2012-11-12 15:51:18

வாரம் ஓர் அலசல் – குழந்தைகள், நல் ஆசான்கள்


RealAudioMP3 நவ.12,2012. “இந்த உலகத்தில் உண்மையான அமைதி நிலவ வேண்டுமானால் அதைக் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும்” என்றார் மகாத்மா காந்திஜி. அமைதி மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ நற்பண்புகளைக் குழந்தைகளிடமிருந்துதான் கற்றறிய வேண்டியிருக்கிறது. எனவே வயது வந்தோரே, வாருங்கள், சிறாரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என்ற அழைப்புடன் இன்றைய நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறோம். முதலில், திருச்சி டவுன் ஹாலில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சாந்தினி பற்றி அவரது ஆசிரியர்கள் ஓர் இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து சிலவற்றைச் சொல்கிறோம்.

பள்ளியில் வகுப்புத் தொடங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கு வந்து முதல் வேலையாக அங்கிருக்கும் மரம், செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார். காலையில் நாம் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வருகிறோம். நம்மைப் போல தாவரங்களும் உயிரினம்தானே? அவைகளுக்கு சாப்பாடு போட வேண்டும்தானே என்று அக்கறையுடன் சொல்வார். வகுப்பறையைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக வைப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும். பள்ளி வளாகத்தில் குப்பை எங்கே தென்பட்டாலும் அதை எடுத்து குப்பைத்தொட்டியில் போடுவார். அத்துடன் பள்ளி வளாகத்தையும் ஒருமுறை சுற்றிவந்து கல், காகிதம், கம்பி, குப்பை எனத் தேவையற்ற பொருட்கள் எது கிடந்தாலும் அப்புறப்படுத்துவார். கஷ்டமான வேலையையும் முகம் சுளிக்காமல் புன்னகையுடன் செய்துமுடிப்பது இவருடைய தனிக்குணம். இவர் படிப்பிலும் கெட்டிக்காரி. யாருக்காவது பாடம் புரியவில்லை என்றால், அவர்களுக்குப் புரியும்விதத்தில் சொல்லிக்கொடுப்பார். எப்போதும் சக மாணவிகளோடு சேர்ந்து சாப்பாட்டைப் பகிர்ந்து சாப்பிடுவார். சிறார் செஞ்சிலுவை சங்கத்திலும் உறுப்பினராக இருக்கிறார். அதில் தான் தெரிந்துகொண்ட முதலுதவி முறைகளை மற்றவர்களுக்கும் செய்துகாட்டி பயிற்சி கொடுப்பார். மாணவிகளுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால், அங்கே தவறாமல் இருந்து உதவி செய்வாள். இதுமட்டுமா, பணிவாகவும் இனிமையாகவும் பேசிப் பழகுவது எப்படி என்பதை இந்த மாணவியிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். யாருடைய மனதையும் நோகடிக்காமல் நடந்து கொள்வார். கோபக்குணம் உள்ளவர்களையும் அவருடைய கனிவான பேச்சு மாற்றிவிடும். அதேமாதிரி சோகமான சூழலில் ஏதாவது சொல்லி எல்லாரையும் சிரிக்க வைத்து விடுவார்.

சாந்தினி பற்றிய தங்களது எண்ணங்களை இப்படிப் பகிர்ந்து கொண்ட அந்தப் பள்ளி ஆசிரியர்கள், “சாந்தினி, எங்கள் பள்ளியின் சொத்து” என்று பெருமையுடன் சொல்லியிருக்கிறார்கள். அடுத்து, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் தெருவிலுள்ள கோமதி அம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவர் ப்ரத்யங்கிரன் செய்துள்ள ஒரு பிறரன்புச் செயல் பற்றியும், நேயர்களே, உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

