2012-11-10 16:23:12

திருத்தந்தையுடன் Santa Cecilia என்ற திருவழிபாட்டு இசை இயக்கத்தினர் சந்திப்பு


நவ.10,2012. திருவழிபாட்டு இசையின் வழியாக விசுவாசத்தை மேம்படுத்தவும், புதிய நற்செய்தி அறிவிப்பில் ஒத்துழைப்பு வழங்கவும் இயலும் என்று இச்சனிக்கிழமையன்று Santa Cecilia என்ற திருவழிபாட்டு இசை இயக்கத்தின் அங்கத்தினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி கருத்தரங்கு ஒன்றை நடத்திய Santa Cecilia குழுவின் அங்கத்தினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவிப்பில் ஒன்றிணைந்த அர்ப்பணத்தை வலியுறுத்தும் நோக்கிலும், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரிலும் விசுவாசத்தை ஆழப்படுத்தும் நோக்கிலும் நம்பிக்கை ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
பாடல்கள் செவிகளை மட்டும் சென்றடைவதில்லை, அதன்வழி மனதையும், இதயத்தையும் ஊடுருவுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, புனித அகஸ்தின் அவர்களின் வார்த்தைகளைக் கொண்டு தன் கருத்தை விளக்கினார்.
திருஇசை என்பது திருவழிபாட்டின் ஒரு பகுதியாக அல்ல, மாறாக, திருவழிபாடாகவே மாறி, படைப்பு முழுமையும் இறைவனை மகிமைப்படுத்த உதவுகிறது எனவும் உரைத்தத் திருத்தந்தை, திருவழிபாட்டு இசைக்கும், புதிய நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும் இடையே இருக்கும் தொடர்புகளைய்ம் விளக்கினார்.








All the contents on this site are copyrighted ©.