.