கோவை உருமாண்டாம் பாளையத்தை சேர்ந்த 70 வயது இரங்கம்மாள் என்ற மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை கேட்டு மனுச் செய்தபோது தனது குடும்ப அட்டையில் 50 வயது எனப் பதிந்திருப்பதால் 10 ஆண்டுகள் கழித்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதைக் கேட்டதும் அந்த இடத்திலே அந்த மூதாட்டி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். எனவே கடந்த செப்டம்பர் 18ம் தேதி தினகரன் தினத்தாள், ஓர் “உசுரு வாழ உதவ மாட்டீங்களா?” என்ற தலைப்பில் இந்த மூதாட்டி பற்றிய செய்தியைப் படத்துடன் வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியை வாசித்த ப்ரத்யங்கிரன் அந்த மூதாட்டிக்கு உதவியிருக்கிறார். எப்படியெனில் அவர் சேமித்து வைத்திருந்த 500 ரூபாயை, அதாவது அவரது அப்பா அவ்வப்போது கைச்செலவுக்குக் கொடுக்கும் பணத்திலிருந்து சேமித்த 500 ரூபாய்க்கு காசோலை எடுத்து அந்த மூதாட்டிக்கு வழங்குமாறு கோவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இரண்டாம் வகுப்பு மாணவர் ப்ரத்யங்கிரனின் இந்த மனிதநேயச் செயலைக் கேள்விப்படும் எவரும் அவரை மனதாரப் பாராட்டாமல் இருக்கமாட்டார்கள். நேயர்களே, பல ஆண்டுகளுக்கு முன்னர் உலகை 6 நிமிடங்கள் மௌனப்படுத்திய கானடா நாட்டு 12 வயதுச் சிறுமி பற்றி நமது வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகளில் கேட்டிருக்கிறோம். 1992ம் ஆண்டு ஜூன் 3 முதல் 14 வரை ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச்சூழல் குறித்து நடைபெற்ற அனைத்துலக பூமி உச்சி மாநாட்டில் சிறுமி Severn Cullis Suzuki ஆற்றிய உரைதான் உலகத் தலைவர்களை மௌனப்படுத்தியது. உயிரினங்களும் காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. சுவாசிக்கும் காற்று மாசடைந்துள்ளது. ஓசோன் வாயு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளை அடைக்க உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் அனைவரும் என்னுடைய வயதில் இந்தச் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை அனுபவித்தீர்களா?... என்று தொடர்ந்து கேள்விகளைத் தொடுத்து அங்கிருந்த உலகத் தலைவர்களை வியக்க வைத்தார் Suzuki.

அன்பு நேயர்களே, சிறார் நமது ஆசான்கள். நமது ஆசிரியர்கள். அவர்களிடமிருந்து வயது வந்தோர் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவு பாடங்கள் இருக்கின்றன. அண்மையில் ஒரு சிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பிரபல மனிதரின் மகள் சொன்னார் : “நான் எனது பையனிடமிருந்து நிறையப் பாடங்களைக் கற்றுக் கொள்கிறேன். இது சத்தியம். அவர் பேசுவார் நான் கேட்டுக் கொண்டிருப்பேன்” என்று. இப்படி எத்தனையோ தாய்மார்கள், “நான் எனது குழந்தையிடமிருந்து நிறையப் பாடங்களைக் கற்றுக் கொள்கிறேன்” எனச் சொல்வதைக் காதாரக் கேட்டு மகிழ்ந்த நேரங்கள் உண்டு. பிறரன்புக்கு, கருணைக்கு, கடமையுணர்வுக்கு, கள்ளம்கபடற்ற பேச்சுக்கு.... இப்படி எத்தனையோ பண்புகளுக்கு முன்மாதிரிகையாய் விளங்குகிறார்கள் குழந்தைகள். இவர்களின் மழலைச் சொல்கேட்டு துன்பம் மறந்த பெற்றோர், முதுமையின் தாக்கத்தை மறந்த தாத்தா பாட்டிகள் எவ்வளவு பேர்.

சீனாவில் 10 வயது சிறுவர் ஒருவர் கைகளைக் கால்களாக்கி தனது சக மாணவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருந்து வருகிறார். குறிப்பாக, வசதி இருந்தும் படிப்பில் ஆர்வமின்றி குறுக்கு வழியில் தேர்வுகளில் வெற்றிபெற முயற்சிக்கும் மாணவர்களுக்கு இந்த மாணவர் ஒரு முன்மாதிரிகை. சீனாவில் இபின் என்ற இடத்தை சேர்ந்த 10 வயது சிறுவர் யான் யாங், 4 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென வாத நோயால் தாக்கப்பட்டார். இதில் அவருடைய 2 கால்களும் செயல் இழந்து விட்டன. முற்றிலும் நடக்க முடியவில்லை. இதனால் யான் யாங் கைகளால் நடக்க கற்றுக் கொண்டார். தினமும் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கைகளால் நடந்து பள்ளிக்கு செல்கிறார். கால்களால் நடப்பது போலவே அவரால் கைகளால் வேகமாக நடக்க முடிகிறது. அவரது புத்தகப் பையை மட்டும் சக மாணவர்கள் எடுத்துச் செல்கின்றனர். இந்த மாணவரைப் பள்ளிக்கு வாகனத்தில் அனுப்ப அவரது குடும்பத்தில் வசதி இல்லை. தந்தையும் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். தாயின் உழைப்பில்தான் அந்த குடும்பமே வாழ்கிறது. இந்தச் சிறுவர் இரண்டு கைகளையும் தரையில் ஊன்றியபடி, கால்களை மேலேத் தூக்கிக் கொண்டு அவ்வளவு வேகமாக நடக்கிறார். இவர் நடப்பதை யு டியுப்பில் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. எப்படியும் படித்து முன்னேறி குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஆவல்தான் இந்தச் சீனச் சிறுவருக்கு கைகளைக் கால்களாக்கும் அளவுக்கு மனஉறுதியைக் கொடுத்துள்ளது.

குழந்தைகள் பற்றிய சில உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தாயின் வயிற்றில் கரு உண்டாகி நான்கே வாரங்களில், நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில், முதலில் நியூரோன்கள் என்ற மூளை உயிரணுக்கள் உருவாகின்றன. குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை எதனையுமே கற்றுக் கொள்வதற்குத் தயாராக அதாவது வெறுமையாக இருக்கிறது. அவர்கள் வளர வளர கண்களால் காணும் எதுவும், காதுகளால் கேட்கின்ற எதுவும், தொடுகையினால் உணரும் எதுவும், நாக்கினாலே ருசிக்கின்ற எதுவும் அவர்களது 'புதிய' மூளையில் பதிகின்றன. பெரியவர்களுக்கு சாதாரணமாகத் தோன்றும் நிகழ்வுகள் எல்லாம் குழந்தைகளுக்குப் புதியதாகக் கற்றுக் கொள்வதாக இருக்கும். இவை அவர்களது மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி கட்டிப்பிடித்து விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு ஆரம்பகால மனவளர்ச்சி இருக்கும்.

மேலும், பெற்றோர்கள் செய்வது ஒவ்வொன்றையும் குழந்தைகள் உன்னிப்பாகப் பார்க்கின்றன. குழந்தைகள் 12 முதல் 18 மாத வயதை அடையும்போது, கண்ணோக்கு, திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளின் மூளை, முதல் மூன்று ஆண்டுகளுக்கு வேகமாக வளர்கிறது. இந்தக் காலகட்டத்தில் பல கோடித் தொடுப்புகள் மூளைக்குள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்தத் தொடுப்புகளே எதிர்காலத்தில் அவர்கள் கற்கும் திறனையும், உணர்ச்சிகளையும், நடத்தையையும் நிர்ணயிக்கின்றன. குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும் அனுபவங்களையும் பொருத்து இருக்கும். எனவே பெற்றோர்கள் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.

செப்டம்பர் 8 இந்தியாவில் சிறுமிகள் தினம். அக்டோபர் 11 இலங்கையில் சிறுமிகள் தினம். நவம்பர் 14 இந்தியாவில் குழந்தைகள் தினம். பல வகைகளில் வயது வந்தோருக்குச் சிறந்த ஆசிரியர்களாக இருக்கும் குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை எடுப்பது காலத்தின் கட்டாயம். Oscar Wilde கேட்டார் : “குழந்தைகள் தங்களது பெற்றோரை அன்புசெய்வதிலிருந்து வாழ்வைத் தொடங்குகின்றனர். சிறிது காலம் கழித்து, தங்கள் பெற்றோரின் செயல்களைச் சீர்தூக்கிப் பார்த்துத் தீர்ப்புச் சொல்கின்றன. இப்படித் தங்களைக் குறைசொன்னக் குழந்தைகளைப் பெற்றோர் மன்னிப்பதற்குத் தயாரா?” என்று. வயதானவர்கள் சண்டையை ஏற்படுத்துவார்கள், ஆனால் சிறார்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்றார் RAY MERRITT. குழந்தைகளுக்கு விமர்சகர்கள் தேவையில்லை. ஆனால் எடுத்துக்காட்டுகள் தேவை. அன்பர்களே, நாம் நமது குழந்தைகளுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாக இருப்போம். சுய கவுரவம் பார்க்காமல் அவர்களிடமிருந்து நல்ல பாடங்களைக் கற்றுக் கொள்வோம்.








All the contents on this site are copyrighted ©.